For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எழுத்தாளர் ஜெயமோகன் - பெண் எழுத்தாளர்கள் இடையே மோதல்!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழ் இலக்கிய உலகத்தில் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. தங்களை கேவலமாக விமர்சித்ததற்காக எழுத்தாளர் ஜெயமோகனுக்கு பெண் எழுத்தாளர்கள் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளனர். அதற்கு ஜெயமோகனும் தமது இணையத்தில் கடும் பதிலளித்துள்ளார்.

அண்மையில் ஆனந்த விகடன் வார இதழில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் "நம்பிக்கை நட்சத்திரங்கள்" என்ற தலைப்பில் சில படைப்பாளிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார். இது குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவித்த கருத்து இது:

Women writers, activists hit out at Jeyamohan

ஜெயமோகன் கருத்து

"பட்டியலில் உள்ள ஆண்படைப்பாளிகளில் அனைவரும் சிறப்பாக எழுதக்கூடியவர்கள்தான். இன்னும் அதிகமாக அவர்களிடம் எதிர்பார்க்கிறேன். ஆனால், பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பலவகை உத்திகள் மூலம் ஊடகப்பிம்பங்களாக ஆனவர்கள். பலரை ஏன் எழுத்தாளர்கள் அல்லது கவிஞர்கள் என்று சொல்கிறார் நாஞ்சில் என்றே புரியவில்லை.

இது ஒரு முக்கியமான அம்சம். இன்று ஆண்கள் எழுதித்தான் நிற்கவேண்டியிருக்கிறது. பெண்களுக்கு பெண்களாக தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது. கொஞ்சம் பெண்ணியமும் பீரிட்டால் பெரும்பாலானவர்கள் ‘எதுக்கு வம்பு, காலங்கெட்ட காலத்திலே?'என்று ஜகாவாங்கிவிடுவார்கள்."

பெண் எழுத்தாளர்கள் எதிர்ப்பு

ஜெயமோகனின் இந்த கருத்து பெண் எழுத்தாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. அம்பை, குட்டி ரேவதி உள்ளிட்ட பல்வேறு பெண் எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து ஜெயமோகனுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அதில், ஆணாதிக்க சமூகத்தில் குடும்பம் என்ற பாரபட்சங்கள் நிறைந்த அமைப்பினுள் இருந்தபடி எழுதுவதென்பது எத்தனை சிரமத்திற்குரியது என்பதை, அறிவின்பாற்பட்டுச் சிந்திக்கும் அனைவரும் அறிவர். எனினும், அதற்காக பெண்கள் தங்கள் எழுத்தின்மீது மென்சாய்வு காட்டுங்கள் என்று கோரவில்லை;

விமர்சனங்களில் கருணைகூர்ந்திடுங்கள் என்று கையேந்தி நிற்கவில்லை. இத்தகைய அவதூறுகளை, இழிவுபடுத்தல்களை சகவுயிரிகளாகிய எங்கள்மீது செய்யாதீர்கள் என்பதே எங்களது வேண்டுகோள். எத்தனையோ நூற்றாண்டுகளாக பெண்ணடிமைத்தனம் என்ற ஈயக்குண்டை எங்கள் கால்களில் இழுத்தபடி நகரமுடியாமல் நகர்ந்துகொண்டிருக்கிறோம். இந்நிலையில், படைப்பாளிகள் என்ற முகமூடியை அணிந்தபடி உங்கள் பிற்போக்குவாத எச்சிலை இங்கு வந்து கொட்டாதீர்கள் என்றே நாங்கள் சொல்கிறோம். உங்களைக் குறித்த மிகைபிம்பங்களைக் கட்டியெழுப்ப ஆயிரக்கணக்கிலான வழிகளுண்டு. அவற்றையெல்லாம் விடுத்து, உங்கள் ஆணாதிக்க ‘அறிவாயுதங்களை' எங்கள்மீது கூர்தீட்டிப் பார்க்க முற்படாதீர்கள்" என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயமோகன் பதில்

இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெயமோகன், சமகால இலக்கியத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு படைப்பாளியைப்பற்றி ஓர் அடிப்படைப்புரிதல்கூட இல்லாமல் காழ்ப்பரசியல்சார்ந்த அபத்தமான அக்கப்போர்களில் இருந்து திரட்டிக்கொண்ட வெறும் வசையை மட்டுமே முன்வைக்கக்கூடிய இத்தகைய ஓர் எதிர்வினையை உண்மையில் நான் எதிர்பார்க்கவில்லை என்று பதிலளித்துள்ளார்.

English summary
A controversy erupted in the Tamil literary world with a few women writers and activists issuing a statement condemning well-known author B. Jeyamohan for his “misogynist” criticism of women literary figures and their works.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X