For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமித்ஷா வை வாழ்த்தும் கேப்டனும், தமிழக அரசியலின் சாபக் கேடும்!

By R Mani
Google Oneindia Tamil News

- ஆர் மணி

இரண்டாவது முறையாக பாரதீய ஜனதா கட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் அமித் ஷா வுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

‘உங்களது சீரிய தலைமையின் கீழ் பாஜக மேன் மேலும் வளர்ச்சி பெறும். வெற்றிகளை ஈட்டும்,' என்று தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் விஜயகாந்த் கூறியிருக்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவரும், முதலமைச்சர் வேட்பாளருமான டாக்டர் அன்புமணி ராமதாசும் அமித் ஷா வுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். தேமுதிக மற்றும் பாமக ஆகிய இரண்டு கட்சிகளுமே 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Why Vijaykanth wishes Amit Shah?

பாமக பின்னர், தான் மத்தியில் மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதாகவும், குடியரசுத் தலைவரிடம் மோடி அரசுக்கு கொடுத்த ஆதரவு கடிதத்தில் எந்த மாற்றமும் இல்லையென்றும், ஆனால் அதே சமயத்தில் தமிழகத்தில் தங்களது நிலைப்பாடு வேறு என்றும் கூறி விட்டது. ஒரு கட்டத்தில் எந்த தேசிய கட்சிகளுடனும், திராவிட கட்சிகளுடனும் கூட்டணியில்லை என்று கூறி வந்த பாமக, பின்னர் இறங்கி வந்து, அன்புமணியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டால் பாஜக வை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளுவதாக அறிவித்துவிட்டது.

தேமுதிக தலைவர் மீண்டும், மீண்டும் தெளிவு படுத்தி கொண்டிருப்பது தான் எந்தக் கூட்டணியிலும் இல்லையென்றும், தனது கட்சியை எந்தக் கட்சியாவது தங்களது கூட்டணியில் இருக்கிறது என்று கூறிக் கொண்டிருந்தால் அதற்கு தான் என்ன செய்ய முடியும் என்பதும்தான்.

இந்தப் பின்னணியில்தான் அமித் ஷா வுக்கு விஜயகாந்த் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். எந்தவோர் அரசியல்வாதியும் எதைச் செய்தாலும் அதில் ஒரு அரசியல் காரணம் இல்லாமல் இருக்க முடியாது. அதுவும் தேர்தல்கள் மிக அருகில் நெருங்கி விட்ட சூழ்நிலையில் விஜயகாந்த் தன்னுடைய வாழ்த்தின் மூலம் சாதிக்க நினைக்கும் காரியம் என்னவென்பதுதான் பிரதான கேள்வியாகும்.

திமுக விஜயாகாந்த்துக்கு வலை வீசி விட்டு காத்துக் கொண்டிருக்கின்றது. தன்னால் ஆன எல்லாவிதமான பிரயத்தனங்களையும் திமுக செய்து கொண்டிருக்கின்றது. விஜயாகாந்த்தை தன் பக்கம் கொண்டு வருவதற்கு திமுக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராகி கொண்டிருக்கின்றது என்பதுதான் யதார்த்தம். காரணம் வேறெந்த கூட்டணி கட்சிகளும் திமுக வுடன் இன்றில்லை என்பதுதான். இதுபோன்றதோர் தேர்தலை திமுக சந்தித்ததில்லை என்பதே உண்மை.

1996 ல் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பும் கிட்டத்தட்ட இதுபோன்றதோர் நிலைமைதான் இருந்தது. அப்போது மதிமுக உதயமாகி திமுக பலவீனமாகியிருந்த நேரம். யார் திமுக வுடன் கூட்டணி சேருவார்கள் என்ற ஐயப்பாடு நிலவிக் கொண்டிருந்தது. ஆனால் அப்போதிருந்த ஜெயலலிதா வுக்கு எதிரான பேரலை, நடிகர் ரஜினிகாந்த் உதவியுடன் தமாக வை உருவாக்கி அதனை திமுக வுடன் கூட்டணியில் சேர வைத்து கருணாநிதியை கரையேற்றியது.

இந்த முறை 1996 ல் இருந்தது போன்ற ஜெயலலிதா வுக்கு எதிரான அலை எதுவுமில்லை. மேலும் அப்போது திமுக மீது குடும்ப அரசியலில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருக்கும் கட்சியென்ற பெயரும் இல்லை. இந்த இரண்டும் இன்று திமுக வுக்க எதிராக மிகப் பெரிய அளவில் விஸ்வரூப மெடுத்து நின்று கொண்டிருக்கின்றன.

தான் யாருடன் கூட்டணி சேரப் போகிறேன் என்பதை தெளிவாகச் சொல்லாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார் விஜயகாந்த். மக்கள் நலக் கூட்டணி, பாஜக மற்றும் திமுக என்று மூவருடனும் கேப்டன் பேசிக் கொண்டிருக்கிறார். பிப்ரவரி மாதம் நடக்க விருக்கும் கட்சியின் பொதுக் கூட்டத்தில் தான் கூட்டணி பற்றிய அறிவிப்பை வெளியிடப் போவதாக அவர் கூறுகிறார். பிப்ரவரியிலும் விஜயகாந்த் நிச்சயம் கூட்டணி பற்றிய அறிவிப்பை வெளியிடமாட்டார். அவரது கடந்த கால வரலாற்றை அறிந்தவர்களுக்கு இது நன்றாகத் தெரியும்.

2011 சட்டமன்றத் தேர்தலின் போது கடைசி நிமிடம் வரையில் திமுக மற்றும் அஇஅதிமுக வுடன் கூட்டணியில்லை என்று இரண்டு கட்சிகளையும் தாறு மாறாக திட்டிக் கொண்டிருந்தார் விஜயகாந்த். திடீரென்று தன்மானம் உள்ள விஜயகாந்த் ஜெயலலிதாவைப் போய் சந்திக்க மாட்டாரென்று மு.க. அழகிரி ஒரு மதிய வேளையில் திருவாய் மலர்ந்தருளினார். இது கேப்டனை உந்தித் தள்ளியது போயஸ் தோட்டத்தை நோக்கி. ஜெயலலிதாவுடன் கூட்டணி என்று அறிவித்த பின்னர் திடீரென்று மார்ச் 16 ம் தேதி தன்னிச்சையாக அஇஅதிமுக வேட்பாளர் பட்டியலையும் அறிவித்து விட்டது. அப்போது ஒரு கட்டத்தில் ஜெ வுடனான கூட்டணியை முறித்துக் கொள்ளலாம் என்று இரண்டு இடதுசாரிகளும் வலியுறுத்தியும் வேண்டாமென்று கூறி மீண்டும் அஇஅதிமுக வுடனேயே சங்கமமாகி 41 சீட்டுக்களை வாங்கி அதில் 29 ல் வென்று தற்போது அதில் 7 ஐ 'புரட்சித் தலைவி அம்மா'விடம் காவு கொடுத்து சரித்திர சாதனை படைத்துக் கொண்டிருப்பவர்தான் கேப்டன்.

இதே கதைதான் 2014 மக்களவைத் தேர்தலிலும் கடைசி நிமிடம் வரையில் யாருடன் கூட்டணி என்ற அறிவிப்பை வெளியிடாமல் இழுத்தடித்து பின்னர் பாஜக வுடன் சங்கமமாகி 14 ஐ வாங்கி ஒன்றில் கூட வெல்ல முடியாமல் மண்ணைக் கவ்வியவர்தான் கேப்டன்.

இதெல்லாம் பழைய கதைதான். ஆனால் இந்தக் கதையை ஊன்றிப் படித்தால்தான் அமfத் ஷா வுக்கு கேப்டன் வாழ்த்துச் சொன்னதன் சூட்சுமம் புரியும். திமுக வையும் அஇஅதிமுக வையும் விஜயகாந்த்தும் அவரது மனைவி பிரேமலதாவும் வறுத்தெடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதே சமயம் உரிய நேரத்தில் சாதகமான சமிக்ஞைகளை திமுக வுக்கு வழங்கவும் கேப்டன் தவறுவதில்லை. கடந்த வாரம் திமுக தலைவர் கருணாநிதி மீது தமிழக சட்டமன்றத்தில் உரிமை மீறல் பிரச்சனை வந்த போது அன்றைய நாள் நிகழ்ச்சியில் தேமுதிக எம்எல்ஏ க்கள் கலந்து கொள்ளவில்லை. கருணாநிதி மீது கண்டனத் தீர்மானம் வாசிக்கப் பட்டதை எதிர்த்து உரிமைக் குழு அறிக்கையை கிழித்தெறிந்த திமுக எம்எல்ஏ க்கள் சட்டசபையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். சிபிஎம், காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் கருணாநிதிக்கு எதிரான தீர்மானத்தை கண்டித்தன. எம்எல்ஏ க்கள் இல்லாத மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூட கருணாநிதிக்கு எதிரான தீர்மானத்தைக் கண்டித்தார். ஆனால் விஜயகாந்த் வாய் திறக்கவில்லை. அதே சமயம் சட்ட மன்றத்திற்கு அந்தக் குறிப்பிட்ட நாள் அவரது எம்எல்ஏ க்களை அனுப்பாமல் இருந்ததன் மூலம் சொல்ல வேண்டிய செய்தியையும் திமுக வுக்குச் சொல்லி விட்டார்.

இந்த நாடகத்தின் மற்றோர் காட்சிதான் அமித் ஷா வுக்கு வாழ்த்துச் சொல்லியிருப்பதும். இது திமுக வுக்கு விடுக்கப் பட்டிருக்கும் மறைமுக மற்றோர் எச்சரிக்கை. தான் விரும்பும் எண்ணிக்கையிலான சீட்டுக்களும், மற்ற இன்ன பிற கோரிக்கைகளும் (அது என்னவென்று சிறு குழந்தைக்கும் தெரியும்தான். ஆனால் அதனை எழுத்தில் வடிக்க முடியாது தானே!) நிறைவேற்றப்படா விட்டால், தான் தேர்ந்தெடுக்க மாற்றுப் பாதைகளும் உண்டென்பதைத் தான் கேப்டன் உணர்த்திக் கொண்டிருக்கிறார்.

விஜயகாந்தின் இந்தச் சூட்சுமமான நாடகம் வெற்றிகரமாக மீண்டும் மீண்டும் அரங்கேறிக் கொண்டிருப்பதற்கு காரணங்கள் இரண்டு.

1. தேமுதிக விடம் இருக்கும் 8 முதல் 10 சதவிகித வாக்குகள்.

2. முன்னெப்போதும் இல்லாத விதத்தில் திமுக பலவீனமாக, கிட்டத்தட்ட அரசியல் அனாதையாக இருப்பது. இவையிரண்டுமே தேமுதிக இந்தளவுக்கு ஆட்டம் போட்டுக் கொண்டிருப்பதற்கு காரணங்களாக அமைந்து கொண்டிருக்கின்றன.

கடந்த 2011 மற்றும் 2014 தேர்தல்களை ஊன்றிப் பார்ப்பவர்களுக்கு ஒன்று நன்றாகப் புரியும். அதாவது கேப்டன் கடைசி நிமிடம் வரையில் தான் கூட்டணி சேர வாயப்புள்ள கட்சிகளை மிகவும் பதற்றத்திலும், பரிதவிப்பிலும் தள்ளி அவர்களை குதிக்காலிலேயே நிற்க வைத்துக் கொண்டிருப்பார். கடைசி நேரத்தில்தான், தேர்தல் அறிவிக்கையை தேர்தல் ஆணையம் முறையாக வெளியிட்ட பின்னர்தான் தன்னுடைய முடிவை அறிவிப்பார். அதே சமயம் எந்தக் குதிரை வெற்றி பெறுகிறதோ அந்தக் குதிரையில் தான் பந்தயமும் கட்டுவார். ஆனால் அதுவரையில் வானை வில்லாக வளைக்கும் பேச்சுக்களை தொடர்ந்து பேசிக் கொண்டேயிருப்பார்.

இதில் அவலமான விஷயம். பண்டித ஜவாஹர்லால் நேருவுடனும், இந்திரா காந்தியுடனும், ராஜீவ் காந்தியுடனும், ராஜாஜி யுடனும், காமராஜருடனும், அடல் பிஹாரி வாஜ்பாயுடனும், எம்ஜிஆரு டனும், (ஓராயிரங் குறைகள் இருந்தாலும்) ஜெயலலிதா வுடனும் அரசியல் செய்த 91 வயது திமுக தலைவர் முத்துவேல் கருணாநிதி இன்று விஜயகாந்த் போன்றவர்களுடனும் அரசியல் செய்ய வேண்டிய நிர்ப்பந்தமும், விஜயகாந்த்துக்காகக் காத்து கிடக்க வேண்டிய கோலம் வந்து வாய்த்ததுதும்தான்.

இன்று விஜயகாந்த் திமுக வையும், குறிப்பாக அதன் தலைவரையும் பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கிறார். கடைசி நேரத்தில் எப்படியும் விஜயகாந்த் தங்களிடம் வந்து சேர்ந்து விடுவாரென்று திமுக நம்பிக் கொண்டு, இலவு காத்த கிளியாய் காத்துக் கொண்டிருக்கின்றது. கேப்டன் திமுக பக்கம் வரலாம் அல்லது வராமலும் போகலாம். கேப்டன் வராமல் இருப்பதை விட கூட்டணியில் வந்து விட்டால் அதற்கு திமுக கொடுக்கக் கூடிய விலை மிகப் பெரியதாகவே இருக்கும். ஆனால் அது எப்படிபட்ட விலையானாலும் அந்த விலையைக் கொடுக்க திமுக தயாராக இருப்பதாகவே தெரிகிறது.

ஐந்தாண்டுகள் பதவி சுகத்தை அனுபவிக்க முடியாத திமுக அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அந்தத் தியாகத்தைச் செய்ய தயாராக இல்லையென்பதுதான் உண்மை. சாமானிய தமிழக வாக்காளனைப் பொறுத்த வரையில் அவனுக்கான ஒரே உண்மை... கண்ணுக் கெட்டிய தூரம் வரையில் ஆரோக்கியமான, நேர்மையான அரசியலுக்கு எந்த அறிகுறியும் இல்லையென்பதுதான்!

English summary
Why DMDK leader Vijaykanth wished BJP president Amit Shah's re election? Here is political columnist Mani's analysis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X