For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்கள் நலனைப் பாதுகாக்க ஒரு கட்சி கூட இல்லாமல் போய் விட்டதே தமிழகத்தில்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: அனைத்து பிரச்சனைகளிலும் அனைத்து அரசியல் கட்சிகளும் அறிக்கைகள் வெளியிடுகின்றன...ஆர்ப்பாட்டம் போராட்டம் என போர்ப்பாட்டு பாடுகின்றன... ஆனாலும் தமிழக உரிமைகள் காவு கொள்ளப்படுவதும் மக்கள் விரோத திட்டங்கள் திணிக்கப்படுவதும் தொடருகின்றன. இவற்றை தடுக்கவும் தட்டிக்கேட்கவும் திராணியற்றதாக திணறிக் கொண்டிருக்கிறது தமிழகம் என்பதுதான் பேரவலம்.

இந்திய தேசத்தின் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட போது இடஒதுக்கீடு கோரி தந்தை பெரியார் போராடினார். இந்த போராட்டத்தால் அரசியல் சாசனத்தில் முதலாவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. அந்த அளவுக்கு போராட்டத்தின் வீச்சு இருந்தது.

இந்தியை மத்திய அரசு திணித்தபோது தேக்குமர தேகங்களை தீநாக்குகள் தின்னக் கொடுத்து துப்பாக்கி குண்டுகளை மார்பிலே வாங்கி மாண்டுபோயினர் தமிழக இளைஞர்கள். இந்தியாவையே கிடுகிடுக்க வைத்த போராட்டத்தால் இந்தி திணிக்கப்படாது என உறுதி மொழி தந்தது மத்திய அரசு.

திராவிட நாடு

திராவிட நாடு

தனிநாடாக இருந்தவையெல்லாம் இந்தியாவின் மாநிலங்களாக இணைக்கப்பட்ட போதும் 1962 வரை அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என இந்தியாவையே மிரட்டிக் கொண்டிருந்தது தமிழகம், வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்கிற முழக்கங்கள் டெல்லியை அதிர வைத்தன. பிரிவினை கோரிக்கையை கைவிட்டாலும் அதற்கான காரணங்கள் உயிருடன் இருக்கின்றன என இந்திய நாடாளுமன்றத்திலேயே கர்ஜித்தார் பேரறிஞர் அண்ணா.

ஈழத் தமிழர் பிரச்சனை

ஈழத் தமிழர் பிரச்சனை

1980களில் ஈழத் தமிழர் இனப்படுகொலைக்கு எதிராக தமிழகமே கிளர்ந்தெழுந்தது. இதனால் தமிழீழ விடுதலை போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து ஆயுதப் பயிற்சி கொடுத்தது இந்தியா. தமிழக மண்ணில் விடுதலை போராளிகளுக்கான ஆயுத பயிற்சிகள் நடந்தன.

மண்டல் கமிஷன்

மண்டல் கமிஷன்

விபிசிங் ஆட்சிக் காலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மண்டல் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டன. இதற்கு எதிராக வட இந்தியா பற்றி எரிந்தது... ஆனால் சமூகநீதியின் தாயகமான தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்து சரித்திரம் படைத்தது வரலாறு.

பாபர் மசூதி

பாபர் மசூதி

1992-ல் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு மத ரீதியாக வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன. ஆனால் மதநல்லிணக்கத்தின் மாண்பை உணர்ந்த தமிழகத்தில் துளியும் அப்போது வன்முறை நிகழவில்லை. இப்படியெல்லாம் முன்னுதாரணமாக திகழ்ந்த தமிழகம்தான் அத்தனை உரிமைகளையும் பறிகொடுத்துவிட்டு அய்யோ காப்பாற்ற தலைவர் யாரேனும் வருவார்களா? எங்கிருந்து எந்த திசையில் இருந்து வருவார்கள்? என விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள்.

Recommended Video

    Tamilnadu Farmers Prayer in Tirchy Manaparai Temple-Oneindia Tamil
    இருப்புக்காக...

    இருப்புக்காக...

    தமிழகத்தில் இப்போது இருக்கிற கட்சிகள், பிரச்சனைகளுக்காக அறிக்கைகளை கொடுப்பதில் நான் நீ என போட்டிப் போட்டு முந்துகின்றன. போராட்ட அறிவிப்பை வெளியிடுவதில் முனைப்பு காட்டுகின்றன. இவையெல்லாம் தமிழக நலன்களை பாதுகாக்கக் கூடிய நடவடிக்கைகளுக்கானதாக இல்லை. தங்களுக்கான சுயவிளம்பரத்துக்காக தங்களது இருப்பை வெளிப்படுத்துவதற்கானதாக மட்டுமே இருக்கிறது.

    மெரினா புரட்சி

    மெரினா புரட்சி

    இதனால்தான் ஜல்லிக்கட்டு உரிமைக்காக அரசியல் கட்சிகளை ஓரம்கட்டிவிட்டு ஒட்டுமொத்த மாணவர், இளைஞர்கள் புரட்சியில் குதித்தனர். இப்படியான ஒரு புரட்சி இனியும் தமிழ் மண்ணில் தொடர்ந்துவிடக் கூடாது என்பதற்காக உரிமைகள் பற்றி பேசினால் குண்டாஸில் உள்ளே போடு என மேலேயிருந்து கட்டடளைகள் பறக்கின்றன. அதை இங்குள்ளவர்கள் தட்டாமல் ஏற்று செயல்படுகிறார்கள்.

    ஓரங்க நாடகங்கள்

    ஓரங்க நாடகங்கள்

    செயல்படவேண்டிய கட்சிகள் ஆள்பவர்களுடன் கரம் கோர்த்துக் கொண்டு மக்களை ஏமாற்றும் ஓரங்க நாடகங்களை நித்தம் நித்தம் நடத்துகின்றன. பெரியார், காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா எனும் ஆளுமைகள் உலா வந்த தமிழ் மண் இப்போது வெறுமையின் உச்சத்தில் இருக்கிறது. அதனால்தான் யார் யாரோ இந்த மண்ணை வேட்டைக்காடாக்கி தமிழக மக்களையும் வேட்டையாடுகிற பெரும் அவலம் அரங்கேறுகிறது.

    துணிச்சல் எப்படி?

    துணிச்சல் எப்படி?

    இல்லையெனில் கதிராமங்கலமும் நெடுவாசலும் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் காவிரி டெல்டாவில் பெட்ரோலிய கெமிக்கல் மண்டலம் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்படுகிற சம்பவம் நடந்திருக்குமா? நெடுவாசலில் மக்கள் போராடுகிறபோதே ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி அளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் துணிச்சல் மத்திய அரசுக்கு வந்திருக்குமா?

    ரட்சகன் யாரோ

    ரட்சகன் யாரோ

    பல்லாயிரக்கணக்கான ஏழை கிராமப்புற ஒடுக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவ படிப்பில் நீட் எனும் கொள்ளியை வைத்துவிட்டு குதூகலமாக வலம் வரும் துணிச்சல் இந்த அரசியல்வாதிகளுக்கு வருகிறது எனில் இங்கே தட்டிக்கேட்கும் தலைவனோ கட்சியோ ஒன்றுமே இல்லை என்பதுதான் யதார்த்தம். அதனால்தான் புதிய தலைவர் வரமாட்டாரா? புதிய அரசியல் கட்சி கிடைக்காதா? நம்மை காப்பாற்ற ஒரு ரட்சகன் வரமாட்டானா? என வெம்பி வெம்பி காத்துக்கிடக்கிறது தமிழகம்.

    இது பேரவலத்தின் பெரும் உச்சம்!

    English summary
    A quesiton raises who will fill the political vacuum which was created by the demise of Jayalalithaa and the retirement of the DMK president Karunanidhi in TamilNadu
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X