ஜெ. இப்போது உயிரோடு திரும்பி வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? - சசி கணவர் நடராசன் பொளேர் பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா இப்போது உயிரோடு வந்தால்நான் இல்லாதபோது இப்படியெல்லாம் நடக்கிறதா என்கிற திகைப்பில் மயக்கமடைந்து விடுவார் என புதிய பார்வை பத்திரிகையின் ஆசிரியர் மா.நடராசன் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியுள்ளார்.

நியூஸ் 18 தமிழ்நாடு சேனலின் முதன்மை ஆசிரியர் மு. குணசேகரனுக்கு நடராசன் அளித்த பேட்டி:

கேள்வி: அதிமுகவில் பல குழப்பங்கள் சூழ்ந்திருக்கும் வேலையில் சந்திக்கிறோம். இந்த குழப்பங்களை நீங்கள் வெறும் பார்வையாளராகப் பார்க்கிறீர்களா? அல்லது பங்களிப்பாளராகப் பார்க்கிறீர்களா?

பதில்: நான் வெறும் பார்வையாளராகத்தான் பார்க்கிறேன்

கேள்வி: இந்த சர்ச்சைகளில் இருந்து விலகி நின்று வெறும் பார்வையாளனாகத்தான் பார்க்கிரீர்களா?

பதில்: ஆமாம். நான் வெறும் பார்வையாளனாகத்தான் பார்க்கிறேன். நான் பங்களிப்பாளனாக இருந்தாலும் அதற்காக நான் சன்மானம் கேட்டதில்லை. நான் இதை பங்களித்தேன் சன்மானம் வேண்டுமென்றோ, என் பங்களிப்பை பதிவு செய்ய வேண்டுமென்றோ கேட்காதவன். எனவே பங்காளிப்பான் என்ற முறையிலும் பேசலாம். பார்வையாளர் என்ற முறையிலும் பேசலாம்.

 உட்பகை அல்ல..

உட்பகை அல்ல..

கேள்வி: நீங்க பங்குதாரரா? பார்வையாளரா?

பதில்: நான் உங்களைப் போல் வெகுஜன பார்வையாளராக இருக்கிறேன். பங்களிப்பு தேவையென்ற இடத்தில் பங்களிப்பைக் கொடுப்பேன்.

கேள்வி: இப்போது நடக்கும் விஷயங்களை எப்படி பார்க்கிறீர்கள்? தமிழக மக்கள் இங்கு நடப்பதையெல்லாம் நாடகமாக இருக்குமோ என்று சந்தேகம் அடைகிறார்கள். இந்த ஆட்சி நிலைக்குமா? இதை பார்வையாளராக எப்படி பார்க்கிறீர்கள்.

பதில்: யார் கண் பட்டதோ, யாருக்கு இதனால் இடைஞ்சல் வரும் என்று நினைத்தார்களோ அவர்கள் சூத்திரதாரிகளாக செயல்பட விளைந்ததன் விளைவுதான் இது ஒழிய, உள்ளிருந்து வந்த பகை என்று நான் நினைக்கவில்லை.

 ஜெ. மறுபிறவி எடுத்தால்

ஜெ. மறுபிறவி எடுத்தால்

கேள்வி: இது அகப்பகை அல்ல,புறப்பகை என்று சொல்கிறீர்களா?

பதில்: அவர்களால் தூண்டிவிடப்பட்டு, வேற்றுமையை உருவாக்கி, ஒருவரையொருவர் சாடி பேசுவதும் ஜெயலலிதா இருந்த போது பேசாதவர்கள் எல்லாம் பேசுவதும் நடக்கிறது.ஒருவேளை மறுபிறவி என்று இருந்தால் ஜெயலலிதா உயிரோடு வந்தால் இவர்கள் எல்லாம் எங்கு ஓடி ஒளிவார்கள் என்றுதான் நான் ஆச்சர்யத்தோடு நினைத்துப் பார்க்கிறேன்.

கேள்வி: பேசாதவர்கள் எல்லாம் பேசுகிறார்கள் என்று சொல்வதை விட அடக்கி வைக்கபப்டிருந்தவர்கள் பேச்சு சுதந்திரம் கிடைத்து பேசுகிறார்கள் என பாஸிட்டிவாக பார்க்க முடியதா?

பதில்: அடக்கிவைக்கப்பட்டிருந்தார்கள் என்று சொல்ல முடியாது. ஜெயலலிதா உயிரோடு இருந்த போது நான் சொல்ல வேண்டிய விஷயங்களையெல்லாம் சொல்லியிருக்கிறேன்.

 மயக்கம் போட்டுவிடுவார்

மயக்கம் போட்டுவிடுவார்

கேள்வி: மறு பிறவி இருந்தால் என்று சொல்கிறீர்கள்... இருந்தால் என்ன நடக்கும்?

பதில்: ஜெயலலிதா ஒருவேளை உயிரோடு வந்து பார்த்தால்திகைத்துப் போய்விடுவார். நாம் இல்லாத நேரத்தில் இப்படி எல்லாம் நடக்குமா என்று ஆச்சர்யப்படுவார். ஒருவேளை அவருக்கு அதிர்ச்சியில் மயக்கம் வந்துவிடும்.

 அண்ணாவைப் போல மோடி

அண்ணாவைப் போல மோடி

கேள்வி: ஒரு கூட்டத்தில் அதிமுகவை பாஜக பிளவுபடுத்தப் பார்க்கிறது என்று கூறினீர்கள். தமிழ்நாட்டை காவிமயமாக்க அனுமதிக்க மாட்டோம் என கூறினீர்கள். ஆனால் அதிமுகவில் உங்கள் எண்ணம் ஈடேறவில்லையே?

பதில்: ஒருவேளை நான் அப்படி பேசியதே அதுமாதிரியான செயல்பாட்டுக்கு அவர்களைத் தூண்டியதோ என்னவோ. ஆனால் நான் பிரதமர் மோடியையோ முன்னணி பாஜக தலைவர்களையோ நான் எந்த விமர்சனமும் செய்யவில்லை. அதை புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள சிலர் சில சதிவேலைகளில் ஈடுபட்டு நம்மைத் தாக்குகிறார்களோ என்று என்னால் அப்போதே உணர முடிந்தது. அந்த வேகத்தில் வந்த வெளிப்பாடுகளாக அந்த வார்த்தைகள் இருக்கலாம். அதிமுகவை உடைக்கப்பார்க்கிறார்கள் என்று முன் கூட்டியே உணர ஆரம்பித்ததால் அதை பேசியிருக்கலாம். ஆனால் பாஜக தலைமைக்கு, மோடிக்கு எதிரான பேச்சு அல்ல அது.

அண்ணா சாமானியர்கள் எப்படி முதல்வராக முடியும் என்று நிரூபித்தாரோ அதுபோல மோடியும் ஒரு சாமானியராக இருந்து உயர்ந்த பதவிக்கு வந்ததால் அவர் மேல் எப்போதும் எனக்கு மிகுந்த மரியாதையும் பற்றும் உண்டு.

 ஜெ.வின் முதல் அறிக்கை

ஜெ.வின் முதல் அறிக்கை

கேள்வி: ஒ.பன்னீர் செல்வம் ஒரு அணி, எடப்பாடி பழனிச்சாமி ஒரு அணி, தினகரன் தலைமையில் ஒரு அணி, உங்கள் ஆசியுடன் திவாகரன் ஒரு அணி உள்ளுக்குள்ளேயே இயங்குவதாகச் சொல்கிறார்களே

பதில்: இல்லை...இல்லை... அப்படியெல்லாம் இல்லை. அவர்கள் நம் உதவியைக் கேட்டால் நாம் போய் அவர்களுக்கு உதவலாம். எம்ஜிஆர் இறந்தபோது ஜெயலலிதா கார் அனுப்பி என்னை அவர் வரழைத்துப் பேசினார். அவர் வெளியிட்ட முதல் அறிக்கையைக் கூட நான் தான் தயாரித்துக்கொடுத்தேன். அதெல்லாம் வரலாறு. எல்லாருக்கும் தெரியும்.

 2011 தேர்தல் அறிக்கையும் நானும்

2011 தேர்தல் அறிக்கையும் நானும்

கேள்வி: நீங்கள் தான் ஜெயலலிதாவுக்கு அதைச் செய்தேன்... இதைச் செய்தேன் என்கிறீர்கள். ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் அவர் உங்களை எங்குமே எண்டார்ஸ் செய்யவில்லையே

பதில்: ஒருவர் செய்கிற உதவியை ஏற்றுக்கொள்வதும் கொள்ளாததும் ஒரு தலைமையின் குணத்தையும் பக்குவத்தையும் பொறுத்தது. நான் எதையும் டிமாண்ட் செய்கிற ஆள் இல்லை. நான் எங்கும் கண்டிஷன் போட்டு வேலை செய்வது இல்லை. 20 வருஷம் அரசாங்கத்தில் டெபுடி டைரக்டராக இருந்த வேலையும் விட்டுவிட்டு வந்தவன். அவர் என்னை ரெககனைஸ் பண்ணவில்லை என நான் என் எதிர்ப்பையும் காட்டியது இல்லை.

2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கை கூட என் இடத்திலிருந்து தயாரிக்கப்பட்டது தான். என் வீட்டில் தயாரிக்கப்பட்டு, அதை மின்னஞ்சலில் அனுப்பினால் ஹேக் செய்துவிடுவார்கள் என்பதால் பன்னீர்செல்வம் ஐஏஎஸ் மற்ரும் பொன்ராஜிடம் கொடுத்து அனுப்பினேன். நான் என்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல் ஒதுங்கி இருந்தேன். அது என் சுபாவம். அந்த தேர்தல் அறிக்கையை வைத்து அமைச்சர்களுக்கு வகுப்பெடுப்பது போல் சொல்லிக்கொடுத்தார்கள். அதை யாராவது மறுக்க முடியுமா?

நான் கொடுத்த தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதாவும் ஏழைகளுக்கான சில திட்டங்களைச் சேர்க்கச் சொல்லியிருக்கிறார். உதாரணமாக பசுமை இல்லம், கறவை மாடுகள் போன்ற திட்டத்தை சேர்க்கச் சொல்லி இருக்கிறார்.

இவ்வாறு நடராசன் பேட்டியளித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
If Jayalalitha come alive she may fainted after seeing all these dramas said Natarajan, sasikala's husband in an Tv interview
Please Wait while comments are loading...