தஞ்சாவூர் அதிருதே.. அமித்ஷா வரும்போது பாஜகவில் இணையும் 'காங்கிரஸ்' தலை- அண்ணாமலை திடீர் சந்திப்பு!
தஞ்சாவூர்: தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் தஞ்சை டெல்டா பகுதி காங்கிரஸ் மூத்த தலைவர் படைபரிவாரங்களுடன் இணைய இருக்கிறார். இதற்கான முன்னோட்டத்தை தஞ்சாவூரில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பெரும் செல்வாக்கு படைத்தது வாண்டையார் எனும் பண்ணையார் குடும்பம். காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவராக இருப்பவர் கிருஷ்ணசாமி வாண்டையார். இவரது சம்பந்திதான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். கிருஷ்ணசாமி வாண்டையார் வீட்டு திருமணம் மிக மிக ஆடம்பரமாக தஞ்சை ஜில்லாவே அதிர அதிர நடந்தது.

தஞ்சாவூர், மயிலாடுதுறை: இத்தகைய செல்வாக்கு மிக்க கிருஷ்ணசாமி வாண்டையாரும் லோக்சபா தேர்தலில் சீட்டை எதிர்பார்த்து இருந்தார். தஞ்சாவூர் அல்லது மயிலாடுதுறை ஆகிய இரு தொகுதிகளில் ஒன்றை கேட்டிருந்தாராம் கிருஷ்ணசாமி வாண்டையார். தஞ்சாவூர் தொகுதியில் திமுக முரசொலி என்பவரை வேட்பாளராக அறிவித்தது, மயிலாடுதுறை தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது.
சீட் கிடைக்கலையே..: காங்கிரஸ் கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கப்பட்டதால் எப்படியும் தமக்குதான் சீட் கிடைக்கும் என மலைபோல நம்பியிருந்தாராம் கிருஷ்ணசாமி வாண்டையார். மயிலாடுதுறை தொகுதிக்கு மிக நீண்ட இழுபறிக்குப் பின்னர் கடைசி நேரத்தில்தான் காங்கிரஸ் மேலிடம் வழக்கறிஞர் சுதாவை வேட்பாளராக அறிவித்தது. இதில் மிகப் பெரும் ஏமாற்றத்தில் இருந்தவர் கிருஷ்ணசாமி வாண்டையார்.
அதிருப்தியில் கிருஷ்ணசாமி வாண்டையார்?: தற்போது லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில்தான் கிருஷ்ணசாமி வாண்டையாரின் சம்பந்தி டிடிவி தினகரனின் அமமுக இடம் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி தங்களை புறக்கணித்தது தொடர்பாக வாண்டையார் குடும்பம், டிடிவி தினகரனிடம் ஆதங்கப்பட்டது. இதனைவிட ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது பாஜக மேலிடத்துக்கு டிடிவி தினகரன் தரப்பு இந்த அதிருப்தியை பாஸ் செய்துவிட்டதாம்.
ஸ்கெட்ச் போட்ட பாஜக: உடனடியாக கிருஷ்ணசாமி வாண்டையாரை பாஜகவுக்கு தூக்கி வர ஸ்கெட்ச் போட்டுவிட்டதாம் டெல்லி. தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வருகை தரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் கிருஷ்ணசாமி வாண்டையார், பாஜகவில் இணையப் போகிறார் என்பதுதான் இப்போதைய தகவல்.
#WATCH | Tamil Nadu BJP state president Annamalai met Thanjavur South District Congress president Krishnasamy Vandaiyar when Annamalai visited Thanjavur for the election campaign, earlier today. pic.twitter.com/9uJoKGU58R
— ANI (@ANI) March 30, 2024
அண்ணாமலை திடீர் சந்திப்பு: இந்த முடிவுகளுக்குப் பின்னர்தான் தஞ்சாவூரில் நேற்று திடீரென தற்போதைய நிலைக்கு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருக்கும் கிருஷ்ணசாமி வாண்டையார் வீட்டுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் சென்று ஒரு மணிநேரம் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு தொடர்பாக கிருஷ்ணசாமி வாண்டையார் தமது ஃபேஸ்புக் பக்கத்தில், மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று மட்டும் ஒரே ஒரு வரி போஸ்ட் செய்துள்ளார். அண்ணாமலையுடனான சந்திப்பு படங்களை அவர் வெளியிடவில்லை. இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என இருதரப்பும் கூறிக் கொண்டாலும் அமித்ஷா வருகையின் போது கத்தரிக்காய் முற்றி கடைத்தெருவுக்கு வரத்தான் போகிறது என்கின்றன கதர்ச் சட்டை வட்டாரங்கள். அதே நேரத்தில் தஞ்சாவூர் டெல்டாவில் வாண்டையார் குடும்பத்தையே வளைத்துவிட்டதால் இனி பாஜக ஆட்டம் அதகளமாக இருக்கும் எனவும் காவி பக்தர்கள் குதூகலிக்கின்றனர். வாண்டையார் வரவால் டெல்டாவில் பாஜகவின் தாமரை மலருமா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications