• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரும் சட்டசபைத் தேர்தலில் மின்னணு எந்திரம் பயன்படுத்தினால் அதிமுக வெற்றி உறுதி: ஜிகே மணி

|

Using of EVM's in assembly election will lead to ADMK's victory: G.K.Mani
திருச்சி: தமிழக சட்டசபைத் தேர்தலில் மின்னணு எந்திர முறையே பின்பற்றப் பட்டால் அதிமுக நிச்சயம் வெற்றி பெற்று விடும். எனவே, ஜனநாயகப் படுகொலையைத் தவிர்க்க வாக்குச் சீட்டு முறையைப் பயன் படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி.

திருச்சியில் இன்று ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், மாநில தலைவர் ஜி.கே. மணி சிறப்புரை ஆற்றினார்.

அதற்கு முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் ஜி.கே.மணி. அப்போது அவர் கூறியதாவது:-

கையேந்தும் நிலை...

தமிழ்நாட்டில் நீர் பற்றாக்குறையால் விவசாயம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. காவிரி, முல்லை பெரியார் ஆற்று உரிமை தமிழகத்திற்கு மறுக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டின் கடை கோடி மாவட்டங்கள் கையேந்திநிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு நீதி...

1990-ல் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது 17 வருடங்கள் கழித்து 2007-ல் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. 6 வருடம் கழித்து கடந்த ஆண்டு அரசு இதழில் தீர்ப்பு வெளியிடப்பட்டது. அதன் பிறகும் நடைமுறைபடுத்தும் சூழ்நிலை உருவாகவில்லை. எனவே காவிரி பிரச்சனையில் காவிரி நடுவர் மேலான்மை வாரியம், கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். அமைத்தால் தான் தமிழகத்திற்கு ஓரளவிற்காவது நீதி கிடைக்கும்.

மழைநீர் சேமிப்பு திட்டம்...

தமிழ்நாட்டில் மழைக் காலங்களில் மழை நீர் சேகரிக்க பயன்படும் திட்டங்கள் செயல் படுத்தப்படாமல் உள்ளது. இனி வரும் காலங்களிலாவது மழை நீரை ஒரு சொட்டு கூட வீணாக்காமல் பெரியாறு, சிற்றாறுகளில் தடுப்பணைகள் கட்டி பாசனம் மற்றும் குடிநீர் பயன்பாட்டிகு பயன்படுத்த மாஸ்டர் பிளான் திட்டத்தை தயாரிக்க வேண்டும்.

தடுப்பணைகள்...

மேட்டூர் அணை கீழ் பகுதியில் 5 கி.மீ.க்கு ஒன்று என தடுப்பணைகள் கட்ட வேண்டும். அதனையொட்டி தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். இதன் மூலம் நிலத்தடி நீர் ஆதாரமும் பெருகும். மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்க இயலாத நிலையில் வறட்சி நிலவுகிறது. மின்வெட்டு நிலவுவதால் ஆழ் குழாய் கிணறு பாசனமும் செய்ய முடியவில்லை.

விவசாயக் கடன் தள்ளுபடி...

எனவே விவசாயிகள் பெற்ற கூட்டுறவு உள்ளிட்ட அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மீத்தேன் எரிவாயு எடுப்பதால் கடலோர மாவட்டங்களான திருவாரூர், தஞ்சை, நாகை பகுதிகளில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறுகிறது என மக்கள் கூறுகிறார்கள். எனவே இத்திட்டத்தை கைவிட வேண்டும்.

கல்விக் கட்டணக் கொள்ளை...

பள்ளி, கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தும் தடுக்க முடிய வில்லை. எல்.கே.ஜி., யூ.கே.ஜி படிப்பிற்கு கூட ஒரு லட்சம் வரை வசூல் செய்கிறார்கள். தற்போது பொறியியல் படிப்பிற்கான கவுன்சிலிங் நடக்கிறது. இந்த கவுன்சிலிங் நடைபெறும் போதே கல்வி கட்டண தொகையை அரசே பெற்று கல்லூரிகளுக்கு அனுப்ப வேண்டும். இதனால் அதிக கட்டணம் வசூலிப்பது தடுக்கப்படும். தனியார் கல்லூரிகள் இதற்கு முன்பு வசூலித்த பணத்தை திரும்ப செலுத்த வேண்டும்.

போக்குவரத்துக் கழகம்....

அரசு போக்குவரத்து கழகம் தனியார் மயமாக்கப்படும் என கூறப்படுவதால் 1.25 லட்சம் ஊழியர்கள் பயத்தில் உள்ளனர். தொழிலாளர் நலன் கருதி பொதுத் துறை நிறுவனமான போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்கக் கூடாது.

சதி...

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று மிகப் பெரிய சதி நடந்துள்ளது. ஓட்டு பதிவு எந்திரத்தில் மோசடி நடந்துள்ளது. இதற்கு இந்திய தேர்தல் ஆணையமும், தமிழக தேர்தல் அதிகாரிகளும் மற்ற அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர்.

வாக்குச் சீட்டு முறை...

எதிர்காலத்தில் ஜனநாயக தத்துவத்தை அடியோடு வேரறுக்கிற ஜனநாயக படு கொலைக்கு துணை போகும் மின்னணு வாக்கு பதிவு எந்திரத்தை வரும் தேர்தலில் பயன் படுத்தக் கூடாது. வாக்குச் சீட்டு முறையையே பயன்படுத்த வேண்டும்.

நிரூபணம்...

மின்னணு எந்திரத்தில் குளறுபடிகள் செய்யலாம் என்பதை அமெரிக்காவில் உள்ள மெக்சிகன் பல்கலைக் கழகம், ஹைதராபாத் என். ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலைக் கழக 2 பேராசிரியர்கள் என நிருபித்துள்ளனர்.

குளறுபடியே காரணம்...

தர்மபுரி தொகுதியில் 2.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டிய அன்புமணி ராமதாஸ் 70 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற மின்னணு வாக்கு பதிவு எந்திரத்தில் செய்த குளறுபடியே காரணம். மின்னணு எந்திர தேர்தல் ஓட்டுபதிவு குளறுபடியை கண்டித்தும், இதை நீக்க கோரியும் பா.ம.க. தலைவர் ராமதாஸ் போராட்டம் அறிவித்துள்ளர்.

மீண்டும் வெல்லும்...

20116 சட்ட மன்ற தேர்தலில் மின்னணு வாக்கு பதிவு எந்திரத்தை பயன்படுத்தி மீண்டும் தேர்தல் நடத்தினால் ஆளும் கட்சியான அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். வரும் தேர்தலில் பா.ம.க. தலைமையில் அணி அமைக்கப்படும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உடனிருந்தோர்:

இப்பேட்டியின் போது பா.ம.க. நிர்வாகிகள் உமாநாத், கண்ணதாசன், பிரின்ஸ், தாரா நல்லூர் ராசா, கதிர் ராசா, திலீப் குமார், தியாகு, கிள்ளி வளவன், தங்கராஜ், சுப்பிரமணி, சரவணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

 
 
 
English summary
The PMK leader G.K.Mani has said that if the EVM's were used in coming assembly election then definitely ADMK will win.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X