For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதலமைச்சர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை ஏன்? ராமதாஸ் கேள்வி

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற காரணமாக அமைவது தமிழகத்தில் இத்தனை ஆண்டுகாலம் ஆகியும் எய்ம்ஸ் போன்ற தரமான மருத்துவமனை இல்லாததே என பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் நிலையில், முதலமைச்சராக இருப்பவரும், இருந்தவர்களும் தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெறக் கூடாதா? என்ற விவாதம் பொது அரங்கில் எழுந்திருக்கிறது. பொதுநலன் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வினாவை அவ்வளவு எளிதில் ஒதுக்கிவிட முடியாது.

Why CM didn't take treatment at Govt.Hospital? - ramadoss

தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் முதலமைச்சர்களாக இருந்தவர்கள் அனைவரும் ஏதோ ஒரு கால கட்டத்தில் கடுமையான உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். ஆனால், அவர்களில் அறிஞர் அண்ணா தவிர வேறு எவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில்லை; தனியார் மருத்துவமனைகளில் தான் மருத்துவம் பெற்றுள்ளனர் என்பதை வைத்துப் பார்க்கும் போது, முதலமைச்சர்களாக இருப்பவர்களுக்கு மருத்துவம் அளிக்கும் அளவுக்கு அரசு மருத்துவமனைகள் தரமானவையாக இல்லை என்ற முடிவுக்குத் தான், யூகத்தின் அடிப்படையில், வரவேண்டியிருக்கிறது. ஒருவேளை இதுதான் உண்மை நிலை என்றால், அது மிக கவலைக்குரியதாகும்.

தில்லியில் உலகப் புகழ் பெற்ற தனியார் மருத்துவமனைகள் ஏராளமாக இருந்தாலும், பிரதமருக்கோ, மத்திய அமைச்சர்களுக்கோ உடல் நலம் பாதிக்கப்பட்டால் அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதில்லை. மாறாக, அரசுக்கு சொந்தமான எய்ம்ஸ் எனப்படும் இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்படுவர். 1984&ஆம் ஆண்டில் பாதுகாவலர்களால் சுடப்பட்ட பிரதமர் இந்திரா காந்தி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது, அவசரமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அண்மைக்கால உதாரணத்தை கூற வேண்டும் என்றால், கடந்த 2009ஆம் ஆண்டில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தான் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தான் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவம் பெற்றுக் கொள்வதற்கு காரணம் தனியார் மருத்துவமனைகளை விட அதிக வசதிகளை கொண்டிருப்பது தான். ஆனால், அத்தகையதொரு உலகத்தரம் கொண்ட மருத்துவமனை தமிழகத்தில் இன்று வரை உருவாக்கப்படவில்லை. இது 50 ஆண்டு கால திராவிட ஆட்சிகளின் தோல்வியாகும்.

உலகத்தரம் கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனையின் வயது 60 மட்டுமே. இந்தியா விடுதலையடைந்த பிறகு 1956-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை அடுத்த சில ஆண்டுகளிலேயே நாட்டின் தலைசிறந்த மருத்துவமனையாக உருவானது. மருத்துவர் அன்புமணி இராமதாசின் முயற்சியால் ஹரியானாவின் ஜாஜர் மாவட்டத்தில் எய்ம்சின் இரண்டாவது வளாகம் தொடங்கப்பட்ட பிறகு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்புகளுக்கான உலகின் மிகப்பெரிய கல்வி நிறுவனமாக எய்ம்ஸ் நிறுவனம் உயர்ந்திருக்கிறது.

புதுச்சேரியில் 1964-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜிப்மர் எனப்படும் ஜவகர்லால் நேரு பட்டமேற்படிப்பு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டதுடன், ரூ.1500 கோடி செலவில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பயனாக, 52 ஆண்டு வயதான ஜிப்மர் நாட்டின் மூன்றாவது தலைசிறந்த மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ நிறுவனமாக உருவாகியுள்ளது. மருத்துவ வசதிகள் மற்றும் தரமான சேவையில் தமிழகத்தில் உள்ள எந்த ஒரு தனியார் மருத்துவமனையும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை நெருங்கக்கூட முடியாது.

ஆனால், தமிழகத்தில் அத்தகையதொரு மருத்துவமனையை உருவாக்குவதற்கோ, மத்திய அரசை உருவாக்கச் செய்வதற்கோ தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. சென்னை மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த அரசு பொது மருத்துவமனை 352 ஆண்டு பாரம்பரியம் கொண்டதாகும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மருத்துவமனையாக தொடங்கப்பட்டு, மருத்துவப் பயிற்சிகள் அளிக்கப்பட்ட இந்த நிறுவனம் 1835 ஆம் ஆண்டில் மருத்துவக் கல்லூரியாக மாற்றப் பட்டது. அதன்பின் 181 ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும் இந்த மருத்துவமனையில் மருத்துவம் பெற முதலமைச்சர்கள் தயங்கும் நிலை தான் உள்ளது. சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் அமைக்கப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை ரூ.143 கோடியில் பல்துறை அதிஉயர் சிறப்பு மருத்துவமனையாக தமிழக அரசு மாற்றியது. மிகப்பெரிய வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனையும் தமிழக முதலமைச்சர் மருத்துவம் பெறும் அளவுக்கு வசதிகளுடன் இல்லை என்றே கூறப்படுகிறது.

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மத்திய சுகாதார அமைச்சராக இருந்தபோது மேற்கு மாவட்ட மக்களின் தேவைக்காக சேலத்தில் ரூ.139 கோடியில் அதிஉயர் சிறப்பு மருத்துவமனையை அமைத்துக் கொடுத்தார். மதுரையில் ரூ.150 கோடியில் எய்ம்சுக்கு இணையான மருத்துவமனை அமைக்க நிதி ஒதுக்கினார். அதைப்பயன்படுத்தி அந்த மருத்துவமனையை உலகத் தரம் கொண்டதாக அமைத்திருந்திருக்கலாம். ஆனால், முன்பிருந்த திமுக அரசும், இப்போதுள்ள அதிமுக அரசும் அவ்வாறு செய்யத் தவறி விட்டன. எல்லா மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கும் திட்டத்தின்படி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கும் திட்டம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட்டது.

தமிழகத்துடன் அறிவிக்கப்பட்ட மற்ற 4 மாநிலங்களில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுவிட்ட நிலையில், தமிழகத்தில் இடம் கூட இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இதற்காக தமிழகம் தேர்வு செய்து வழங்கிய 5 இடங்களையும் மத்திய அரசு நிராகரித்து விட்ட நிலையில் புதிய இடத்தை தேர்வு செய்து வழங்க தமிழக அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மருத்துவத்துறை வளர்ச்சியில் தமிழக அரசின் அக்கறை என்ன? என்பதற்கு இதுதான் உதாரணமாகும்.

கடந்த காலங்களில் நடந்தவை எப்படி இருந்தாலும், இனி வரும் காலங்களில் அடித்தட்டு மக்கள் முதல் முதலமைச்சர் வரை அனைத்துத் தரப்பினரும் மருத்துவம் பெறும் வகையில் உலகத்தரம் மிக்க மருத்துவமனைகளை சென்னையிலும், மதுரையிலும் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனைக்கு புதிய இடத்தை தேர்வு செய்து தந்து, அடுத்த இரு ஆண்டுகளில் அம்மருத்துவமனை தொடங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

English summary
Why CM didn't take treatment at Govt.Hospital? - pmk founder ramadoss
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X