மாதா பிதா கூகுள் தெய்வம்..ஒரே ஒரு ஏக்கம் இன்னும் இருக்கு! மாணவர்களிடம் உருகிய அமைச்சர் அன்பில் மகேஷ்
தஞ்சாவூர் : மாதா பிதா குரு தெய்வம் என்பதற்கு பதிலாக, தற்போது மாதா பிதா கூகுள் தெய்வம் என மாறிவிட்டது. எனவும், எதற்கெடுத்தாலும் கூகுள் உதவியோடு தெரிந்து கொள்வதில் கவனம் செலுத்தினால் தேடல் என்பது இல்லாத நிலை உருவாகி விடும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
தஞ்சாவூர் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருமங்கலக்குடி உள்ள அஸ்லாம் பொறியியல் கல்லூரியில் 9ம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி தலைவர் ஜமால் முகமது இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி 439 இளங்கலை முதுகலை பொறியியல் பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ," கல்வி ஒன்றே சமுதாயத்தில் சமத்துவத்தை தரக்கூடியது. மாணவர்கள் குறிப்பாக பட்டம் பெற்றவர்கள் சமுதாயத்தில் பலருடன் பழக சாதிக்க தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் நீங்கள் சாதிப்பதன் முதல் படியாக அமையும். அனுபவம் தான் மிகப்பெரிய நன்மையை தரும்.

கூகுள் தேடல்
தற்போதைய தொழில்நுட்ப வசதியோடு கல்வி கற்ற மாணவர்கள் அவர்களுக்கான இடத்தை அவர்களே தேர்வு செய்வார்கள் இருப்பினும் பெற்றோர்கள் அக்கறையால் கவலைப்படுகிறார்கள். மாதா பிதா குரு தெய்வம் என்பதற்கு பதிலாக, தற்போது மாதா பிதா கூகுள் தெய்வம் என மாறிவிட்டது. இப்படி எதற்கெடுத்தாலும் கூகுள் உதவியோடு தெரிந்து கொள்வதில் கவனம் செலுத்தினால் தேடல் என்பது இல்லாத நிலை உருவாகி விடும். இதில் கவனமுடன் செயல்பட வேண்டும்.

மனித கண்டுபிடிப்பு
உலகமயமாக்கல் என்ற நிலை இருந்தாலும் கடந்த 1990ம் ஆண்டுக்கு பிறகு தனி மனித கண்டுபிடிப்பு என்று சொல்லிக் கொள்ளும் வகையில் எதுவும் இல்லை என்பது ஏக்கமாக, குறையாக உள்ளது. நிறுவனங்களின் பெயரில்தான் ஒரு சில கண்டுபிடிப்புகள் வருகிறது. பொறியியல் பட்டம் பெற்ற மாணவர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும். சமுதாய வளர்ச்சிக்கு பயன்படக்கூடிய வகையில் தங்களது கல்வியை கொண்டு புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிவதில் வெற்றி காண வேண்டும்.

கேள்வி கேட்கும் நிலை
பட்டம் பெற்றவர்கள் பெற்றோர்களின் நம்பிக்கை, பிறர் யாரும் கைநீட்டி கேள்வி கேட்கும் நிலை உருவாகாமல் பலரும் பாராட்டும் விதம் அனைவருடன் இணைந்து வாழ்வதற்கு உழைக்க வேண்டும். வேலை தேடி செல்வதை விட 10 பேருக்கு வேலை தரக் கூடிய வகையில் தங்களை தகுதிப்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். வருங்கால மாணவர்களாகிய உங்களை நம்பியே உள்ளது என்பதை மனதில் கொள்ளுங்கள்" என பேசினார்.












Click it and Unblock the Notifications