2015 வெள்ளத்தை ஒரே நாளில் கண்முன் காட்டிய மழை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  வடகிழக்கு பருவமழை | உதவி எண்கள் | செம்பரம்பாக்கம் ஏரி -வீடியோ

  சென்னை: நேற்று பிற்பகலிலிருந்தே மக்கள் கடைகளில் பரபரப்பாக குவிந்துவிட்டார்கள். அடுத்து நான்கு நாட்களுக்குத் தேவையான பொருட்கள், குறிப்பாக கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, தீப எண்ணெய், அகல் விளக்குகளுக்கு ஏக டிமான்ட். பல கடைகளில் இந்தப் பொருட்கள் மட்டும் விற்றுத் தீர்ந்திருந்தன.

  மாலை நெருங்க நெருங்க மழை வெளுக்க ஆரம்பித்தது. குறிப்பாக தென் சென்னைப் பகுதிகளில். மக்கள் எதிர்ப்பார்த்ததுபோலவே இரவு சாலைகளில், தெருக்களில் முழங்காலுக்கு மேல் வெள்ளம். வேளச்சேரி - மடிப்பாக்கம் பிரதான சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரத்து வெள்ளம். ரியார் நகர், எல்ஐசி நகர், குபேரன் நகர், லட்சுமி நகர் பகுதிகளில் வீடுகளுக்குள் நீர் புக ஆரம்பித்துவிட்டது. அவ்வப்போது பவர் கட் வேறு.

  Yesterday's rain remembers 2015 flood

  விடிய விடிய பெய்து கொண்டிருந்தது மழை. காலையில் பார்த்தால் ஊரே வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது. வீட்டுக்கு எதிரே சாலையில் வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்போதே முன்னெச்சரிக்கையாக சிலர் வீடுகளைக் காலி செய்து கிளம்பிக் கொண்டிருந்தனர்.

  2015-ல் பார்த்த அதே காட்சி.

  வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளிலிருந்து முடிந்தவரை பொருட்களை எடுத்துக் கொண்டு குழந்தைகளை வெள்ள நீரில் இழுத்துக் கொண்டு வரிசையாக மக்கள் சென்ற காட்சி. மிக அதிக வெள்ளம் சூழ்ந்த வீடுகளிலிருந்து புல்டோசர்கள், ட்ராக்டர்களில் மக்கள் மீட்டுக் கொண்டு மாநகராட்சி பணியாளர்கள் சென்ற காட்சி, ஹெலிகாப்டரில் தாழப் பறந்து வந்து உணவுப் பொட்டலம் விநியோகித்த காட்சி, கட்சிக் கொடிகளோடு பிரமுகர்கள் வந்து கலர் கலராக சாதப் பொட்டலங்கள் கொடுத்த காட்சி....

  இவை அனைத்தும் மீண்டும் அரங்கேறியிருக்கும், இன்னும் 24 மணி நேரம் - தொடர்ந்து கூட அல்ல - விட்டு விட்டு பெய்திருந்தாலும் கூட இந்தக் காட்சிகள் அரங்கேறியிருக்கும். இதற்கான பழியை மழை மீது போடுவதில் நியாயமில்லை. ஒரு பக்கம் எப்போதும் போல மெத்தனமாக இருக்கும் அரசு நிர்வாகம். இன்னொரு பக்கம் வழக்கம்போல மழைக் காலத்தில் மட்டும் பதறிவிட்டு, மீதி நாட்கள் அதே தவறுகளைச் செய்யும் பொதுமக்கள்.

  வெள்ளம் வடியாமல் வீடுகளைச் சூழ முக்கிய காரணம் நீர்நிலைகளை ஆக்கிரமித்தல்.. அல்லது அவற்றை குப்பை மேடுகளாக்கி வைப்பது. இதைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறார்கள் மக்கள். வெள்ளக் காலங்களில் மட்டும் இவர்களுக்கு ஞானோதயம் வந்துவிடும். மற்ற நேரங்களில் தொடர்ந்து அலட்சியம் காட்டுவார்கள், அரசு மீது குற்றம் சாட்டுவார்கள்.

  ரொம்ப நாட்களல்ல... 2015-ல்தான் இத்தனை மோசமான வெள்ள பாதிப்பு வந்தது. அன்றைக்கு எங்கெங்கே வெள்ளம் வடியாமல் தேங்கி நின்றதோ அந்தப் பகுதிகளில் வடிகால் வசதியைச் சரி செய்திருக்க வேண்டும். குறிப்பாக வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளில். ஆனால் இரண்டு ஆண்டுகளாக சும்மாதான் இருந்தார்கள் மாநகராட்சி, பொதுப் பணித்துறையினர். மடிப்பாக்கம் எல்ஐசி நகர் அம்பேத்கர் சாலை ஓரங்களில் 2015 வெள்ளத்தின்போது தோண்டப்பட்ட பள்ளம் கூட இன்னும் சரி செய்யப்படவில்லை.

  அப்புறம் மழை வந்துவிட்டது.. வெள்ளம் சூழ்ந்துவிட்டது என்று கூப்பாடு போட்டால் எப்படி? இயற்கை அதன் வேலையை சரியாகச் செய்கிறது. அதைச் சரியாகப் பயன்படுத்த தவறி நிற்பது நாம்தான்.

  இந்த வெள்ள காலத்தில் மழை நீரை சுத்தமாகப் பயன்படுத்த முடியாத அளவுக்கு பெருங்கொடுமையை செய்கிறார்கள் மக்கள். அதுபற்றி தனியாகப் பார்க்கலாம்!

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Yesterday's heavy rain and flood have brought the 2015 flood scenes to many eyes.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற