For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யோகா யாருக்கு சொந்தம்? - வைரமுத்து சொல்லும் உண்மை

By Shankar
Google Oneindia Tamil News

உடலும், சுவாசமும், நுரையீரலும் உள்ள அத்தனைப் பேருக்கும் யோகா சொந்தம் என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.

தேனி மாவட்டம், பெரியகுளம் புதிய பேருந்துநிலையம் அருகிலுள்ள மண்டபத்தில் கவிப்பேரரசு வைரமுத்து கல்வி அறக்கட்டளையின் சார்பில் அரசு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற ஐந்து ஏழை மாணவர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் கல்வி உதவி வழங்கும் விழா நடந்தது.

விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், புலவர் ராசரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உதவித்தொகை வழங்கிய பின் பேசிய கவிஞர் வைரமுத்து, "70 ஆம் வருடத்தில் இந்த மண்ணிலிருந்து புறப்பட்ட மேகம் 35 வருடங்களுக்கு பிறகு பெரியகுளம் வந்துள்ளது.

கரட்டுப்பட்டிக்காரன்

கரட்டுப்பட்டிக்காரன்

ஒருவருக்கு ஜனாதிபதியிடம் விருது வாங்குவதோ, நோபல் பரிசு, ஆஸ்கார், தேசிய விருது வாங்குவதை விட, எவனொருவன் தன் பிறந்த மண்ணில் பெருமையடைகிறானோ அதுவே மிகப்பெரிய விருது. ஏனெனில் பிறந்த மண்ணில் பெருமையடைய வேண்டுமானால், அவன் உண்மையாக மண்ணை நேசித்திருக்க வேண்டும். அந்த மண்ணிலுள்ள மக்கள் அவனை உண்மையாக நேசித்திருக்க வேண்டும். இது ஒருதலைக் காதல் அல்ல. இரு தலைக் காதல். இந்த மண்ணை மறக்காமல் வைரமுத்து இருக்கிறார் என குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சொன்னதுதான் எனக்கான மிகப்பெரிய பெருமை.

உலகில் எந்த ஊருக்கு சென்றாலும், வானொலி தொலைக்காட்சியில் பேசினாலும் நான் என்றுமே கரட்டுப்பட்டிக்காரன்தான். வராகநதி தண்ணீர் குடித்து வளர்ந்தவன் தான்.

கல் உடைக்கும் பெண்...

கல் உடைக்கும் பெண்...

ஒருவனுக்கு கொடுப்பதல்ல பெருமை. பெற்றுக் கொள்வதே பெருமை. பெற்றுக் கொள்பவன் கொடுப்பவனை பெருமையடைச் செய்கிறான். வைரமுத்து கொடுப்பதை இம்மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் பெற்றுக்கொண்டதால் நான் பெருமையடைகிறேன். இங்கே வந்திருந்த ஒரு பெண்மணியின் கழுத்தில் தாலி இல்லை. மஞ்சள் குண்டும் இல்லை. வெறும் மஞ்சள் கயிறு மட்டும் இருந்தது. "என்ன வேலை செய்கிறீர்கள்?" என அவர்களிடம் கேட்டபோது, "கல் உடைக்கிறேன்" என்றார்கள். இத்தகைய கல் உடைப்பவர்கள், புல் அறுப்பவர்களை ஒழிக்காமல் இந்தியா வல்லரசு என்ற போலி கோஷத்தை நான் ஆதரிக்கமாட்டேன்.

ஒரு பிள்ளையையாவது படிக்க வையுங்கள்

ஒரு பிள்ளையையாவது படிக்க வையுங்கள்

எல்லோருக்கும் கல்வி என்பது இந்திய அரசியலைப்பு சட்டம் ஒவ்வொரு
இந்தியனுக்கும் கொடுக்கும் அடிப்படை உரிமை. அந்த உரிமையை அனைவருக்கும் நாம் பெற்றுக்கொடுக்கவே இல்லை. குடும்பத்தின் வறுமையிலிருந்தும், குடிகார தகப்பன்களிடமிருந்தும் குழந்தையை மீட்டெடுக்க வேண்டும். உங்கள் வாழ்நாளில் ஒரு பிள்ளையை படிக்க வைக்கவும். ஒரு குடிகாரரைத் திருத்தவும் வாய்ப்பு ஏற்படுத்தினால் நாடு மெல்லமெல்ல மேம்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

கல்வி பொதுவுடையாகட்டும்

கல்வி பொதுவுடையாகட்டும்

மனிதர்களுக்கு அழகு, ஒழுக்கம், நடத்தை, சுத்தம்,சுகாதாரம், சாதியை ஒழிக்க, ஒடுக்கப்பட்ட மக்களின் வறுமையை அழிக்க கற்றுக்கொடுத்தது கல்விதான். வேட்டை கலாச்சாரத்தை தொடர்ந்து, விவசாயக் கலாசாரம், தொழில் கலாசாரம் வந்தது. இப்போது இருப்பது கல்விக் கலாசாரம். பொருட்கள் பொதுவுடைமையாவது அப்புறம் இருக்கட்டும். முதலில் கல்வி பொதுவுடைமை ஆகட்டும். கல்வியில் ஏற்றத் தாழ்வுகள் நீங்கவேண்டும். நான் தமிழன் என பெருமைகொள்ள வள்ளுவன் ஒருவன் போதும்.

தோற்ற பிள்ளைகளைத் திட்டாதீர்கள்

தோற்ற பிள்ளைகளைத் திட்டாதீர்கள்

பெற்றோர்களே, தோற்ற பிள்ளைகளை திட்டாதீர்கள். புறக்கணிக்காதீர்கள். அது தனி மாணவன் சம்பந்தப்பட்டது அல்ல. சமூகம், பள்ளி, ஆசிரியர், குடும்பம் சம்பந்தப்பட்டது. தோல்விக்கு அவன் மட்டுமே காரணம் அல்ல. அதனால் மாணவர்கள் யாரும் தற்கொலை செய்யாதீர்கள். மரணம் என்பது ஒரு நாள் கூத்து. வாழ்க்கை என்பது 100 ஆண்டு நம்பிக்கை. நூறாண்டு ஆண்டு நம்பிக்கை சாகக்கூடாது.

யோகா மதம் சார்ந்ததல்ல

யோகா மதம் சார்ந்ததல்ல

யோகா என்ற உடற்பயிற்சியை மதத்திற்குள் முடக்காதீர்கள். ஐ.நா. சபையின் அறிவிக்கையின்படி இந்திய பிரதமர் யோகா தினம் கொண்டாடி லட்சக்கணக்கானவர்களை யோகா பயிற்சிக்கு ஆளாக்கியுள்ளார் என்பதனை வரவேற்கிறேன். யோகா என்ற உடற்பயிற்சியை மதத்திற்குள் முடக்காதீர்கள். யோகா என்பது விஞ்ஞானம். விஞ்ஞானம் என்பது பொதுவுடைமையாகும். யாருக்கெல்லாம் சுவாசம் இருக்கிறதோ, நுரையீரல் இருக்கிறதோ, முதுகுத்தண்டு இருக்கிறதோ, உடல் இருக்கிறதோ அவர்களுக்கெல்லாம் யோகா சொந்தம்.

என் காலத்துக்குப் பிறகும்...

என் காலத்துக்குப் பிறகும்...

ஆகவே இதனை ஒரு மதத்திற்குள் கொண்டு வரவேண்டாம் என்பதையே ஒரு கவிஞன் விடுக்கும் கோரிக்கை. சூரிய நமஸ்காரம் என்பது இந்து மதத்தின் நம்பிக்கை என்று வருமானால் நீங்கள் உங்கள் முன்னோர்களை வணங்குங்கள். 62 வயது தொடும் வயதில் எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள் என்னோடு இருந்து, என்னுடைய பேச்சுக்களுக்கு அழையா விருந்தாளியாக வந்து கலந்து கொள்கிறார்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சி. நான் இருக்கும் வரையிலும், என்னுடைய காலத்திற்கு பின்பும் இந்த உதவிகள் என்னுடைய மகன்கள் மூலமாக இத்தகைய உதவிகள் தொடரும்," என்றார்.

English summary
Poet Vairamuthu says that Yoga is a science and it is everyone's property.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X