For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு: வைகோ, டாக்டர் ராமதாஸ், ஜி.ராமகிருஷ்ணன் வரவேற்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுத் தமிழக மக்கள் தைப்பொங்கல் விழாவை நடத்துவது போல் கொண்டாட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Vaiko, Dr.Ramadoss, G.Ramakrisnan welcome verdict on Mullaperiyar dam

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தின் முக்கிய வாழ்வாதாரங்களுள் ஒன்றான முல்லைப்பெரியாறு பிரச்சினையில், உச்சநீதிமன்றம் இன்று தந்த மகத்தான தீர்ப்பால், கேரளத்தின் அராஜகப் போக்குக்கு மரண அடி கொடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தின் உரிமையும், நீதியும் பறிபோகாமல் பாதுகாக்கப்பட்டு உள்ளது.

2006 ஆம் ஆண்டு, பிப்ரவரி 27 ஆம் நாள், உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு, நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தலாம் என்று தந்த தீர்ப்பைக் குப்பைத் தொட்டியில் வீசி விட்டு, நீர்மட்டத்தை உயர்த்த முடியாது என்றும், அணையை உடைப்பதற்கும் உரிமை உண்டு என்றும், கேரள அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானம், இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிராக விடப்பட்ட பகிரங்கமான சவால் ஆகும்.

கேரளத்தின் அராஜகப் போக்கைத் தடுக்கும் கடமையில், கேரள அதிகாரிகள் ஆட்டிப் படைத்து சோனியா காந்தி இயக்கிய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தவறியது; தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் இழைத்தது; இந்திய இறையாண்மைக்கும் கேடு செய்தது.

ஆனால் இன்று உச்சநீதிமன்றம், கேரளம் நிறைவேற்றிய சட்டத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்து இருப்பது, இந்திய இறையாண்மையைப் பாதுகாக்கும் நம்பிக்கையைத் தந்து உள்ளது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் 33 வாய்தாக்கள் இழுத்தடிக்கப்பட்டதற்குக் கலைஞர் கருணாநிதியின் தி.மு.க. அரசே காரணம் ஆகும். உச்சநீதிமன்றத்தில் மீண்டும் தமிழகத்திற்கு நீதியை நிலைநாட்டித் தீர்ப்பு வர இருந்த வேளையில், வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்றச் சொல்லிக் கேரள அரசு, சூழ்ச்சியாக முன்வைத்த கோரிக்கைக்கு கருணாநிதி அரசு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை; எழுத்து மூலமாக இசைவும் தந்தது. அதனால், தமிழ்நாட்டுக்குக் கிடைத்த நீதியை இழந்து விடுவோமோ என்ற கவலை ஏற்பட்டது.

கேரள அரசும், அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், பென்னி குயிக் கட்டிய முல்லைப்பெரியாறு அணையை உடைப்பதற்கு முழுமூச்சாக முயன்றன. அதைத் தடுக்க நாம் கடுமையாகப் போராடினோம்.

ஜெயப்பிரகாஷ் நாராயணன், இடிமுழக்கம் சேகர், சின்னமனூர் இராமமூர்த்தி ஆகிய மூவரும் முலலைப்பெரியாறைக் காக்கத் தங்கள் உயிர்களைப் பலியிட்டனர்.

கேரளத்தின் அநீதியைத் தடுக்க அனைத்துச் சாலைகளையும் மறித்து முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். தமிழகம் ஒட்டுமொத்தமாகக் கொந்தளித்தது. இன்றைய தீர்ப்பு மிகுந்த நிம்மதியைத் தந்து உள்ளது. கேரளத்தின் சதித்திட்டம் தகர்ந்தது.

இதற்குப் பின்னரும், கேரளத்தில் முழு அடைப்புக்கு ஏற்பாடு செய்வதும், சட்டமன்றத்தைக் கூட்டச் சொல்லி, அச்சுதானந்தன் சகுனியாக ஆலோசனை சொல்வதும் சகிக்கிக் கூடியது அல்ல.

இந்தப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தில் சரியான அணுகுமுறையைக் கையாண்ட தமிழக அரசு, உடனடியாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்குப் போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அந்த நடவடிக்கைக்குத் தமிழக மக்கள் ஒன்றுபட்டுத் தோள் கொடுப்போம். உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றுத் தமிழக மக்கள் தைப்பொங்கல் விழாவை நடத்துவது போல் கொண்டாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்

முல்லைப் பெரியாறு வழக்கின் தீர்ப்பு தமிழகத்தின் உரிமைகளை உறுதி செய்திருக்கிறது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

"முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்றும், இதற்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

சற்று தாமதமாக கிடைத்த நீதி என்றாலும், தமிழகத்தின் உரிமைகளை இத்தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது. மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள இத்தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்துவதற்கான தீர்ப்பு கடந்த 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே பெறப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு சட்டம் நிறைவேற்றி நமது உரிமையைப் பறித்தது.

இத்தகைய சூழலில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தென்மாவட்ட விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறது.

அணையின் நீர்மட்டம் தற்போது 111 அடியாக இருக்கும் நிலையில், தற்போது பெய்து வரும் மழையையும், கோடைக்காலத்தில் பெய்யும் மழையையும் பயன்படுத்தி அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில் இந்த தீர்ப்பைத் தொடர்ந்து இரு மாநில மக்களுக்கு இடையிலான உறவில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய தமிழக, கேரள அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு துணை நிற்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" இவ்வாறு ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஜி.ராமகிருஷ்ணன் வரவேற்பு

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

"முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்ட பிரச்சினை தமிழகத்தின் 10 தென் மாவட்டங்களின் வாழ்வாதரப் பிரச்சினை மட்டுமின்றி தமிழக மக்களின் நியாயமான உணர்வாகவும், கோரிக்கையாகவும் இருந்து வருகிறது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வரவேற்பதோடு, இத்தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறது". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
MDMK general secretary Vaiko, PMK founder Dr.Ramadoss and CPI (M) leader G.Ramakrishnan today welcomed the Supreme Court verdict Mullai Periyar Dam was safe. Tamil Nadu could raise the water level in the dam from 136 ft to 142 ft after carrying out certain repairs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X