For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா.. மறக்க முடியாத வாலி!

கவிஞர் வாலியின் நினைவு தினம் இன்று.

Google Oneindia Tamil News

சென்னை: திரையுலகைப் பொறுத்தவரை மழை விழுந்தாலும், மாடு சிறுநீர் கழித்தாலும் எந்த மாற்றமும் அடையாத பாறைபோல, கிட்டத்தட்ட சுரணை இல்லாமல் இருக்கவும் பழகிக் கொள்ள வேண்டும். இல்லேன்னா இருக்க முடியாது" இது கவிஞர் வாலியின் வரிகள்.

காலம் நமக்கு வழங்கிய அற்புதக் கவிஞர் வாலி. 50 வருடங்கள் கடந்தும் மறக்க முடியாத, தூய தமிழ் வார்த்தைகள் மட்டுமல்லாது போஃக், ஹிப்-ஹாப் வார்த்தைகளை இட்டு நிரப்பி பாடல்களை வழங்கிய கவிஞர் வாலி.

"கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்" என்ற பாடலை கேட்டு மெய்மறந்த வாலி, ஸ்ரீரங்கத்திலிருந்து ஒரு தபால் அட்டையில் தன் சிலிர்ப்பினை எழுதி டிஎம்எஸ்-சுக்கு அனுப்பி வைக்க... பின்னர் அதன்மூலம் இருவருக்கும் பழக்கம் அதிகரிக்க.. கால சூழ்நிலையில் திரையுலகிற்கே வாலியை அறிமுகம் செய்து வைத்தார் டிஎம்எஸ். இன்னும் சொல்லப்போனால், ஊரெல்லாம் கண்ணதாசன் பாடல்கள் ஓங்கி ஒலித்து கொண்டிருந்த நேரத்தில்தான் வாலியின் வருகை நிகழ்ந்தது. "பூ வரையும் பூங்கொடியே பூமாலை போடவா' என்ற பாடல் இவருக்கு முகவரி கொடுத்தது.

 சவாலின் வெளிப்பாடு

சவாலின் வெளிப்பாடு

1963-ல் கே.ஆர்.விஜயாவை "கற்பகம்" படம் மூலம் அறிமுகம் செய்கிறார் படத்தின் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். ஆனால் கண்ணதாசன் அப்போது அரசியலில் படு பிசி. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரில் இருப்பார். அதனால் நேரமின்மை காரணத்தினால் வாலிக்கு வாய்ப்பு கிடைத்தது. படத்திற்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தியின் இசையில் வந்து ஐக்கியமானது வாலிக்கு கூடுதல் பெருமை.. சவாலின் வெளிப்பாடு... அதிர்ஷ்டத்தின் உச்சம்.. படத்தில் 4 பாடல்கள். நான்குமே சுசிலா பாடியது. ஒரு ஆண் குரலும் கிடையாது. இது திட்டமிட்ட காரணம் ஏதும் இல்லை. பி.சுசிலாவின் தேன்குரலில் பாடல்கள் தமிழகத்தையே ரீங்காரமிட்டது. 'அத்தைமடி மெத்தையடி' அனைரையும் நித்திரை கொள்ள வைத்தது. படம் சக்க போடு போட்டது. படக்குழுவினர் 100-வது நாள் விழா எடுக்கிறார்கள்.

 புன்னகையுடன் வந்த கண்ணதாசன்

புன்னகையுடன் வந்த கண்ணதாசன்

அந்தவிழாவுக்கு கண்ணதாசனை அழைக்கிறார்கள். தான் ஒரு பாடுலும் எழுதாத விழாவுக்கு அழைக்கிறார்களே, இன்னொருவர் எழுதியதை பாராட்ட கூப்பிடுகிறார்களே என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் சிரித்தபடியே மேடையில் ஏறி அமர்கிறார் கவியரசர் கண்ணதாசன். விழா தொடங்கியது. ஒருவர் பேச ஆரம்பிக்கிறார், "பந்தயம் நடைபெறும்போது பல ரேக்ளா ரேஸ்களில், ஒன்றுக்கும் ஆகாத சில உதவாத, சோப்ளாங்கி மாடுகள் அது இஷ்டத்துக்கு ஓடிவந்து முன்னால் வந்துநின்றுவிடும். அப்படித்தான், இந்த படத்திலும் பாட்டுக்கள் எப்படியோ பிரபலமாகிவிட்டது" என்றார். இதைக் கேட்டதும், அதிர்ச்சியிடைந்த கண்ணதாசன், உடனே பேச துவங்கினார் "நண்பர் பாடல்கள் குறித்து தவறாக பேசிவிட்டார். அந்த பாடல்களையெல்லாம் நானும்தான் கேட்டேன். குறிப்பாக அத்தையடி மெத்தையடி பாடலை இப்போதுகூட காரில் வரும்போது கேட்டு கொண்டுதான் வந்தேன். பாடலாசிரியர் நன்றாக எழுதியுள்ளார். ஒன்றுமேயில்லாமல் ஒரு பாட்டு இந்த அளவுக்கு ஹிட் ஆகிவிடாது. அதேபோல "பக்கத்துவீட்டு பருவமச்சான்" என்ற ஒரு பாடலில், 'பார்வையிலே வடம் புடிச்சான்' என்ற வரி வரும். இது சாதாரண வரிகிடையாது. ஒரு மிகச்சிறந்த கவிஞனால்தான் எழுத முடியும் என்றார். அவ்வளவுதான்... மேடையில் உட்கார்ந்திருந்த வாலிக்கு கண்கள் பனித்தன. முதல் பாராட்டு. முதல் அங்கீகாரம். கவியரசரிடமிருந்து கவிஞருக்கு கிடைத்த முதல் வரவேற்பு இது.

 மூன்றெழுத்தில் மூச்சிருக்கும்

மூன்றெழுத்தில் மூச்சிருக்கும்

பொதுவாக ஒருவர் பாட்டெழுதினால், அது தன்னையோ தன்னை மட்டும் சார்ந்தவர்களையோ பாதிக்கக்கூடாது. ஒரு இனத்தையே, அல்லது சமூகத்தையே தாக்க வேண்டும். அதைதான் வாலி செய்தார். அதற்கு ஒரு உதாரணம் இதோ: எம்ஜிஆரின் 'தெய்வத்தாய்' படத்துக்கு முழுவதுமாக பாட்டு எழுத ஆரம்பித்தார் வாலி. அதிலும் குறிப்பாக 'மூன்றெழுத்தில் மூச்சிருக்கும்' என்ற பாடல். இந்த பாடல் தமிழகத்தையே ஒரு பெரிய விவகாரத்திற்கு உள்ளாக்கிவிட்டது. காரணம் 'மூன்றெழுத்து' என்று எழுதிவிட்டார் வாலி. கடமை என்று அதற்கு பாட்டிலே பதிலும் சொல்லிவிட்டார். ஆனாலும் அந்த 'மூன்றெழுத்து' எதுவாக இருக்கும் என்று தமிழகமே மண்டையை போட்டு உடைத்துக் கொண்டது. ஒரு சிலர் 'கொள்கை' என்றனர். ஒரு சிலர், எம்ஜிஆர் திமுகவில் இருக்கிறார், அதனால் அது 'திமுக' என்றனர். ஒருசிலர் 'அண்ணா'வாக இருக்குமோ என்றனர். மேலும் சிலர் 'தமிழ்'தான் என்றனர். இல்லை, இல்லை... அது 'எம்ஜிஆர்'தான் என்றனர் மக்கள் திலகத்தின் தீவிர விசுவாசிகள்.

 வாலி நல்லா பாட்டு எழுதறானே!

வாலி நல்லா பாட்டு எழுதறானே!

கண்ணதாசனால்தான் தனக்கு வாழ்வு கிடைத்தது என்று வாலி பலமுறை சொல்லியிருக்கிறார். பல பாடல்கள் தன்னால் எழுத முடியாத நேரத்தில் எல்லாம் தன்னை தேடி வருபவர்களிடம் கண்ணதாசன் "வாலியிடம் போங்களேன்... நல்லா பாட்டு எழுதறானே" என்று அனுப்பி உள்ளார் என்றும், அதன் மூலம் தனக்கு நிறைய பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்ததாகவும் வாலியே நிறைய முறை சொல்லியிருக்கிறார். "எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன். ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான்' -கண்ணதாசன் இறந்தபோது வாலி எழுதிய கண்ணீர் வரி இது! ஒரு நிருபர் வாலியிடம், "கண்ணதாசன் 4 ஆயிரம் பாடல்தான் எழுதி இருக்கிறார். நீங்கள் 15 ஆயிரம் பாடல் எழுதி இருக்கிறீர்களே?" என்றார். அதற்கு வாலி, "கண்ணதாசன் 54 வயது வரைக்கும்தான் வாழ்ந்தார். எனக்கோ இப்போது 80. அவரும் இன்றுவரை உயிரோடு இருந்திருந்தால் 20 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் எழுதி இருப்பார். அவர் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் என்ற புத்தகம் வாழ்க்கை நெறிகளை விளக்கும் அருமையான, உண்மையான புத்தகம். எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் அந்த புத்தகத்தை கல்லூரியிலும், பல்கலைக்கழகத்திலும் பாட நூலாக்கி இருப்பேன்." என்று பதிலளித்தார் வாலி.

 கண்ணதாசனா- வாலியா?

கண்ணதாசனா- வாலியா?

"யார் சிரித்தால் என்ன, இங்கு யார் அழுதால் எனன்? "உறவு என்னொரு சொல்லிருந்தால் பிரிவு என்றொரு பொருளிருக்கும், காதல் என்றொரு என்றொரு கதையிருந்தால் கனவு என்றொரு முடிவிருக்கும்" என்ற பாடல், கண்ணதாசனின் இன்னொரு பாட்டுதான் என்றே மக்கள் நினைத்தார்கள். ஒருமுறை மனோரமா ஒரு பத்திரிகையில் இவ்வாறு எழுதினார், "கண் போன போக்கிலே என்ற பாடலை கவிஞர் கண்ணதாசன் அற்புதமான பாட்டை எழுதினார். இப்ப வர்ற சினிமாவிலே, இது மாதிரி யாரு கருத்தோட பாட்டு எழுதறாங்க?'' என்று ஒரு வினாவையும் எழுப்பியிருந்தார். பிறகுதான் மனோரமாவுக்கு தெரியவந்தது அது கண்ணதாசன் இல்லை, வரிகளுக்கு சொந்தக்காரர் வாலி என்று. இப்படி கண்ணதாசனா, வாலியா என வரிகளாலேயே குழப்பி ரசிகர்களை கிறங்கடித்தவர் வாலி. "நான் எழுதுகிற மாதிரியே எழுதக்கூடியவன் வாலி. இப்ப இந்த சிச்சுவேஷனுக்கு நான் எழுதியிருக்கிற மாதிரி அவன் வேறு ஏதாவது படத்திலே எழுதியிருக்கானான்னு சரி பார்த்துக் கொள்ளுங்கள்" என்று இயக்குனர்களிடம் கண்ணதாசன் சொல்வது உண்டு

குமரி பெண்ணின் உள்ளத்திலே

ஒரு மீனவனின் கண்ணீர், வேலை, ஆபத்து, மகிழ்ச்சி, துயரம், ஏமாற்றம் என அனைத்துமான அன்றாட வாழ்வியலை 'படகோட்டி' படம் மூலம் கண் முன் வரிகளால் இட்டுநிரப்பி காட்டினார் கவிஞர் வாலி. குறிப்பாக 'தரைமேல் பிறக்க வைத்தான்' என்ற பாடலின்மூலம் மீனவனின் உதிரம்தான் வெளிப்பட்டு நிற்கிறது. 'நானொரு குழந்தை நீயொரு குழந்தை' என்ற காதல் பாடுலும், கொடுத்ததெல்லாம் கொடுத்தான் என்ற பொதுவுடைமை கொள்கையை அடக்கிய பாடலும் உப்புக்காற்றின் வழியே லட்சக்கணக்கான மீனவ குடும்பங்களில் சுற்றி சுற்றி வந்தன. 65-ல் வெளிவந்த 'எங்கவீட்டு பிள்ளை' பட பாடல்கள் தமிழக மக்கள் தங்கள் வீட்டு பிள்ளையைக தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். 'குமரி பெண்ணின் உள்ளத்திலே' என்ற காதல் பாடலை வாலி எழுதியிருப்பார். இந்த பாடலை கேட்ட ஒரு பெண் தன் மனதையே பறிகொடுத்து, பாடலாசிரியர் வாலியை நேசிக்க ஆரம்பித்து, தன் காதலை வாலியிடமே வெளிப்படுத்தினார். அவர் பெயர் ரமணதிலகம். அந்த காதலை ஏற்ற வாலி, ரமணதிலகத்தையே திருமணமும் செய்து கொண்டார்.

 எம்ஜிஆரும்-வாலியும்

எம்ஜிஆரும்-வாலியும்

எம்ஜிஆருக்கு, முற்போக்கு கருத்துக்களை இழையவிட்டு வரிகளை அமைத்து கொடுத்தவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். உலக தத்துவங்களையும், காதல் ரசம் சொட்டும் வரிகளையும் உள்ளடக்கி அதனை தொடுத்து கொடுத்தவர் கண்ணதாசன். ஆனால், தமிழக மக்களின் குறைகளை, துயர்களை, களங்கங்களை, வறுமைகளை எல்லாவற்றையும் ஒழித்துகட்டிவிட்டு, அவர்களின் நலனுக்காகவும், சுபிட்சத்துக்காகவும், மறுவாழ்வுக்காகவும், மாற்றத்துக்காகவும் படைக்கப்பட்ட அரசியல் தலைவன் எம்ஜிஆர்தான் என்கிற நம்பிக்கையை தமிழக மக்களுக்கு ஊட்டி வளர்த்தில் முக்கிய பங்கு வாலிக்கே போய் சேரும். ஏன் என்ற கேள்வி, நான் ஆணையிட்டால் என்று எம்ஜிஆரின் மவுசு பாடல்கள் நீண்டு கொண்டே சென்றன.

வசீகரித்த வாலி

எம்ஜிஆர், சிவாஜி போன்ற சிங்கங்களையே தன் பாட்டினால் கரைய வைத்த வாலிக்கு அதற்கு பிறகு வந்த நடிகர்களை வசீகரிக்க தெரியாதா என்ன? ரஜினி-கமல் தொடங்கி, அஜீத், தனுஷ், வரை பாடல்கள் எழுதியும், விஸ்வநாதன் ராமமூர்த்தி முதல், அனிருத் வரை இசைப்பயணத்தை தொடர்ந்தார். வயது ஆக ஆக மனதளவில் இளமையாகி கொண்டே வந்தார் வாலி. "அபூர்வ சகோதரர்கள் படத்திற்கு பாடல் வரிகள் எழுதும்போது கமல், காதல் தோல்வியை மையப்படுத்தி ஒரு பாட்டு எழுதுங்கள் என்று வாலியிடம் சொல்லியிருக்கிறார். அவரும் சுமார் 5 பாடல்களை கமலுக்கு எழுதி கொடுத்துள்ளார். ஆனால் கமல் திருப்திபடவில்லை. பின்னர் இறுதியாக 6-வதாக ஒரு பாட்டை எழுதி கமலிடம் கொடுத்து, இதுக்கு மேல் என்னால் பாடல் எழுத முடியாது என்று சொல்லியுள்ளார். அந்தப்பாடல் தான் 'உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்' என்ற பாடல்... அந்தப்பாடல் தான் தேசிய விருது பெற்றது." அதேபோல, மன்னன்' படத்துக்காக வாலி எழுதிய, ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே...' பாடலின் வரிகள், தாய்மையின் மேன்மையை உணர்த்துகிறது என்று பாராட்டி, திருச்சியிலுள்ள ஐயப்பன் கோவிலில் அந்தப் பாடல் வரிகள் கல்வெட்டாக வைக்கப்பட்டுள்ளது வேறெந்த கவிஞருக்கும் கிடைக்காத மணிமகுடம்.

 விருதுகளை அலங்கரித்த வாலி

விருதுகளை அலங்கரித்த வாலி

15, 000-க்கு மேல் பாடல்களை எழுதி இருக்கிறார் வாலி. இது இல்லாமல் தனிப்பாடல்கள் வேறு. 17 திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார். அத்துடன் `பொய்க்கால் குதிரை, `சத்யா', `பாத்தாலே பரசவம்', `ஹே ராம்', என நான்கு படங்களில் நடித்தும் இருக்கிறார் வாலி!. இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை கவிஞர் வாலி எழுதி இருக்கிறார். அவற்றுள் ‘அவதார புருஷன்', ‘பாண்டவர் பூமி', ‘ராமானுஜ காவியம்', ‘கிருஷ்ண விஜயம்' ஆகியவை குறிப்பிடத்தக்கவை. வாலி பத்மஸ்ரீ விருது, 5 முறை சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை பெற்று இருக்கிறார்.

 வாலி என்னும் காலதேவன்

வாலி என்னும் காலதேவன்

வாலி - தமிழுக்கு கிடைத்த அமுதசுரபி - ஸ்ரீரங்கம் தந்த தமிழ்ச்சுரங்கம் - 50 வருடங்கள் கடந்தும் அந்த பாடல்களை எல்லாம் நம்மால் மறக்க முடியவில்லை என்றாலே அது கவிஞர் வாலிக்கு கிடைத்த அடையாளம்தான். அவரது திறமைக்கு கிடைத்த மணிமகுடம்தான். கண்ணதாசன் உச்சத்திலிருந்தாலும், ஒரு தனி சிம்மாசனம் அளித்து அதில் வாலியை உட்கார வைத்துக் கொண்டது தமிழ்சினிமா. இன்றுவரை அந்த சிம்மாசனத்தில் வாலியே நிரந்தரமாக ஆட்சி செய்தி கொண்டிருக்கிறார்.

English summary
Vaaliba Kavignar Vaali death anniversary today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X