• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"தாங்க முடியாத சூடு, அழுக்கான ரயில் பெட்டி, சங்கடப்பட வைத்த கழிப்பறைகள்... போதுமடா சாமி!"

|

சென்னை: கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிரான போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமாரன் தனது டெல்லி பயணம் குறித்து பேஸ்புக்கில் சுற்றுப்பயணம் குறித்து எழுதியுள்ளார். தான் யாரையெல்லாம் சந்தித்தேன் என்பது குறித்து எழுதியுள்ள அவர் கடைசியில் தனது ரயில் பயணத்தின் கொடுமையையும் தனது பாணியில் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் டெல்லியில் முகாமிட்டு பல்வேறு தலைவர்களையும் உதயகுமாரன் குழுவினர் சந்தித்தனர். பல்வேறு அரசியசல் தலைவர்களையும், பிரமுகர்களையும் சந்தித்தனர்.

பிரதமரையும் இக்குழு சந்திக்கும் என்றும் பேச்சு அடிபட்டது. இருப்பினும் பிரதமரைத் தவிர பலரையும் இவர்கள் சந்தித்து விட்டு தமிழகம் திரும்பியுள்ளனர். தனது டெல்லி பயணம் குறித்து உதயகுமாரன் எழுதியுள்ள மடல்...

டெல்லி பயணம்

டெல்லி பயணம்

ஜூலை 4, 2014 அன்று மாலை 6 மணிக்கு மை.பா., பாஸ்கர், ஸ்டீபன் அமிர்தராஜ், ஜார்க்கண்ட் மாநிலப் போராளி தயாமணி பர்லா போன்ற தோழர்களும், நானும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் தோழர் அரவிந்த் கேஜ்ரிவாலை அவர் வீட்டில் சந்தித்துப் பேசினோம். உடன் மனீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், அஷுதோஷ் போன்றோரும் இருந்தனர். கூடங்குளம், இந்தியாவின் அணுசக்திக் கொள்கை, தமிழகம் தொடர்பானப் பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பேசினோம். அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொள்ளும் திருமதி. சுனிதா கேஜ்ரிவாலை அரவிந்த் அறிமுகம் செய்துவைத்தார்.

யோகேந்திர யாதவ் வீட்டில் டின்னர்

யோகேந்திர யாதவ் வீட்டில் டின்னர்

பின்னர் முனைவர் யோகேந்திர யாதவ் அழைப்பின் பேரில் அவர் வீட்டுக்குச் சென்று இரவு உணவு அருந்தினோம். நள்ளிரவு வரை மீண்டும் தமிழகப் பிரச்சினைகள், ஈழப் பிரச்சினை பற்றியெல்லாம் விவாதித்தோம். அஜித் ஜா போன்ற ஆ.ஆ.க. தோழர்கள் பலரை அங்கே சந்தித்தோம். யோகேந்திராவின் துணைவியார் மதுலிகா பானர்ஜி தில்லி பல்கலைக்கழக அரசியல் துறை பேராசிரியர். எனவே பேசுவதற்கு அதிகமாகவே விடயங்கள் இருந்தன.

பிரஷாந்த் பூஷனுடன் ஆலோசனை

பிரஷாந்த் பூஷனுடன் ஆலோசனை

ஜூலை 5, 2014 அன்று வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுடன் உளவுத்துறை கசியவிட்ட அறிக்கை, எனது சட்டபூர்வமான நடவடிக்கைகள் பற்றியெல்லாம் கலந்தாலோசித்தேன். ஆ.ஆ.க. நிகழ்வில் தமிழகத் தோழர்கள் அனைவரும் சந்தித்துப் பேசினோம். ஆ.ஆ.க. நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூடங்குளம் பிரச்சினை, இந்திய அணுசக்திக் கொள்கை பற்றிப் பேசினேன். போராடும் நம் மக்களுக்கு உதவக் கேட்டுக்கொண்டேன். பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த அவர்கள் உதவுவதாக உறுதி அளித்தனர்.

மேதா பட்கருடன் சந்திப்பு

மேதா பட்கருடன் சந்திப்பு

ஜூலை 6, 2014 அன்று மாலை மகாராஷ்டிரா, ஆந்திரா, பிகார், ஜார்கண்ட் போன்ற பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த மேதா பட்கர், தயாமணி பர்லா போன்ற பல போராளிகள் சந்தித்து மக்கள் போராட்டங்கள், இந்தியாவின் அரசியல் சூழல் குறித்தெல்லாம் பேசினோம். அதிகாலை 2:3௦ மணி வரை இந்த விவாதம் நடந்தது.

இடிந்தகரை பெண் போராளிகள்

இடிந்தகரை பெண் போராளிகள்

ஜூலை 7, 2014 அன்று காலை இடிந்தகரை பெண் போராளிகள் மில்ட்ரெட், மலர், அவிலா, இனிதா ஆகியோரும், தோழர் முகிலனும் தில்லி வந்து சேர்ந்தனர். அனைவருமாக தில்லி பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினோம். கூடங்குளத்தில் கூடுதல் உலைகள் கட்டக்கூடாது, முதலிரண்டு உலைகள் குறித்த முழு விசாரணை வேண்டும், இந்தியாவெங்கும் அணுசக்தித் திட்டங்கள் நிறுத்தப்பட்டு, மக்களுக்கு முழுத் தகவல்கள் கொடுக்கப்பட்டு, பரந்துபட்ட விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். பின்னர் போராட்ட நிலைமை குறித்து விவாதித்த நாங்கள், இந்தியா முழுவதுமுள்ள அரசியல் தலைவர்கள், சமூக இயக்கத் தலைவர்களை பாரபட்சமின்றி சந்தித்து இந்திய அணுசக்திக் கொள்கை பற்றியும், கூடங்குளம் போன்ற திட்டங்கள் பற்றியும் பேசுவது என்று தீர்மானித்தோம். அதன்படி அவசரம் அவசரமாக பல்வேறு தலைவர்களைத் தொடர்பு கொண்டோம்.

பொன் ராதாகிருஷ்ணனுடன் சந்திப்பு

பொன் ராதாகிருஷ்ணனுடன் சந்திப்பு

மாலை மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களை தமிழ்நாடு இல்லத்தில் சந்தித்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். எங்களுக்கு தன்னால் இயன்ற உதவிகள் அனைத்தும் செய்ய முன்வந்தார்.

கோவிந்தாச்சார்யாவுடன் சந்திப்பு

கோவிந்தாச்சார்யாவுடன் சந்திப்பு

ஜூலை 8, 2014 அன்று காலை சங்க பரிவாரத்துக்குள் சுதேசிக் கொள்கையை தூக்கிப்பிடிக்கும் திரு கோவிந்தாச்சார்யா மற்றும் வேறு இரண்டு பிரமுகர்களை முன்னவரின் வீட்டில் சந்தித்து நீண்டநேரம் பேசினோம். எங்களுக்கு காலை உணவும், ஏராளமான இனிப்புக்களும் தந்து எங்களை உபசரித்தார் திரு கோவிந்தாச்சார்யா. மாலை அமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் அவர்களின் உதவியுடன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகரை அலுவலகத்தில் சந்தித்து கூடங்குளம் திட்டம் பற்றி முறையிட்டோம்.

கனிமொழியுடன்

கனிமொழியுடன்

ஜூலை 9, 2014 அன்று காலை தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கனிமொழி அவர்களை அவரது வீட்டில் சந்தித்து எங்கள் கோரிக்கைகளை முன்வைத்தோம். தனது கட்சித் தலைமையுடன் பேசுவதாகச் சொன்னவர் எங்களுக்கு காலை உணவு தந்து உபசரித்தார். கூடங்குளம் அணுமின் நிலையம் பற்றிய அடிப்படைத் தகவல்களை மக்களுக்குத் தரவேண்டும் எனும் மத்திய தகவல் ஆணையத்தின் ஆணையை ஏற்க இந்திய அணுமின் கழகத்தைப் பணிக்குமாறு நான் தொடர்ந்த வழக்கு தில்லி உயர்நீதி மன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அங்கே போய் எங்கள் வழக்கறிஞர் வழ. பாரிவேந்தனை சந்தித்துப் பேசினோம்.

ஜிதேந்திரா சிங்கைப் பார்க்க முடியவில்லை

ஜிதேந்திரா சிங்கைப் பார்க்க முடியவில்லை

பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்த்ரா சிங் அவர்களை சந்திப்பது தொடர்பாக இரண்டு நாட்களாக குறுஞ்செய்தி மூலம் அவரோடு பேசிக் கொண்டிருந்தேன். இன்று மதியம் சந்திக்கலாம் என்று திட்டமிட்டிருந்தாலும், இறுதியில் முடியாமற் போயிற்று.

அன்புமணியையும் பார்க்க முடியவில்லை

அன்புமணியையும் பார்க்க முடியவில்லை

பா.ம.க. நாடாளுமன்ற உறுப்பினர் மரு. அன்புமணி ராமதாசையும், மத்திய இணை அமைச்சர் ஜெனரல் வி. கே. சிங்கையும் சந்திக்க யூலை 10 அன்றுதான் நேரம் கிடைத்தது. ஆனால் நாங்கள் அவசரமாக ஊர் திரும்ப வேண்டியிருந்ததால், சந்திக்க இயலவில்லை.

மைத்ரேயனோடு போனில் பேச்சு

மைத்ரேயனோடு போனில் பேச்சு

அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் மரு. மைத்ரேயன் உள்ளிட்ட பலரோடு தொலைபேசியில் பேசினாலும், அச்சந்திப்புக்களை உறுதிபடத் திட்டமிட முடியவில்லை.

சொந்தக் காசில் பயணம்

சொந்தக் காசில் பயணம்

மை.பா., பாஸ்கர், ஸ்டீபன் அமிர்தராஜ், முகிலன், நான் அனைவருமே எங்கள் சொந்தப் பணத்தில்தான் பெரும்பாலான செலவுகள் செய்தோம். பெண் போராளிகளுக்கு இடிந்தகரை ஊர் கமிட்டி செலவு செய்தது. தில்லியில் ஓரிரு நண்பர்கள் உதவினர்.

தாங்க முடியாது சூடு.. சங்கப்பட வைத்த கழிப்பறைகள்...

தாங்க முடியாது சூடு.. சங்கப்பட வைத்த கழிப்பறைகள்...

போகும்போதும், வரும்போதும் ரயிலில் இரண்டாம் வகுப்பு பயணம்தான். தாங்க முடியாத சூடும், ஓடாத மின்விசிறிகளும், அழுக்கான ரயில் பெட்டிகளும், சகிக்காத ரயில் உணவும், சங்கடப் படவைத்தக் கழிப்பறைகளும் - போதுமடா சாமி என்றாகிவிட்டது என்று கூறயுள்ளார் உதயகுமாரன்.

 
 
 
English summary
SP Udayakumaran has come out with an open letter on his team's recent Delhi visit.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X