For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏன் சசிகலா?

By Shankar
Google Oneindia Tamil News

- டான் அசோக்

திருமதி.வி.கே.சசிகலா அதிமுகவின் தலைமை பொறுப்புக்கு வரலாமா கூடாதா, அவருக்கு தகுதியுண்டா, அவர் பொறுத்தமானவரா போன்ற கேள்விகள், குழப்பங்கள், வெறுப்புகள், வதந்திகள், சந்தேகங்கள் எல்லாம் ஒருபுறமிருக்க, தெரிந்தோ தெரியாமலோ சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிவிட்டார். அடுத்த நான்காண்டுகளுக்கு அவர் கையில்தான் தமிழகம். அதுமட்டுமல்லாது ஐம்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர் வசம். இச்சூழலில் நாம் சசிகலா மீதான பொதுவான மற்றும் நம்மீது திணிக்கப்படும் முன்முடிவுகளை ஒத்திவைத்துவிட்டு அவரையும், அதிமுகவையும் கொஞ்சம் பொறுமையாக அணுக வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.

சசிகலா யார்? இந்தக் கேள்விக்கு எளிமையான பதிலை ஜெயலலிதாவே பலமுறை பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். உடன்பிறவா சகோதரி என்றும், தன்னை தாய் போல பாதுகாத்துக் கொண்டவர் என்றும், தனக்காக பல துன்பங்களை பொறுத்துக் கொண்டவர் என்றும்! நேற்றைய சசிகலாவின் அறிக்கையில் அவரும் இதையேதான் உறுதி செய்கிறார். பிறகு ஏன் இடையில் சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் ஜெ நீக்கினார் என்ற கேள்வியும், அப்படி நீக்கப்பட்ட சசிகலா பொதுச்செயலாளர் ஆகலாமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இதற்கான பதில் எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா இடையிலான அரசியல் உறவிலேயே இருக்கிறது. ஜெயலலிதாவை நீக்கி வைத்து எம்.ஜி.ஆர் பிறப்பித்த ஆணை எம்.ஜி.ஆர் உயிரோடிருக்கும் போதே நமது எம்.ஜி.ஆரில் வெளியாகியிருக்கிறது. பின்னர் எம்.ஜி.ஆர் மீண்டும் ஜெவை இணைத்துக் கொண்டதையும், அதிமுகவே ஜெவின் வசம் சென்றதையும் யாருமே கேள்விக்குள்ளாக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Why Sasikala needs for ADMK?

ஆக, சசிகலாவை ஜெயலலிதா நீக்கியிருக்கிறார் என்பதெல்லாம் அதிமுக உட்கட்சி அரசியலைப் பொறுத்தவரை மிகவும் சாதாரணம். அதுமட்டுமல்லாமல் ஜெயலலிதா நீக்கிச் சேர்க்காத அமைச்சர்களை ஒரு கை விரல்களால் எண்ணி விடலாம்.
ஜெயலலிதாவை இரும்பு மனுஷி என்றும், நிர்வாகப் புலி என்றும் மக்களிடையே நிலைநிறுத்தியதில் ஊடகங்களின் பங்கு அளப்பெரியது. சாதனைகளின் புள்ளி விவரங்கள் சார்ந்து இந்தப் பட்டங்கள் சூட்டப்படவில்லை என்பதும், யாரையும் எப்போது வேண்டுமானாலும் நீக்கும் தன்மை, நினைத்ததை பின்விளைவுகளைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் செய்து முடிக்கும் அசாத்தியத் துணிச்சல் என ஜெயலலிதாவுக்கே உரிய குணங்களைச் சார்ந்தே இப்பட்டங்கள் அவருக்கு வழங்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

திமுகவின் மாவட்ட செயலாளர்கள் குறுநில மன்னர்கள் போல செயல்படுகிறார்கள் எனப் புகார்கள் எழுந்தபோதெல்லாம் பொதுமக்கள் ஜெயலலிதா கட்சி நடத்தும் முறையை சிலாகித்ததற்கும், 2011ல் ஜெயலலிதாவை மக்கள் தேர்ந்தெடுத்ததற்கும் கட்சியினர் மீது ஜெயலலிதா பாரபட்சமின்றி காட்டிய கடுமை ஒரு முக்கியக் காரணம். திமுகவின் உட்கட்சி அரசியலில் இருந்து முற்றிலும் மாறுபட்டுத் தோன்றிய ஜெயலலிதாவின் இந்த சர்வாதிகாரத்தை ஒரு தரப்பு மக்கள் மனதார ரசித்தார்கள்.
இப்படி ஜெயலலிதா ஒரு நிர்வாகப் புலியாக, இரும்பு மனுஷியாக போற்றப்பட்டதை எல்லாம் நாம் நினைவு கூறும்போது, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் திடீரென சில ஊடகங்கள் சசிகலாதான் ஜெயலலிதாவின் அவப் பெயர்களுக்கெல்லாம் காரணம் என்றும், ஜெயலலிதா மீதான எல்லா எதிர்மறை விமர்சனங்களுக்கும் மூலகாரணம் சசிகலாதான் என்றும் எழுதிவருவது நமக்கு வியப்பையே தருகிறது.

ஜெயலலிதா நிர்வாகப் புலி என்றால் அந்த நிர்வாகப் புலிக்கு தன் கூடவே இருந்து தவறு செய்துவந்த சசிகலா கண்ணில் படவில்லையா? இரும்பு மனுஷி ஏன் சசிகலாவிடம் மட்டும் பஞ்சு போன்ற மென்மையைக் கடைபிடித்தார்?

ஆக, ஒன்று நிர்வாகப் புலி என்று சொல்லவேண்டும். அல்லது சசிகலா விஷயத்தில் தோல்வியுற்றவர் எனச் சொல்லவேண்டும். அதைவிடுத்து இரண்டையும் சொன்னால் எப்படி? இரண்டில் ஏதாவது ஒன்றுதானே உண்மையாக இருக்க முடியும்?

சொத்துக் குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளி ஜெயலலிதா. இரண்டாம் குற்றவாளி சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கிற்குள் நாம் போகத் தேவையில்லை. ஆனால் ஒரு வேளை தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் சசிகலா மட்டும்தான் காரணம் என ஜெ நினைத்திருந்தால், அதில் உண்மை இருந்திருந்தால் ஜெ எப்போதோ சசிகலாவை முற்றிலும் ஒதுக்கி வைத்திருக்க முடியும். ஆனால் அவ்வழக்கினால் பலமுறை பதவியை இழந்தும்கூட அவர் அதைச் செய்யவில்லை (ஒதுக்கி வைத்தபோதும் கூட இது காரணமாக சொல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).

ஆக வழக்கு நடக்கும் 20 ஆண்டுகளில் ஜெயலலிதாவே சசிகலா மீது பழி போடாதபோது, சில ஊடகங்களும், துக்ளக் போன்ற சிறு பத்திரிக்கைகளும் பழிபோடுவதை நாம் உள்நோக்கம் கொண்டதாகவே பார்க்க வேண்டியுள்ளது.

அதற்காக சசிகலா ஊழல் கறையே படாத பரிசுத்தமானவர் என்று பொருளில்லை. ஆனால் ஜெ-சசி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில் ஜெ குற்றமற்றவர் என்றும் சசி மட்டுமே குற்றவாளி என்றும் நிறுவ முயற்சிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? எனவே ஜெயலலிதா எனும் பிம்பத்தைக் காக்க சசிகலா எனும் ஒற்றை நபரை காவு கொடுப்பதை ஜெயலலிதாவே ஏற்கவில்லை. 'பார்ட்னர்ஸ் இன் க்ரைம்' என ஆங்கிலத்தில் சொல்வதைப் போல இறுதிவரை சசிகலாவுடனான உறவை எல்லா விஷயங்களிலும் ஜெ பேணிப் பாதுகாத்தே வந்திருக்கிறார்.

ஜெ தன் கட்சிப் பணிகள், நிர்வாகப் பணிகளைப் பொறுத்தவரை தனித்து இயங்கவில்லை என்பது அதிமுக தலைமையுடன் நெருங்கிப் பழகியவர்களும், போயஸ் தோட்டத்திற்கு சென்று வந்தவர்களுக்கும் நன்றாகவே தெரிந்திருக்கும். இன்று 'சின்னம்மா' என்ற வார்த்தை பொதுமக்களுக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால் அதிமுகவில் பொறுப்பில் உள்ளவர்கள், போயஸ் தோட்டத்துடன் நெருக்கமாக இருந்த அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு இந்த வார்த்தை வெகு பரிச்சயம். அவர்கள் தங்களது உத்தரவுகளை போயஸ் தோட்டத்தின் 'சின்னம்மா'விடமிருந்தே பெரும்பாலும் பெற வேண்டியிருந்தது. அதனால்தான் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களைப் போல் அல்லாது, முதல்வர் ஓ.பி.எஸ் உள்ளிட்ட கட்சிப் பொறுப்பில் இருக்கும் அதிமுகவினருக்கு, தங்களின் விசுவாசத்தை ஜெவில் இருந்து சசிகலாவுக்கு மாற்றியமைத்துக் கொள்வது மிகவும் எளிதாக இருக்கிறது. ஜெவுக்கு வழக்கமாக செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சசிகலாவுக்கும் செய்யப்பட்டிருப்பது அதிகாரிகளுக்கும் இந்த மாற்றம் பெரிய பிரச்சினையாக இல்லை என்பதையே காட்டுகிறது.

சசிகலாவின் தகுதியை கடுமையாக கேள்விக்குள்ளாக்கும் யாரிடமும் ஜெவுக்கு பின்பு அதிமுக தலைமைக்கான தகுதியுள்ள மாற்று யார் என்ற கேள்விக்கு பதில் இல்லை என்பதுதான் அதிமுக எனும் பேரியக்கம் சந்திக்கும் ஆச்சரியமான சோகம். ஜெவின் பிராக்ஸி முதல்வராக பணியாற்றியுள்ள அனுபவமுள்ள ஓ.பி.எஸ்சிற்கு கட்சியைக் கையாளும் ஆளுமை உள்ளதா என்பதில் யாருக்கும் சந்தேகம் வரும்முன் அவரே, "சின்னம்மாதான் தலைமையேற்க வேண்டும்," என வேண்டிக் கேட்டுக்கொண்டு அந்த குழப்பத்திற்கு இடமின்றி செய்துவிட்டார்.

அசப்பில் ஜெயலலிதாவைப் போன்றே இருக்கிறார் என்ற பெரும் தகுதியோடு ஊடகங்களில் பேட்டியளிக்கும் தீபாவை ஜெயலலிதாவே, தான் உயிரோடிருந்தபோது அருகில் சேர்த்ததில்லை எனும்போது, அவரை அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் தலைவியாக மட்டுமல்ல, தொண்டராகக் கூட ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

அதிமுகவில் தலைமைப் பஞ்சம் ஒருபக்கம் என்றால், அதிமுக கட்சிக்காரர்களின் குணாதிசயம் 'மினியான்கள்' எனும் ஆங்கில அனிமேஷன் திரைப்படக் கதாப்பாத்திரங்களைப் ஒத்தது. இந்த மினியான்கள் ஒரு விசித்திரமான குணமுடையவை. அவற்றால் தலைவன் இல்லாமல் இயங்க முடியாது. உத்தரவுகளைப் பெற்று தொடர்ந்து இயங்க அவற்றுக்கு தலைவர் ஒருவர் கண்டிப்பாகத் தேவை. அந்த தலைவரும் கூட வேறு எங்காவது இருந்து வந்தால்தான் அவை ஏற்றுக்கொள்ளுமே தவிர தங்களுக்குள் ஒருவரை தேர்ந்தெடுத்து தலைவராக்கும் இயல்பு இயற்கையிலேயே அவற்றுக்கில்லை.

அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிகாரத்திற்கான போட்டி இல்லாமல், உட்கட்சி அரசியல் எதுவுமில்லாமல் ராணுவக் கட்டுப்பாட்டுடன் அதிமுகவில் பொறுப்பில் உள்ளவர்கள் இயங்குவதும், சசிகலாவை தலைமையேற்கச் சொல்லி தொடர்ந்து வேண்டியும், இன்று எந்தக் குழப்பமும் இன்றி அவரை பொதுச் செயலாளராக ஏகமனதாக அவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பதும் சான்று. அப்படி காலத்தின் கட்டாயமாக, அதிமுகவின் தவிர்க்கவே முடியாத தலைவராகத்தான் இன்று சசிகலா உருவாகியிருக்கிறார்.

கட்சியில் பொறுப்பில் இருப்பவர்களுக்கு சசிகலாவின் உத்தரவின் பேரில் இயங்குவதில் முழுld திருப்திதான் என்றாலும் சசிகலாவின் மீது குற்றச்சாட்டும், குழப்பமும், கோபமும் அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களிடையே வெகுவாக இருக்கிறது. எம்.ஜி.ஆர் எனும் பிரம்மாண்ட பிம்பத்துடன் பல படங்களில் நடித்ததன் மூலம் ஜெயலலிதா வெகுஜன மக்களை நேரடியாக சென்று சேர்ந்ததைப் போன்ற தகுதி சசிகலாவுக்கு இல்லை. அவர் நிழல் அதிகாரவாதியாக மட்டுமே இத்தனை ஆண்டுகளும் இருந்திருக்கிறார்.

இதெல்லாம் போக அப்பல்லோவில் ஜெவின் இருப்பை சசிகலா கையாண்ட விதம்தான் அதிமுகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்கள் ஆத்திரமெல்லாம் அப்பல்லோ நாட்கள் ஏன் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன என்பதே. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் நடிகர்களாக இருந்தவர்கள், தனிப்பட்ட வாழ்க்கையை எப்போதும் ரகசியமாக வைத்திருந்தவர்கள் என்பதெல்லாம் படித்தவர்களுக்கு புரிகிறதேயொழிய அதிமுகவில் பெரும்பான்மையாக இருக்கும் பாமர மக்களுக்கு புரியவில்லை. காவிரியில் கலைஞர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டிருந்தபோது வெளியிடப்பட்டதைப் போல ஏன் ஜெயலலிதாவின் புகைப்படம் வெளியிடப்பவில்லை என்பதில் ஆரம்பித்து ஏராளமான வதந்திகளும், நிச்சயப்படுத்தபடாத செய்திகளும், யூகங்களும் அவர்களிடையே கோபத்தை கிளப்பியிருக்கிறது.

எம்.ஜி.ஆர் உடல்நிலை சரியில்லாதபோது அதை விமர்சித்து ராஜீவ்காந்திக்கு ஜெயலலிதா எழுதிய கடிதத்தை மறந்ததைப் போலவோ, ஜானகிதான் எம்.ஜி.ஆருக்கு மோரில் விஷம் வைத்தார் என ஜெ எழுப்பிய குற்றச்சாட்டைப் போலவோ இந்த விஷயத்தை அதிமுகவினர் காலப்போக்கில் மறந்துவிடுவார்கள் என சசிகலா நினைத்து மெத்தனமாக இருந்தாரேயானால் ஊடகவெளிச்சம் மிகப்பெரிய அளவில் இருக்கும் இந்தக் காலத்தில் அது தவறான கணக்காகத்தான் முடியும்.

ஜெ மரணம் குறித்த நீதிபதியின் கேள்வியும், எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஜெயலலிதாவின் மரணத்தில் விசாரணை வேண்டும் என வேண்டியிருப்பதும் பொதுமக்களிடையே முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில் ஜெ மரணம் குறித்த எல்லா குழப்பங்களையும் தெளிவுபடுத்தும் கடமை கண்டிப்பாக சசிகலாவுக்கு உண்டு.

காமராசருக்குப் பிறகு இடைநிலை சாதியைச் சேர்ந்த ஒரு தலைமையை தமிழகம் பெற்றிருக்கிறது என்றாலும், சசிகலா தலைமையேற்ற பின், ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே ஆளுமை செலுத்தும் இயக்கமாக அதிமுக மாறிவிடுமோ என்கிற சந்தேகம் பொதுவாக நிலவுகிறது. இதற்கு பதில் சொல்வதைப் போல, "எம்.ஜி.ஆர் தலைமையில் இயங்கியதைப் போல, ஜெயலலிதாவின் தலைமையில் இயங்கியதைப் போல சாதி சமயங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கமாகவே அதிமுக உறுதியுடன் இயங்கும்," என தனது அறிக்கையில் சசிகலா தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். இத்தோடு சசிகலாவுடனான தொல்.திருமாவளவனின் சந்திப்பும் இந்த சந்தேகத்தை ஓரளவுக்கு தணித்திருக்கிறது. இதெல்லாம் போக ஜெயலலிதாவின் பெரும்பலம் அவருக்கு இருந்த பெண்கள் ஆதரவு. பெண்கள் சாதிக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களைப் பொறுத்தவரை பெண்ணை பெண்ணாக மட்டுமே பார்ப்பார்களே தவிர அவர் எந்த சாதியைச் சேர்ந்தவன் என்பதெல்லாம் எப்போதுமே அவர்களுக்கு முக்கியமில்லை. ஜெவுக்கு இருந்த அதே பெண்கள் ஆதரவை தக்கவைக்க சசிகலா சாதிகளுக்கு அப்பாற்பட்ட பெண்ணாக இயங்க வேண்டியதும் அவசியம்.

பெண்கள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் அதிகாரத்தை எட்டிவிட்டால் அவர்களுக்கு கொஞ்ச நஞ்சம் இருக்கும் சாதி அடையாளமும் தானே போய்விடும். என்னதான் சட்டசபையில் தன்னை பார்ப்பனர் என்று ஜெ அறிவித்துக் கொண்டாலும் தமிழக மக்கள் அவரை எப்படி பொதுவானவராக பார்த்தனரோ அதைப்போல சசிகலாவின் சாதி அடையாளத்தை மீறி காலப்போக்கில் சசிகலா பொதுவானவராக மட்டுமே அறியப்படும் வாய்ப்பும் இருக்கிறது.

எது எப்படி என்றாலும் மதவாத சக்திகள் இந்தியாவெங்கும் கிளை பரப்ப, குறிப்பாக தமிழகத்தில் காலூன்ற முயன்று கொண்டிருக்கும் இச்சமயத்தில், பெருங்குழப்பம் ஏதுமில்லாமல் அதிமுக தனது தலைமையை ஒருமனதாக தேர்ந்தெடுத்திருப்பது தமிழகத்தில் நிலையான ஆட்சியை உறுதிபடுத்திருக்கிறது. மற்றபடி ஜெயலலிதா மத்திய அரசோடு பல சூழல்களில் நியாயமான காரணங்களுக்காக கொண்டிருந்த மோதல் போக்கை, உறுதியை சசிகலா அப்படியே பின்பற்றினார் என்றால் தமிழக மக்களின் நன்மதிப்பை அவரால் நிச்சயம் பெற முடியும். தன்னை நிரூபிக்க அவருக்கு நான்கு நீண்ட ஆண்டுகள் கிடைத்திருக்கின்றன. மற்றபடி இப்போதைக்கு ஒன்றை மட்டும் நாம் உறுதியாகச் சொல்லமுடியும். சசிகலா அதிமுகவுக்கு தலைமையேற்றிருப்பது அதிமுக எனும் கட்சிக்கு நிச்சயமாக நல்லது. ஆனால் தமிழகத்திற்கு நல்லதா என்பதை சசிகலாவின் நடவடிக்கைகளை பொறுத்துதான் நம்மால் சொல்ல முடியும்.

தொடர்புக்கு: [email protected]

English summary
Is Sasikala's presidency is good for ADMK and Tamil Nadu? Here is an analysis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X