For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய 6 அம்சங்கள்.... த.வா. கூட்டமைப்பு வலியுறுத்தல்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் 7 தமிழர் விடுதலை, மீனவர் பிரச்சனை, கச்சத்தீவு விவகாரம் உள்ளிட்ட இடம்பெற வேண்டிய 6 அம்சங்களை தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சென்னையில் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகனை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட இக்கூட்டத்தில் 25 கட்சிகள்அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களான கொளத்தூர் தா.செ. மணி, தியாகு, மணியரசன், திருமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

TVK demands to all party on Manifesto

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1) ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருபத்தைந்து ஆண்டு காலமாகச் சிறையில் வாடி வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், செயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய எழுவரையும் தமிழக அரசே அரசமைப்புச் சட்ட உறுப்பு 161இன் படி தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனே விடுதலை செய்ய வேண்டும்.

கிட்டத்தட்ட இருபதாண்டு காலத்துக்கு மேல் ஆயுள் சிறைத் தண்டனை அனுபவித்தும் கூட இசுலாமியர்கள் என்பதற்காகவே எவ்விதத் தண்டனைக் குறைப்பும் தண்டனைக் கழிவும் வழங்கப் பெறாமல் தமிழகச் சிறைகளில் விடுதலை வாய்ப்பே இல்லாமல் அடைபட்டுக் கிடக்கும் இசுலாமிய சிறைக்கைதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும்.

குற்ற நடைமுறைச்சட்டத்தின் படியும் சிறை விதிகளின் படியுமான ஆயுள் சிறைக் கைதிகளின் முன்விடுதலைக்கான செயல்வழிகள் பல்வேறு காரணங்களால் நீண்ட பல்லாண்டுகளாக முடங்கிக் கிடக்கும் நிலையைக் கருத்தில் கொண்டு, சிறையில் பத்தாண்டு கழித்து முடித்த ஆயுள் சிறைக்கைதிகள் அனைவரையும் மாநில அரசு உடனே விடுதலை செய்ய வேண்டும்.

2)இலங்கைத் தமிழ் அகதிகளை நடைமுறையில் குற்றப் பரம்பரையாக நடத்துவதைக் கைவிட்டு, அவர்களின் மனித உரிமைகளுக்கும் கண்ணியத்துத்துக்கும் தக்க மதிப்பளித்து நடத்த வேண்டும்.

தமிழ்நாட்டு இலங்கைத் தமிழ் அகதி முகாம்கள் மீதான வருவாய்த் துறை, ‘கியூ' பிரிவுக் காவல்துறைக் கட்டுப்பாட்டை விலக்கிக் கொள்ள வேண்டும்.

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இடைக்கால இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்.

இந்திய அரசு திபெத் உள்ளிட்ட பிற நாட்டு அகதிகளோடு ஒப்புநோக்கின் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதைக் கைவிடுமாறு வலியுறுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து சிறை முகாம்களாக இயங்கி வரும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான சிறப்பு முகாம்களை மூடி, சிறப்பு முகாமில் இருப்பவர்கள் மீண்டும் தங்கள் குடும்பத்தினரோடும் உறவுகளோடும் வாழ வழிசெய்யா வேண்டும்.

ஒருசில தொண்டு நிறுவனங்களைத் தவிர வேறு எந்த அமைப்பும் முகாம்களுக்குள் சென்று இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு உதவக் கூடாது என்ற இப்போது நடைமுறையிலிருக்கும் தடையை நீக்க வேண்டும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள வாழ்வுரிமை, தன்னுரிமை, கருத்துரிமை, அமைப்பாகத் திரளும் உரிமை, கூட்டம் கூடும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் அனைத்தும் அகதிகளுக்கு உறுதி செய்ய வேண்டும்.

அகதி உரிமைகள் தொடர்பான பன்னாட்டு உடன்படிக்கைகளில் இந்திய அரசு ஒப்பமிடுமாறு மாநில அரசு வலியுறுத்த வேண்டும்.

கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் உரிய பங்கு கிடைக்கச் செய்யா வேண்டும்.

இலங்கையில் தமிழ்மக்களின் அவலங்கள் தொடர்ந்து வரும் நிலையில் அங்கிருந்து அடைக்கலம் தேடி வந்தவர்களையும் இப்போதும் வருவோரையும் திருப்பி அனுப்பாமல் ஏற்று ஆதரிக்க வேண்டும்.

3) தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படை நடத்தும் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்திப் பாதுகாப்பு வழங்க வேண்டும். தமிழக அரசே அதன் காவல் துறையின் ஒரு பகுதியாகத் தமிழக மீனவ இளைஞர்களைக் கொண்டு மீனவர் பாதுகாப்புப் படை அமைக்க வேண்டும்.

தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத் தீவை இலங்கையிடமிருந்து மீட்கும் வகையில் 1974ஆம் ஆண்டின் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நீக்கம் செய்யுமாறு இந்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

4) தமிழகத்தில் ‘கௌரவக் கொலைகள்' எனப்படும் சாதி ஆணவப் படுகொலைகள் அண்மைக் காலத்தில் பெருகி வருவதையும், இவற்றை வழக்கமான குற்றங்களாகக் கருதித் தடுப்பதிலும் தண்டிப்பதிலும் உள்ள இடர்ப்பாடுகளையும் கருத்தில் கொண்டு, சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிரான தனிச் சட்டம் இயற்றும் படி வலியுறுத்த வேண்டும்.

5) கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து தமிழ்நாடு அரசு, அரசுப் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் ஆங்கில பயிற்று மொழி வகுப்பு பிரிவுகளை தொடங்கி 10-ம் வகுப்பு வரை முழுமைப்படுத்த முனைந்துள்ளது. இதனால் தமிழ் மொழி பயிற்று மொழி என்ற நிலை நீங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி, தனியார் பள்ளி, நடுவண் மானிய திட்டம் அனைத்திலும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய மொழிப் பாடமாகவும் பயிற்று மொழிப் பாடமாகவும் செயல்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள நடுவணரசின் அலுவலகங்கள், நிறுவனங்கள் அனைத்திலும் தமிழ் மட்டுமே அலுவல் மொழியாக இருக்க வேண்டும்; அலுவலகங்கள் தங்களது அனைத்திந்திய தலைமை அலுவலகங்களுக்கு ஆங்கிலத்தில் அறிக்கை அனுப்பினால் போதும்,தமிழ் மட்டுமே தமிழ் நாட்டில் அலுவல் மொழியாக இருக்க வேண்டும்.

6) மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகியவற்றில் போட்டியிடும் வேட்பாளர்களில் 33% பெண்களுக்கு ஒதுக்க அனைத்துக் கட்சிகளும் முன்வர வேண்டும்

ஆகியவை இடம்பெற வேண்டும் என கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

மேலும்

1) சென்ற 23.02.2016ஆம் நாள் கும்மிடிப்பூண்டி முகாமில் இருக்கும் இலங்கைத் தமிழ் அகதி சுபேந்திரனைத் தாக்கிக் கால்களை உடைத்த சிப்காட் காவல்நிலைய ஆய்வாளர் டெல்லிபாபுவையும் பிற காவலர்களையும் கொலை முயற்சி வழக்கில் கைது செய்ய வேண்டும். சுபேந்திரனுக்கு உரிய இழப்பீடும் இலவச மருத்துவ சிகிச்சையும் வழங்க வேண்டும்.

2)சென்ற 07.03.2016ஆம் நாள் மதுரை திருமங்கலம் அருகே உச்சம்பட்டி முகாமில் இலங்கைத் தமிழ் அகதி ரவீந்திரனைத் தற்கொலைக்குத் தூண்டிய வருவாய்த் துறை அதிகாரி துரைபாண்டியனைக் கைது செய்து தற்கொலைக்குத் தூண்டியதாகக் குற்ற வழக்குத் தொடர வேண்டும்.

3)கோவை சிறையில் உள்ள சிறைவாசிகளை கடலூர் சிறைக்கு மாற்றம் செய்வதும் சென்னை சிறையில் உள்ள சிறைவாசிகளை வேலூர் சிறைக்கு மாற்றம் செய்வதும் பளையம்கொட்டை சிறையில் உள்ள சிறைவாசிகளை சேலம் சிறைக்கு மாற்றம் செய்வது என அவர்களை அலைகழிக்கும் நிலைக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.

இந்த விவகாரங்களில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

English summary
Tamizhar Vazhvurimai Kootamaippu asked to political parties add some demands in their Manifestos.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X