
‘2 டீல்’.. அய்யாதுரைக்கு ‘ஓகே’ சொன்ன எடப்பாடி.. பின்னணியில் போட்ட மெகா கணக்கு.. இதுதான் கதையா?
தென்காசி : அய்யாதுரை பாண்டியன், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்ததற்குப் பின்னணியில் 2 முக்கியமான டீலிங் பேசப்பட்டிருப்பதாக அதிமுக வட்டாரத்தில் தகவல்கள் பரபரக்கின்றன.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகரும், பிரபல தொழிலதிபருமான அய்யாதுரை பாண்டியன் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் சமூகத்தைச் சேர்ந்தவரான அய்யாதுரை பாண்டியன் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று அதிமுகவில் இணைந்துள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது.
திமுகவில் இருந்து அமமுகவிற்கு சென்ற அய்யாதுரை பாண்டியனை பாஜக இழுக்க பிளான் போட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்ததற்குப் பின்னணியில் '2 விஷயங்கள்' இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஆக்ஷன் எடுத்தது நாங்க.. ஜாமீனில் எடுத்தது யார் தெரியுமா? 'கோடநாடு கேஸ்’ - 'U' டர்ன் போட்ட எடப்பாடி!

அய்யாதுரை பாண்டியன்
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அய்யாதுரை பாண்டியனுக்கு தென் மாவட்டங்களில் மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது. தென்காசி மாவட்டத்தில் ஏழை எளிய மாணவர்களின் கல்விச் செலவை ஏற்று உதவி செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் அய்யாதுரை பாண்டியன், திமுகவில் சீட் எதிர்பார்த்தார். ஆனால், அவருக்கு சீட் மறுக்கப்பட்டதால் திமுகவில் இருந்து வெளியேறி அமமுகவில் இணைந்தார். அவருக்கு அமமுகவில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

பாஜக எடுத்த முயற்சி
அமமுகவிலும் கட்சித் தலைமையுடன் ஏற்பட்டு வந்த அதிருப்தி காரணமாக கட்சியிலிருந்து வெளியேறி சமீபகாலமாக தனது தொழில்களை மட்டும் கவனித்து வந்தார். அய்யாதுரை பாண்டியனின் செல்வாக்கை அறிந்த பாஜக எப்படியாவது அவரை கட்சிக்குள் வளைத்துப் போட திட்டமிட்டது. இதற்காக நயினார் நாகேந்திரன் தீவிர முயற்சிகளை எடுத்துவந்தார். அய்யாதுரை பாண்டியன் அதிருப்தியில் இருப்பதை அறிந்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அவரோடு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்தனர். அவர் சில உத்தரவாதங்களைக் கேட்டதால் பேச்சுவார்த்தை இழுத்துக் கொண்டே சென்றுள்ளது.

சீனில் வந்த சுப்பையா
இதையடுத்து, அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான இசக்கி சுப்பையா நேரடியாகவே அய்யாதுரை பாண்டியன் உடனும், எடப்பாடி பழனிசாமியுடனும் பேசி இந்தப் பேச்சுவார்த்தையை முடித்து வைத்துள்ளார். இதையடுத்தே, அய்யாதுரை பாண்டியன், எடப்பாடி பழனிச்சாமியின் சேலம் வீட்டுக்கே அழைத்து வந்து, எடப்பாடி அதிமுகவில் இணைந்தாராம். அய்யாதுரை பாண்டியனை இழுக்க பாஜக தீவிரமாக முயன்ற நிலையில் 2 டீலுக்கு ஓகே சொல்லி கப்பென பிடித்துள்ளது அதிமுக.

2 டீல்
அதாவது, வரும் 2024 எம்.பி தேர்தலில் வேட்பாளராக தன்னை நிறுத்த வேண்டும் என அய்யாதுரை பாண்டியன் டீலை முன்வைத்தாராம். மேலும், கட்சியில் முக்கிய பொறுப்பையும் வழங்க வேண்டும், அப்போதுதான் தேர்தலுக்கு முன்பாக கட்சியிலும் தன்னை பலப்படுத்திக்கொள்ள முடியும் என்றும் கேட்டுக்கொண்டாராம். இதற்கு முதலில் யோசித்த ஈபிஎஸ் தரப்பு பின்னர் 2 டீல்களுக்குமே ஒப்புக்கொண்டுள்ளது.

ஈபிஎஸ் கணக்கு
தற்போது தென் மாவட்டங்களில் தங்கள் அணியை பலப்படுத்த வேண்டியது அவசியம் என ஈபிஎஸ் கருதுகிறார். அய்யாதுரை பாண்டியன் நம் பக்கம் வந்தால், செல்வாக்கு, பணம் என இரு வகைகளிலும் நம் பலம் பெருகும். ஓபிஎஸ் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் டீமுக்கும் செக் வைக்கலாம் என ஈபிஎஸ் தரப்பு கணக்குப் போட்டுள்ளது. இதையடுத்தே அய்யாதுரை பாண்டியனின் 2 டீல்களுக்கும் ஓகே சொல்லி அவரை கட்சியிக்குள் கப்பென இழுத்துப் போட்டுள்ளது ஈபிஎஸ்.

விரைவில் கூட்டம்
மேலும், தன்னுடன் 10,000 பேரை கட்சிக்கு அழைத்து வருவதாகவும் எடப்பாடி பழனிசாமியிடம் அய்யாதுரை பாண்டியன் உறுதி கொடுத்துள்ளாராம். அதற்கான பெயர் பட்டியலையும் ஈபிஎஸ்ஸிடம் அவர் கொடுத்துள்ளாராம். விரைவில் கடையநல்லூரில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தி தனது ஆதரவாளர்களை அதிமுகவில் இணைப்பதற்கான திட்டத்திலும் அய்யாதுரை பாண்டியன் இறங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.