For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செப்.17-ல் சென்னையில் விசிக சார்பில் நதிநீர் உரிமை பாதுகாப்பு மாநாடு - திருமாவளவன்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: செப்டம்பர் 17ஆம் நாள் சென்னையில் 'நதிநீர் உரிமை பாதுகாப்பு மாநாடு' விடுதலை சிறுத்தைகள் கட்சியால் கூட்டப்படுகிறது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நதிநீர்ச் சிக்கல் தமிழகத்தின் மிகப் பெரிய சவாலாக மாறி வருகிறது. தமிழகத்தில் விவசாயம் மற்றும் குடிநீர் ஆகியவற்றுக்கு நதி நீர் மிகப் பெரும் ஆதாரமாக உள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களின் விவசாயம் காவிரி, முல்லை பெரியாறு, பவானி மற்றும் பாலாறு ஆகியவற்றை நம்பியே உள்ளன. ஆனால், கடந்த பல பத்தாண்டுகளாக இந்த நதிகளின் நீர்வரத்து படிப்படியாகக் குறைந்து விவசாய உற்பத்தி பொய்த்து வருகிறது.

Vck conducted Water Rights Conference on september 17th

தமிழகத்தில் நிலத்தடி நீரின் அளவும் வெகுவாகக் குறைந்து வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீரை அளவுக்கதிகமாகவே நாம் பயன்படுத்திவிட்டோம். இந்நிலையில் மழைநீரை மட்டுமே நம்பி வாழ வேண்டிய நிலைக்குத் தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது.

விவசாயம், தொழிற்சாலை, கால்நடைகளுக்கான தேவை இவற்றைத் தாண்டி குடிநீருக்கே மிகப் பெரிய பற்றாக்குறை உருவாகியுள்ளது. வெகுவேகமாக நகர்மயமாகிவரும் தமிழகத்தில் தற்போது உள்ள மாநகராட்சிகளில் இரண்டில் மட்டும் குடிநீர் விநியோகம் நல்ல நிலையில் உள்ளதென்றும், அதுபோல 44 நகராட்சிகளில் மட்டுமே போதுமான அளவில் குடிநீர் வழங்கப்படுகிறது என்றும் தமிழக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்திலேயே உற்பத்தியாகும் நதிகள் இல்லாத நிலையில், பிற மாநிலங்களை நம்பித்தான் தமிழகம் இருக்க வேண்டியுள்ளது. தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட நியதிகளின் அடிப்படையில் தமிழகத்திற்குத் தேவையான நீரை அண்டை மாநிலங்கள் வழங்கித்தான் ஆக வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளும் அதை உறுதிப்படுத்தி யுள்ளன.

ஆனால் நியதிகளையும் தீர்ப்புகளையும் மதிக்காமல் தமிழகத்தின் நதிநீர் உரிமையை அண்டை மாநிலங்கள் மறுத்து வருகின்றன. ஆட்சிகள் மாறினாலும் தமிழகத்திற்கு எதிரான போக்குகள் மாறவில்லை. தமிழகத்தின் நீர் உரிமையை மறுக்கும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு நிற்கும்போது உரிமையைக் காக்க வேண்டிய தமிழகத்தின் அரசியல் கட்சிகளோ ஓரணியில் திரளாமல் இருக்கின்றன என்பது வேதனையளிக்கிறது.

இந்நிலையில், தமிழகம் பாலைவனமாக மாறாமல் தடுக்க வேண்டுமென்றால் நமது நதிநீர் உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டின் உயிர்நாடியான இந்தப் பிரச்சனையை முன்வைத்து செப்டம்பர் 17ஆம் நாள் சென்னையில் 'நதிநீர் உரிமை பாதுகாப்பு மாநாடு' விடுதலைச் சிறுத்தைகள் கட்சியால் கூட்டப்படுகிறது. இம்மாநாட்டில் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் நீரியல் வல்லுநர்களும் பங்கேற்க உள்ளனர்'' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

English summary
Vck conducted Water Rights Conference on september 17th, says Thirumavalavan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X