1 லட்சம் லஞ்சம் கேட்ட காட்பாடி சார் பதிவாளர்! பாகப்பிரிவினை பத்திரம் கேட்டால் ? மறக்க முடியாத பரிசு
சென்னை: வேலூர் மாவட்டத்தின் காட்பாடி பகுதியில் அமைந்துள்ள சார் பதிவாளர் அலுவலகம், கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு பரபரப்பான லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை களமானது பலருக்கும் நினைவிருக்கலாம்.. பரம்பரை சொத்து விவகாரத்தில் நியாயமாக கிடைக்க வேண்டிய ஒரு ஆவணத்தை விடுவிக்க, அரசு அதிகாரிகளே லஞ்சம் கேட்ட விவகாரம் தற்போது நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது..
கடந்த 2019-ல் நடந்த சம்பவம் இது.. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சசிகுமார் என்பவர், தனது பரம்பரை சொத்து தொடர்பான பாகப்பிரிவினை தீர்வு பத்திரத்தை முறையாகப் பெறுவதற்காக காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தை அணுகியுள்ளார்..

பாகப்பிரிவினை ஆவணம்
எந்தவொரு இடையூறுமின்றி கிடைக்க வேண்டிய அந்த சட்டப்பூர்வ ஆவணத்தை விடுவிக்க, அப்போதைய சார் பதிவாளர் தேவராஜ் என்பவர் 1 லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.. ஒரு எளிய மனிதனால் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு பெரும் தொகையை லஞ்சமாக கேட்டதோடு மட்டுமல்லாமல், அந்தப் பணத்தை ஆவண எழுத்தர் சந்திரமோகனிடம் ஒப்படைக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.. இது சசிகுமாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது..
காட்பாடி சார் பதிவாளர்
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சசிகுமார், துணிச்சலாக லஞ்ச ஒழிப்புத் துறையினரை அணுகி புகார் அளித்தார்.. லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வழிகாட்டுதலின்படி, பணத்தை தருவதாக சசிகுமார் ஒப்புக்கொண்டார்.. ரசாயனம் தடவப்பட்ட பணத்தை தேவராஜ் மற்றும் சந்திரமோகன் ஆகியோர் வாங்கிய அந்த நொடியே, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 பேரையுமே கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.. இந்தச் சம்பவம் அப்போது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது..
இந்த லஞ்ச ஊழல் தொடர்பான வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.. லஞ்ச ஒழிப்புத் துறையினர் சமர்ப்பித்த வலுவான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை ஆய்வு செய்த நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தது..
எழுத்தர் கேட்ட 1 லட்சம் லஞ்சம்
இதன் அடிப்படையில், முன்னாள் சார் பதிவாளர் தேவராஜ் மற்றும் ஆவண எழுத்தர் சந்திரமோகன் ஆகிய 2 பேருக்குமே இப்போது தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 25,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்து உள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட 2 அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறை தண்டனை, அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என தெரிகிறது..
சபாஷ் வேலூர் கோர்ட்
அரசுத் துறைகளில் இருக்கும் இத்தகைய லஞ்சப் புகார்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு பாடமாக அமைந்துள்ளது.. மக்கள் தங்களுக்குத் தேவையான சேவைகளை லஞ்சம் கொடுக்காமல் பெறுவதற்கான உரிமை உள்ளதை இச்சம்பவம் உணர்த்துகிறது.. முறையான கண்காணிப்பு, லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கை மற்றும் நீதிமன்றங்களின் கடுமையான தீர்ப்புகள் மட்டுமே அரசு அலுவலகங்களில் உள்ள ஊழலை ஒழிக்க முடியும்.. சசிகுமார் போன்ற சாமானியர்களின் விழிப்புணர்வும், துணிச்சலுமே லஞ்சமற்ற நிர்வாகத்தை உருவாக்குவதற்கான தொடக்கமாகும்..














Click it and Unblock the Notifications