வேண்டவே வேண்டாம்... ஸ்டெர்லைட்டை தடை செய்!... இந்தச் சிறுவனின் கதறல் கேட்கிறதா அரசுகளே?

தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலையே வேண்டாம் இதில் விரிவாக்கம் வேறா எங்களின் குரல் கேட்கிறதா என்று மத்திய, மாநில அரசுகளே என்று சிறுவன் அருண் தூத்துக்குடியில் எழுப்பிய குரல் அவர்களின் வேதனையை வெளிப்படுத்துவதாக இருந்தது. வாழ்வாதாரத்தை நசுக்கும் ஸ்டெர்லைட்டை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் அரசுகள் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று இந்தச் சிறுவன் போடும் முழக்கம் கேட்கிறதா அரசுகளே.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கந்தக டை ஆக்சைடால் சுற்றுச்சூழல், கடல்வாழ் உயிரினங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தூத்துக்குடியின் வளத்தையே அழித்து கருப்பு மண்டலமாக மாற்றி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கே மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் .
இந்நிலையில் ஆலையை 600 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கின. ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யப்படவிருக்கும் குமரெட்டியபுரம் பகுதி பொதுமக்கள் ஏற்கனவே இந்த ஆலையால் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர்.

48வது நாள் போராட்டம்
ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை விரிவாக்கம் செய்யப்படவிருப்பதை எதிர்த்து குமரெட்டியபுரம் மக்கள் 48து நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது பகுதியில் ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டால் இன்னும் கொடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்ற அச்சத்தில் தான், வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொள்ளும் நோக்குடன் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சரத்குமார் ஆதரவு
இதனிடையே ஸ்டெர்லைட்டை எதிர்த்து குமரெட்டிபுரத்தில் மரத்தடியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை இன்று பலரும் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, அந்தப் பகுதி குடிநீரையும் வாங்கி குடித்துப் பார்த்தார்.

கவனத்தை ஈர்த்த அருண்
இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் குமரெட்டிபுரத்தை சேர்ந்த சிறுவன் அருண் எழுப்பிய கோஷங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தங்களின் வாழ்வாதாரத்திற்காக குரல் கொடுக்கும் சிறுவன் அருணின் பேச்சைக் கேட்டு சரத்குமார் அவனை அழைத்து முத்தமிட்டு பாராட்டினார்.

அருணின் முழக்கம் கேட்கிறதா?
தடை செய் தடை செய் ஸ்டெர்லைட்டை தடை செய். அனுமதிக்க மாட்டோம் அனுமதிக்க மாட்டோம் ஸ்டெர்லைட்டை அனுமதிக்க மாட்டோம். மத்திய, மாநில அரசுகளே எங்களின் குரல் கேட்கிறதா என்று அருண் போட்ட முழக்கம் ஒவ்வொருவரின் மனசாட்சியையும் தட்டி எழுப்பும் கேள்வியாக இருந்தது.

அணியணியாக வந்து ஆதரவு
குமரெட்டிபுரத்தில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு அணியணியாய் வந்து சமூக நல ஆர்வலர்களும், இயற்கை ஆர்வலர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். திருநெல்வேலியைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் 20 வாகனங்களில் பேரணியாக வந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு சென்றனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!