சினிமா பாணியில் கர்ப்பம் தரிக்காமலேயே குழந்தை பெற்றதாக நடித்த மனைவி... கணவர் பகீர் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண் ஒருவர் கர்ப்பம் தரிக்காமலேயே குழந்தை பெற்றுக்கொண்டதாக நாடகமாடியதாக அவரது கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து விசாரணை நடத்திய போலீசார் பச்சிளம் குழந்தையை அந்த பெண்ணிடம் இருந்து மீட்டுள்ளனர். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் சோமன். இவரது மகன் யோகேஸ்வரனின் மனைவி பத்மினி. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு சென்ற பத்மினி தனக்கு பெண்குழந்தை பிறந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

Wife delivers nothing to become "mother", hubby complains

ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் சோமனின் மகன் யோகேஸ்வரனும், பட்டதாரி பெண்ணான பத்மினியும் காதலித்துள்ளனர். பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் உதவி ஆய்வாளர் சோமன் , தனது மகனுக்காக மருமகள் பத்மினியை ஏற்றுக்கொண்டுள்ளார். இருந்தாலும் காதல் திருமணத்தை சுட்டிக்காட்டி அடிக்கடி பிரச்சனை எழுந்தது. அப்போது ஒரு குழந்தை பிறந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று பெரியவர்கள் ஆறுதல் சொல்லவே, நாடகத்தை ஆரம்பித்தார் பத்மினி.

கர்ப்ப நாடகம்

தனது பெற்றோரின் ஒத்துழைப்புடன்,தான் கர்பமாக இருப்பதாக கணவர் வீட்டாரை ஏமாற்றினார் பத்மினி. செக் அப்பிற்கு கணவர் கூப்பிட்ட போது செல்லாமல் அம்மா உடன் செல்வதாக கூறினார். ஒவ்வொரு முறையும் அம்மா வீட்டிற்கு சென்று செக் அப் செய்து விட்டு வருவதாக கூறவே கணவருக்கு லேசாக சந்தேகம் ஏற்பட்டது.

வளைகாப்பு

ஆனாலும் ஒன்பதாவது மாதம் உறவினர்களை எல்லாம் அழைத்து வளைகாப்பு நடத்தி உள்ளனர். அப்போது வந்தவர்கள் பெண்ணுக்கு வயிறு பெரிதாக இல்லையே என்று சந்தேகம் கிளப்பினர். அதற்கு தங்கள் பரம்பரைக்கே உள்வயிறு என்றும், நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும் வயிறு வெளியே தெரியாது என்று கூறி சமாளித்துள்ளனர்.

பெண் குழந்தை

பிரசவ தேதி எப்போது என்றதற்கும் முறையான பதில் சொல்லாமல் மழுப்பிய பத்மினியின் பெற்றோர். திடீரென்று ஒரு நாள் பத்மினிக்கு பெண் குழந்தை பிறந்து விட்டது என்று கூறி தகவல் தெரிவித்துள்ளனர். இந்தாண்டு பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி பத்மினிக்கு குழந்தை பிறந்ததாக வந்த தகவலையடுத்து யோகேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் எழும்பூரிலுள்ள பத்மினியின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.

நாடகமாடிய பெற்றோர்

பத்மினி வங்கிக்கு செல்லும்போது பிரசவ வலி வந்ததாகவும், அப்போது அருகிலுள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் தானாக சென்று அனுமதிக்கப்பட்டு குழந்தை பிறந்தவுடன் அங்கிருந்து யாரிடமும் சொல்லாமல் வீட்டிற்கு வந்துவிட்டதாக கணவனிடம் பத்மினி கூறியுள்ளார். குழந்தையை பார்த்த யோகேஷ்வரன் குடும்பத்தினர் குழந்தைக்கு தொப்புள் கொடி இல்லாததை கண்டு சந்தேகமடைந்துள்ளனர்.

போலீசில் புகார்

சோமன் குடும்பத்தினர், அந்த குழந்தையின் பிறப்பில் பல சந்தேகங்கள் இருப்பதாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் அந்த புகார் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால், குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.

குழந்தை மீட்பு

பத்மினியின் பெற்றோர் வீட்டிற்கு சென்ற குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் பத்மினியிடம் விசாரணை நடத்தினர். இதில் அந்த குழந்தை அவருடையது அல்ல என்பதும் விலைக்கு வாங்கியது என்பதும் கண்டறியப்பட்டதால் அவரிடம் இருந்து குழந்தையை மீட்டுச்செல்வதாக கூறி எடுத்துச்சென்றனர்.

பிறப்பு சான்றிதழ் இல்லை

பத்மினியிடம் அந்த குழந்தை எந்த மருத்துவமனையில் பிறந்தது என்பது தொடர்பான எந்த விவரமும் இல்லை, பிறப்புச்சான்றோ, சிகிச்சை எடுத்துக்கொண்ட எந்த ஒரு ஆவணமோ, இல்லாததால் அதனை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்ததாக தெரிவித்த குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள், இது குறித்து காவல்துறையினரிடமும் புகார் அளித்தனர்.

பத்மினியின் நாடகம் அம்பலம்

கடந்த 4 மாதங்களாக குழந்தையை தனது தாய் வீட்டில் வைத்து வளர்த்து வந்த பத்மினி மீது குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது வீட்டிற்கு சென்று விசாரித்த அதிகாரிகள் பத்மினியிடம் இருந்து குழந்தையை மீட்டு உள்ளனர். பத்மினியின் பெற்றோரோ குழந்தை தங்களுடையது என்று வாதாடினர். ஆனால் சிந்தாதிரிபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரின் விசாரணையில் பத்மினியின் கர்ப்பிணி நாடகம் வெளிச்சத்துக்கு வந்தது.

வரதட்சணை புகார்

பத்மினியின் பெற்றோரிடம் கேட்டபோது, யோகேஷ் குமாரின் பெற்றோர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும், திருமணத்திற்கு பின் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் அதன் தொடர்ச்சியாக இதுபோன்ற பொய் புகார்களை கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

விலைக்கு வாங்கப்பட்ட குழந்தை

இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிந்தாதிரிப்பேட்டை மகளிர் போலீசார், பத்மினி தனது 17 சவரன் தாலியை விற்று வடமாநில தம்பதியரிடமிருந்து குழந்தையை பத்மினி விலைக்கு வாங்கியுள்ளதாகவும், கணவரின் கொடுமை தாங்கமுடியாமல் இது போன்ற ஒரு முடிவை எடுத்ததாக அவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும் போலிசார் கூறியுள்ளனர். இதனிடையே பத்மினியிடம் இருந்து குழந்தையை பெற்று தற்போது ராயபுரத்திலுள்ள குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைத்துள்ளனர். சினிமா, சீரியல் பாணியில் பெண் நடத்திய கர்ப்ப நாடகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A husband has charged that his wife cheated him and acted that she has delivered a child.
Please Wait while comments are loading...