• search

தமிழக விவசாயிகள் குரல் கேட்பாரற்று போவது ஏன்? நாராயணசாமி நாயுடுகளே எங்கே இருக்கிறீர்கள்?

By Veera Kumar
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  சென்னை: நாராயணசாமி நாயுடு போன்ற மிகப்பெரிய விவசாயப் போராளியின் இழப்பை தமிழகம் இப்போது வெகுவாக உணர்கிறது. மகாராஷ்டிராவில் நடந்ததைப் போன்ற ஒரு மாபெரும் விவசாயக் போராட்டத்தை தமிழகத்தில் முன்னெடுக்க, ஒருங்கிணைக்க தலைவர்கள் இன்றி தவிக்கின்றனர் விவசாயிகள்.

  அல்லது காவிரியில் வரலாறு காணாத வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கும் இந்த நிலையிலும் கூட, கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்று சேராத அவலம் நிகழ்ந்திருக்குமா? முக்கொம்பு அணை தான் 'காய்ச்சல்' வந்து உடைபட்டு இருக்குமா?

  சமகால விவசாய போராட்ட வரலாற்றில் ஒரு மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மகாராஷ்டிராவில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிரம்மாண்ட பேரணியும், மும்பை முற்றுகையும்தான்.

  ஒன்றல்ல இரண்டல்ல 50 ஆயிரம் விவசாயிகள் நாசிக் முதல் மராட்டிய தலைநகர் மும்பை வரை 180 கிலோ மீட்டர் தூரம் மாபெரும் அலை போன்ற பேரணியாக நடந்து வந்தனர்.

  மாபெரும் அலை

  மாபெரும் அலை

  அவர்களின் அமைதி போராட்டத்தால் எந்த இடத்திலும் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படவில்லை. 500 பேர் கூடுமிடத்தில் கூட ஐந்தாறு கடைகளை அடித்து உடைக்கும் சூழல் உள்ள ஒரு நாட்டில், 50 ஆயிரம் பேர் பங்கேற்ற இந்த ஒரு பேரணியால் போக்குவரத்து நெரிசல் கூட ஏற்படவில்லை என்பது வரலாற்றின் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நிகழ்வு. விவசாயிகள் சட்டசபையை முற்றுகையிட நெருங்கிவிட்ட நிலையில் அத்தனை கோரிக்கைகளையும் அவசர அவசரமாக நிறைவேற்றுவதாக அறிவித்து, விவசாயிகளுக்கு சிறப்பு ரயில் நிலையம் ஏற்பாடு செய்து கொடுத்து, சொந்த ஊருக்கே திருப்பி அனுப்பியது மராட்டிய அரசு.

  எத்தனையோ இடர்பாடுகள்

  எத்தனையோ இடர்பாடுகள்

  ஆனால் மகாராஷ்டிராவை விட அதிகமான கஷ்டங்களை அனுபவித்து வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் என்பது, அரசின் தலைமைக்கு கூட அல்ல, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கூட உரிய வகையில் சென்று சேர்வது இல்லையே ஏன்? விவசாயிகளுக்கு தண்ணீர் கொடுப்பதில்லை என்றார்கள், பிறகு ஹைட்ரோகார்பன் எடுக்கப்போகிறோம் நிலத்தையும் கொடுங்கள் என்றார்கள், அதன் பிறகு சர்ரென்று பறந்து சென்று விடலாம் சாலை போட மரியாதையாக வழியை விடுங்கள் என்றனர். இப்படியாக விவசாய வர்க்கத்தையே துடைத்து எறிய கூடிய நடவடிக்கைகல் இருந்தும் கூட, மகாராஷ்டிராவை போன்ற ஒரு அமைதி போராட்டம்.., அரசையே பணிய வைக்க கூடிய ஒரு ஆர்ப்பாட்டம்.., தமிழகத்தில் நடைபெறவில்லையே ஏன்?

  தமிழகம்தான் முன்னோடி

  தமிழகம்தான் முன்னோடி

  இத்தனைக்கும் மகாராஷ்ட்ரா ஒன்றும் நமக்கு முன்னோடி அல்ல. சுயமரியாதை உள்ளிட்ட, பல்வேறு விஷயங்களில் எப்படி தமிழகம் இந்த நாட்டுக்கே வழிகாட்டியாக உள்ளதோ, அதேபோல விவசாயிகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதிலும், அந்த தேவைகளைக் கேட்டுப் பெறுவதிலும், தமிழகம் தான் முன்னோடி. இதற்கு நீங்கள் நாராயணசாமி நாயுடு என்று தமிழகம் கண்ட மாபெரும் விவசாயப் போராளி வாழ்க்கையை தெரிந்து கொள்ள வேண்டும்.

  மாபெரும் போராளி

  மாபெரும் போராளி

  1925 ஆம் ஆண்டு, அதாவது சுதந்திரத்திற்கு முன்பு, கோவை அருகே உள்ள செங்காலிபாளையம் என்ற கிராமத்தில் பிறந்த நாராயணசாமி நாயுடுதான், சுதந்திர இந்தியா கண்ட மாபெரும் விவசாய போராட்டங்களில் சிலவற்றை நடத்தியவர் என்ற பெருமைக்காரர். அவர் விவசாயிகளுக்கு பெற்றுத்தந்த பலன்களை போல வேறு ஒருவர் பெற்றுத்தந்து இருந்திருப்பார்களா என்பது கேள்விக்குறி. விவசாயத்திற்கு வழங்கப்பட்ட மின்சாரத்தின் அளவு 16 மணி நேரத்தில் இருந்து நான்கு மணி நேரமாக குறைக்கப்பட்டபோது, 1957ஆம் ஆண்டு, கோவை பகுதி விவசாயிகளை திரட்டி நாராயணசாமி நாயுடு நடத்திய போராட்டம் மீண்டும் 16 மணிநேரம் மின்சாரத்தை பாசனத்துக்கு பெற்றுத் தந்தது. இது அவரின் முதல் போராட்ட வெற்றி.

  கோவை குலுங்கியது

  கோவை குலுங்கியது

  1970 இல் அப்போதைய தமிழக அரசு மின் கட்டணத்தை யூனிட்டுக்கு 8 பைசாவிலிருந்து பத்து பைசாவாக உயர்த்தியதற்கு நாராயணசாமி நாயுடு, நடத்திய போராட்டம் வரலாறு காணாதது. கோவை மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் சார்பாக தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அந்த ஆண்டு மே 9-ஆம் தேதி பல்லாயிரக்கணக்கான மாட்டு வண்டிகளில் விவசாயிகள் அலைகடலென கோவை நகரில் பேரணி நடத்தினர். கோவை நகரமே குலுங்கியது. எங்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்றால், அடுத்ததாக அரசு அலுவலகங்கள் முன்பு மறியல், அதற்குப் பிறகு பந்த் நடத்தப்படும் என்று நெஞ்சை நிமிர்த்தி அறிவித்தார் நாராயணசாமி நாயுடு. அந்தப் போராட்டத்தில், அரசின் அடக்குமுறைகளால் 3 விவசாயிகள் பலியாகினர். ஆனால் விவசாயிகளின் வீராவேசத்தின், முன்பாக எதுவும் செய்ய முடியாமல், அரசு அடிபணிந்தது. கடன் வசூலை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக உத்தரவிட்ட அரசு, யூனிட் ஒன்றுக்கு ஒரு பைசா குறைந்தது.

  கத்தி படத்திற்கு முன்னோடி

  கத்தி படத்திற்கு முன்னோடி

  ஆனாலும்கூட நைசாக யூனிட்டுக்கான மின்சார கட்டணத்தை 12 பைசாவாக 1972ஆம் ஆண்டு உயர்த்தி உத்தரவிட்டது அரசு. மீண்டும் கோவை மாவட்ட விவசாயிகள் கிளர்ந்து எழுந்தனர். 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அதை நிறைவேற்ற வேண்டும் என்று அரசுக்கு கெடு வைத்தனர். கோவை நகருக்குள் செல்லும் காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வெளியிலேயே தடுத்து நிறுத்தினர் விவசாயிகள். கத்தி படத்தில் ஹீரோ தண்ணீரை சென்னை சிட்டிக்குள் விடாமல் தடுப்பாரே அதற்கு முன்னோடி இந்த போராட்டம்தான் என்றால் அது மிகையில்லை. அதற்கும் பணியாத அரசை எதிர்த்து மாட்டுவண்டி போராட்டத்தை நடத்தினர்.

  உலகமே பாராட்டியது

  உலகமே பாராட்டியது

  கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கிராமங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாட்டுவண்டிகள் கோவை நகரின் உள்ளே சந்துபொந்துகள், அரசு அலுவலகங்கள் என அனைத்துக்கும் முன்பாக சென்று நிறுத்தப்பட்டன. கோவையே ஸ்தம்பித்தது. அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட உலகப் பத்திரிகைகள் கூட இந்த போராட்டத்தை வியந்து கட்டுரைகள் எழுதின. இந்த போராட்டத்தில் நாராயணசாமி நாயுடு உடன் கை கொடுத்தவர் டாக்டர் சிவசாமி என்பதை மறக்க முடியாது. உலகையே உற்றுப் பார்க்க வைத்த இந்த போராட்டத்திற்கு பிறகு விவசாயிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. மின் கட்டணம் குறைக்கப்பட்டது. சிறையில் இருந்த அனைத்து விவசாயிகளும் விடுதலை செய்யப்பட்டனர். போராட்டத்தை தீர்மானிப்பது, உள்ளிட்ட ஆற்றல்கள் நாராயணசாமி நாயுடுவிடம் இருந்ததுதான் இதற்குக் காரணம்.

  தமிழ்நாட்டு நிலை

  தமிழ்நாட்டு நிலை

  இன்றும் வீதிக்கு ஒரு விவசாய சங்கங்கள் இருக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் ஒற்றுமையாக இணைந்து போராடாமல், ஆளுக்கு ஒரு வகையில் போராடி வருவது தான் ஆட்சியாளர்களுக்கு மிகவும் வசதியாக உள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகள் மாவட்ட கலெக்டரை தாண்டி கூட வெளியே செல்ல முடியாத நிலையில்தான் உள்ளது. காரணம், விவசாயிகளை ஒருங்கிணைக்கும் ஒரு மாபெரும் தலைவர் இல்லை. இந்த சூழ்நிலையில் தான் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பங்களிப்பு மிக முக்கிய தேவையாக உள்ளது.

  கம்யூனிஸ்ட் கட்சி எங்கே?

  கம்யூனிஸ்ட் கட்சி எங்கே?

  மகாராஷ்டிராவை குலுங்க வைத்த விவசாயிகள் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு பெற்ற 'அனைத்து இந்திய கிசான்' என்ற அமைப்புதான் முன்னெடுத்தது. ஆனால் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி இது போன்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் தான் விவசாயிகள் ஒவ்வொரு கட்சியின் பின்னாலும், நடிகர்கள் பின்னாலும் ஓடிக் கொண்டு தங்கள் கோரிக்கையை அவர்கள் பிரதிபலிப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றனர். முதலாளித்துவத்தை எதிர்க்கும் கம்யூனிஸ்டுகளோ, முதலாளித்துவ கொள்கைகளால் உரிமைகளை இழந்துவரும், தமிழக விவசாயிகளை ஒருங்கிணைக்கவில்லை. அவர்கள் அமைதிப் போராட்டம் நடத்த ஊக்குவிக்கவில்லை. வெறும் அறிக்கை, ஒரு கண்டன போராட்டம் நடத்தி விட்டால் போதுமா? யாரை திருப்திப்படுத்த இவையெல்லாம்? கோரிக்கைகள் நிறைவேற வேண்டுமா அல்லது பத்திரிகைகளில் ஒரு பெட்டி செய்தி வந்தால் போதுமா? சிந்திக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள் காம்ரேட்டுகள்!

  பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

  English summary
  The Marxist Communist-backed "All India Kisan" movement was behind the struggle of farmers which shake up Maharashtra government. But the Communist Party did not take any such initiative in Tamil Nadu.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more