For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிடிவி தினகரன் சொத்துக்கள் இன்னமும் பறிமுதல் செய்யப் படாதது ஏன்?

By R Mani
Google Oneindia Tamil News

- ஆர்.மணி

சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரனின் சொத்துக்கள் இன்று வரையில் அரசால் பறிமுதல் செய்யப்படவில்லை. அந்நிய செலாவணி மோசடி வழக்கில் தினகரனை காஃபிபோசா சட்டத்தின் கீழ் அமலாக்கப் பிரிவு ஓராண்டு காலம் தடுப்புக் காவலில் சிறையில் தள்ளியது (COFEPOSA சட்டதின்கீழ்).

இதனை உச்ச நீதி மன்றம் 2006 ம் ஆண்டே உறுதி செய்த பின்னரும் தினகரனுக்கு சொந்தமான எந்த சொத்துக்களும் இதுவரையில் பறிமுதல் செய்யப் படவில்லை. இது பற்றி சற்றே விரிவாகப் பார்க்கலாம்.

1995 ம் ஆண்டே, அதாவது ஜெயலலிதாவின் முதல் ஆட்சிக் காலத்திலேயே அந்நிய செலாவணி வழக்கில் கைதானவர்தான் தினகரன். ஜெ, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் போன்றோர் 1996 ல் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர்தான் கைதாயினர். ஆனால் ஜெ ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும் போதே முதன் முதலில் அந்நிய செலாவணி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார் தினகரன். இது நடந்தது 1995 நவம்பரில். பின்னர் 1996 ம் ஆண்டு பிப்ரவரியில் தினகரனை ஓராண்டு காலம் ஜாமீன் இன்றி சிறையில் வைக்க வகை செய்யும் COFEPOSA சட்டத்தின் கீழ் அன்றைய மத்திய நரசிம்ம ராவ் அரசு கைது செய்தது. 1996 பிப்ரவரி 7 ம் தேதி COFEPOSA சட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தினகரனை கைது செய்தனர். இந்த இனிப்பான செய்தி வரும்போது ஜெயலலிதா திருச்சியில் 5,000 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்திக் கொண்டிருந்தார்.

Why TTV Dinakaran's assets not forfeit?

தன்னை COFEPOSA சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று கூறி அமலாக்கப் பிரிவின் மேல் முறையீட்டு வாரியத்தில தினகரன் தாக்கல் செய்த மனு Foreign Exchange Regulation Appellate Board (FERAB), மே 5ம் தேதி 2,000 ம்ஆண்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் அந்நிய செலாவணி மோசடிக்காக தினகரனுக்கு 28 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப் பட்டது. இதனை எதிர்த்து தினகரன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவைத் தான் சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆனால் இவை எல்லாவற்றையும் விட முக்கியமானது தினகரனை COFEPOSA சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைத்தது சரியான நடவடிக்கைதான் என்று உச்ச நீதிமன்றமே 2006 ம் ஆண்டில் தீர்ப்பளித்த விவகாரம். ஏப்ரல் 27, 2006 ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் இந்த உத்திரவை பிறப்பித்தது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் COFEPOSA சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்ட ஒருவரின் மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்து, சம்மந்தப்பட்டவரின் தடுப்புக் காவல் சரியானது என்று தீர்ப்பளிக்கப்பட்டு விட்டால் உடனடியாக சம்மந்தபட்டவரின் (தினகரன்) சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப் பட வேண்டும்.

இந்த சட்டத்திற்கு பெயர்தான் The Smugglers and Foreign Exchange Manipulators (Forfeiture of Property) Act 1976. சுருக்கமாக இதனை SAFEMA சட்டம் என்று சொல்லுவார்கள். ஆனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்து பத்தாண்டுகள் ஆன போதிலும் இன்று வரையில் SAFEMA சட்டப்படி தினகரனுக்குச் சொந்தமான எந்த சொத்துகளும் பறிமுதல் செய்யப் படவில்ல. "வசதி உள்ளவர்கள் நம்முடைய நாட்டில், உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்த பின்னரும் எந்தளவுக்கு தப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சரியான உதாரணம். COFEPOSA சட்டப்படி ஒருவரை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தது சரியானது என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டால் உடனடியாக சம்மந்தப்பட்ட வருக்கு எதிராக SAFEMA சட்டம் பாயும். அவரது சொத்துக்கள் மற்றும் அவரது உறவினர்களின் சொத்துக்களும் கூட பறிமுதல் ஆகும். குறைந்தபட்சம் ஓரிரு சொத்துக்களாவது, அதாவது கணக்கு காட்டப்படுவதற்காக பறிமுதல் செய்யப்படும். ஆனால் தினகரன் வழக்கில் உச்ச நீதி மன்றத் தீர்ப்பு வந்து பத்தாண்டுகள் ஆகியும் ஒரு குண்டு மணியளவுக்குக் கூட சட்டம் தன் கடமையை செய்யாதது அவலமானது,'' என்று 'ஒன்இந்தியா'விடம் கூறினார் சென்னையில் உள்ள அமலாக்கப் பிரிவில பணியாற்றி ஓய்வு பெற்ற ஓர் அதிகாரி. பணம் பாதாளம் வரைக்கும் பாயும் என்பதற்கு இதுவே சரியான உதாரணம் என்கிறார் அவர்.

"இது ஒரு வெளிப்படையான அதாவது ஆங்கிலத்தில் சொன்னால் Open and Shut case. இதில் தினகரனுக்கு எதிராக தீர்ப்பு வந்தபோது மத்தியில் ஆண்டது மன்மோஹன் சிங் தலைமையிலான அரசு. அமலாக்கத் துறைக்கான அமைச்சர், மத்தியில் நிதியமைச்சராகவும் இருந்த ப.சிதம்பரம். காங்கிரஸ் கட்சி திமுகவுடன் சேர்ந்து மத்தியில் ஆண்டு கொண்டிருந்தது. திமுக வின் பரம எதிரிக்கு மிக நெருக்கமானவர்கள் இது போன்ற நிலைமையை எதிர்கொண்டால் உடனடியாக தினகரனின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. இன்று வரையில் பிரதான கட்சிகளான திமுக வும், காங்கிரஸூம் இந்த பிரச்சனையை எழுப்பாதது சசிகலா குடும்பத்தினரின் செல்வாக்கு எந்தளவுக்கு பரந்து விரிந்து கிடக்கிறது என்பதைத் தான் காட்டுகிறது,'' என்று மேலும் கூறுகிறார் அவர்.

1991 ம் ஆண்டு முதலே சசிகலா குடும்பத்தினரின் அந்நிய செலாவணி மோசடி வழக்குகளில் முதலில் நின்று கொண்டிருப்பது தினகரன்தான். ஜெ வுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் தினகரன் 5 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். லண்டனில் தினகரன் ஹோட்டல் வாங்கியதற்கான வழக்கு இது. ஆனால் 2009 ம் ஆண்டில் இந்த வழக்கு ஜெ வின் சொத்து குவிப்பு வழக்கிலிருந்து தனியாக பிரிக்கப் பட்டது.

"சாமர்த்தியமாக இந்தக் காரியத்தை சிறப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா செய்தார். ஏனெனில் லண்டன் வழக்கை ஜெ வுக்கு எதிரான மூல வழக்குடன் சேர்த்தால் சொத்து குவிப்பு வழக்கு இன்னமும் அதிக காலம் பிடித்திருக்கும். மேலும் லண்டனில் ஓட்டல் வாங்கியிருப்பதற்கு ஜெ வின் பணமும் பங்களிப்பாக இருக்கிறது என்று நிருபிப்பதற்கு சாட்சியங்கள் போதியளவுக்கு இல்லை என்று ஆச்சாரியா வாதிட்டார். அதனை சிறப்பு நீதிபதியும் ஏற்றுக் கொண்டார்,'' என்று கூறுகிறார் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக இருக்கும் ஒருவர்.

"இவ்வாறு வழக்கை பிரிப்பதற்கு ஜெ தரப்பு கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தது. இதிலிருந்தே ஜெ தரப்பு எந்தளவுக்கு வழக்கை இழுத்தடிக்க பிரயத்தனப்பட்டனர்,'' என்பதை நாம் புரிந்து கொள்ளலாம் என்று அவர் மேலும் கூறுகிறார்.

கடந்த மாதம் சென்னை உயர்நீதி மன்றம் தினகரனுக்கு அமலாக்கப் பிரிவு விதித்த 28 கோடி ரூபாய் அபராதம் செல்லும் என்று தீர்ப்பளித்திருக்கிறது. ஒரு கட்டத்தில் சட்டத்தின் பிடியிலிருந்து தப்புவதற்காக, தான் இந்திய பிரஜை இல்லை என்றும் தான் ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் என்றும், சிங்கப்பூர் குடிமகன் என்றும் நீதிமன்றத்தில் கூறினார். இதனையும் சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது. "ஒவ்வோர் கட்டத்திலும் மாறி மாறி பேசுகிறார் தினகரன். தேர்தலில் நிற்கும் போது தான் இந்திய பிரஜை என்கிறார். ஆனால் குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தில் வந்து நிற்கும்போதோ தான் ஒரு வெளிநாடு வாழ் இந்தியர் அல்லது வெளிநாட்டு பிரஜை என்கிறார். தினகரன் ஒரு இந்திய பிரஜை தான் என்பது தெளிவாகவே இருக்கிறது,'' என்று சென்னை உயர் நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் சொல்லி விட்டது.

இவை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். சசிகலா தமிழக ஆளுநரைப் பார்க்கப் போகும் போது தினகரனை மட்டும் ஏன் அழைத்துச் சென்றார். இதற்கும் காரணம் இருக்கிறது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். "ஓ பன்னீர்செல்வம் விவகாரத்திற்கு பிறகு சசிகலா யாரையும் நம்பத் தயாராக இல்லை. தினகரனால் தேர்தலில் நிற்க முடியாது. 28 கோடி ரூபாய் அபராதம் என்பதும் ஒரு தண்டனைதான். ஆகவே நீதிமன்றத்தில் தண்டிக்கப் பட்ட ஒருவர் தேர்தலில் நிற்க முடியாது. முதலமைச்சர் போன்ற பதவிக்கெல்லாம் வரவும் முடியாது. அதனால்தான் தன்னுடையை சொந்த தம்பி திவாகரனைக் கூட அழைத்துச் செல்லாமல் தினகரனை சசிகலா அழைத்துச் சென்றார். திவாகரன் மீது சில வழக்குகள் இருக்கின்றன. ஆனால் அவருக்கு எந்த நீதிமன்றமும் தண்டனை விதிக்கவில்லை. சசிகலா எந்தளவுக்கு எச்சரிக்கையாக இருக்கிறார் என்பதை இதனை வைத்தே நீங்கள் புரிந்து கொள்ளலாம்,'' என்கிறார் அஇஅதிமுக மூத்த நிர்வாகி ஒருவர்.

English summary
Why the judicial department not for forfeit the assets of TTV Dinakaran who punished under COFEPOSA act.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X