For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் மீது அடக்குமுறையை ஏவுவதா? வைகோ கடும் கண்டனம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் மீதான அடக்குமுறைக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வைகோ வெளியிட்ட அறிக்கை:

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்துத்துவ சக்திகளின் கோர தாண்டவம் எல்லை மீறிக் கொண்டு இருக்கிறது. ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலா தற்கொலைக்குக் காரணமான பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி., டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திலும் வன்முறையைக் கட்டவிழ்த்து இருக்கின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்து இருந்த பண்பாட்டு நிகழ்ச்சிக்குப் பல்கலைக்கழக நிர்வாகம் முறைப்படி அனுமதி அளித்து இருந்தது. அதில், காஷ்மீர் பிரச்சினை குறித்த விவாதமும் இடம் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிகழ்ச்சிக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த பா.ஜ.க.வின் ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பு, நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்கில் இடப்பட்ட அப்சல் குருவின் நினைவுநாளையொட்டி அந்த நிகழ்ச்சி நடைபெறுவதாக விமர்சனம் செய்தது.

இடதுசாரிகள் தேசவிரோதிகளா?

இடதுசாரிகள் தேசவிரோதிகளா?

இடதுசாரி ஆதரவு மாணவர்கள் தேச விரோதிகள் என்றும், தீவிரவாதிகளோடு தொடர்புடையவர்கள் என்றும் துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்தவர்கள், கூட்டம் நடைபெறும் பகுதியில் மின்சாரத்தைத் துண்டித்ததுடன், அங்கே கூடி இருந்த மாணவர்களைத் தாக்கினர்.

தேசதுரோக வழக்கு

தேசதுரோக வழக்கு

பா.ஜ.க. எம்.பி. மகேஷ் கிரி, டெல்லி வசந்த்கஞ்ச் காவல்நிலையத்தில் அளித்த பொய்ப் புகாரின் அடிப்படையில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் கண்ணையகுமார் உட்பட ஐந்து பேர் மீது 124ஏ, 120பி ஆகிய பிரிவுகளின் கீழ் தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

டி. ராஜா மகள் மீது வழக்கு

டி. ராஜா மகள் மீது வழக்கு

இந்துத்துவ மதவாத ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பின் அட்டூழியத்தை எதிர்த்து ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் கொந்தளித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தக் களத்தில் முன்னின்ற, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் தோழர் டி.ராஜா அவர்களின் மகள் உட்பட 20 மாணவர்கள் மீது பொய் வழக்குகள் புனைந்துள்ளனர். 8 மாணவர்களைத் தற்காலிக இடைநீக்கம் செய்துள்ளனர்.

காவல்துறையின் அடக்குமுறை நடவடிக்கைகளை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி வன்மையாகக் கண்டனம் செய்ததுடன், ‘பொய் வழக்குகளைக் கைவிட வேண்டும்; கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். எனவே அந்த மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

சிபிஎம் அலுவலகம் மீது தாக்குதல்

சிபிஎம் அலுவலகம் மீது தாக்குதல்

இதனால் ஆத்திரம் அடைந்த இந்துத்துவ மதவெறிக் கும்பல், டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான ஏ.கே.கோபாலன் பவன் மீது நேற்று தாக்குதல் நடத்தி உள்ளனர். பா.ஜ.க. ஆதரவுடன் நடத்தப்பட்ட இத்தாக்குதல், அரசியல் சாசனம் வழங்கும் கருத்து உரிமைக்கு எதிரான தாக்குதல் மட்டும் அன்றி, இந்திய ஜனநாயகத்தின் மீது விழுந்த சம்மட்டி அடி ஆகும்.

மதவெறி சக்திகளின் வன்முறைகள் எல்லை மீறிக் கொண்டு இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியதாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு வைகோ கூறினார்.

English summary
MDMK leader Vaiko condemened the police attack on Delhi JNU Students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X