For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் ரேசன்கடைக்கு மூடுவிழாவா? - கொந்தளிக்கும் டாக்டர் ராமதாஸ்

குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் அக்குடும்பத்திற்கு ரேஷன் பொருட்கள் ரத்து செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக ராமதாஸ் கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களை வகைப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்திலுள்ள அனைவரும் முன்னுரிமைப் பிரிவினர் என அறிவித்து அவர்களுக்கு பொதுவினியோகத் திட்ட சலுகைகள் தொடர்ந்து கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

TN govt planning to close all the ration shops, warns Dr Ramadoss

தமிழ்நாட்டில் பொது வினியோகத்திட்டத்தின்படி பயனடையும் மக்களை முன்னுரிமைப் பிரிவினர், முன்னுரிமை இல்லாத பிரிவினர் என இருவகைகளாக பிரிக்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதனால் மக்களுக்கு பாதிப்பு இல்லை என அரசு கூறினாலும் மோசமான ஆபத்துக்கள் காத்திருக்கின்றன.

தமிழ்நாட்டில் பொது வினியோகத் திட்டம் என்பது காலம் காலமாக அனைவருக்கும் பொதுவானத் திட்டமாக இருந்து வருகிறது. கடந்த காலங்களில் இதை சீர்குலைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பா.ம.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளாலும், பொதுமக்களாலும் முறியடிக்கப்பட்டிருக்கின்றன.

இப்போது தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளின்படி பொது வினியோகத் திட்டப் பயனாளிகளை முன்னுரிமைப் பிரிவினர், முன்னுரிமையில்லாத பிரிவினர் என வகைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருப்பதாகவும், அதன்படி தான் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, குடும்பத்தில் எவராவது வருமான வரி செலுத்தினாலோ, வீட்டில் குளிரூட்டி அல்லது மகிழுந்து வைத்திருந்தாலோ அவர்கள் முன்னுரிமையற்ற பிரிவினராக வகைப்படுத்தப்படுவார்கள். இதையெல்லாம் விட கொடுமை என்ன வென்றால் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் அக்குடும்பமும் முன்னுரிமையற்றதாக அறிவிக்கப்படும். அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், தொழில்வரி கட்டுபவர்கள், 5 ஏக்கருக்கும் கூடுதலாக நிலம் வைத்திருப்பவர்கள் ஆகியோரும் அதிக வருவாய் ஈட்டும் பிரிவினராக கருதப்பட்டு அவர்களும் முன்னுரிமையற்ற பிரிவினராகக் கருதப்படுவர்.

தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின்படி மத்திய அரசிடம் கணக்குக் காட்டப்படுவதற்காக மட்டும் தான் இந்த வகைப்படுத்தல் நடைபெறுவதாகவும், இதைப் பொருட்படுத்தாமல் பொதுவினியோகத் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் உணவு தானியம் வழங்கும் தற்போதைய நடை முறையே தொடரும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அரசின் இந்த உறுதி மொழியை தண்ணீரில் தான் எழுதி வைக்க வேண்டும். ஏனெனில், மத்திய அரசு அதன் உணவு மானியத்தை படிப்படியாக குறைத்து வருகிறது. அதேபோல், மாநிலங்களும் உணவு மானியத்தைக் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. தமிழக அரசின் நிதிநிலை நாளுக்கு நாள் மோசமாகி வரும் சூழலில் பொது வினியோகத்திட்டம் அனைவருக்கும் தொடரும் என அரசு கூறுவது வெற்று சமாதானமாகவே இருக்கும்.

பொது வினியோகத் திட்டத்தின்படி பயனடைய ஆண்டு வருமானம் ஒரு லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும், 5 ஏக்கருக்கும் கூடுதலாக நிலம் இருக்கக் கூடாது என்பன உள்ளிட்ட விதிகள் மிகவும் கடுமையானவை. பொருத்த மற்றவை. இந்த விதிகள் பின் பற்றப்பட்டால் தமிழகத்தில் தகுதியுடைய பலருக்கு பொது வினியோகத் திட்டத்தின் பயன்கள் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பிருக்கிறது.

பொது வினியோகத் திட்டத்தின் பலன்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்று தமிழக அரசின் சார்பில் கூறப்படுவதை ஏற்க முடியாது. அதனால் தான் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் தமிழகம் ஒருபோதும் சேரக்கூடாது என்று தமிழக அரசை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

மின்வாரியத்தின் கடன்களை அடைப்பதற்கான உதய் திட்டத்தில் சேர தமிழக அரசு திட்டமிட்டபோது, அத்திட்டத்தில் இணைந்தால் அடிக்கடி மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பதால் அதில் சேர வேண்டாம் என்று பா.ம.க. வலியுறுத்தியது. ஆனால், அதை மதிக்காமல் அத்திட்டத்தில் இணைந்த தமிழக அரசு, மின்கட்டணம் உயர்த்தப்படாது என்று உறுதியளித்தது. ஆனால், உதய் திட்ட விதிகளைக் காட்டி வரும் மார்ச் மாதத்தில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அறிவித்து அதற்கான நடவடிக்கைகளில் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் ஈடுபட்டிருக்கிறது.

எனவே, தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களை வகைப்படுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். தமிழகத்திலுள்ள அனைவரும் முன்னுரிமைப் பிரிவினர் என அறிவித்து அவர்களுக்கு பொதுவினியோகத் திட்ட சலுகைகள் தொடர்ந்து கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

English summary
PMK Founder Dr Ramadoss has warned that TN govt is planning to close all the ration shops gradually.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X