நீதிபதிகளை அவதூறாக பேசிய வழக்கு.. தவ்ஹீத் ஜமாத் நிர்வாகியை கர்நாடக போலீசிடம் ஒப்படைத்த தமிழக போலீஸ்!
தஞ்சாவூர்: ஹிஜாப் போராட்டத்தில் பிரதமர் மற்றும் நீதிபதிகள் குறித்து அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு தஞ்சை கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேச்சாளரை கர்நாடக மாநில போலீசார் கர்நாடகாவுக்கு அழைத்துச் சென்றனர்.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு PU கல்லூரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இஸ்லாமிய மாணவிகள் 6 பேர் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால் ஒரு மாதத்துக்கும் மேலாக வகுப்பறைக்கு வெளியே அமர வைக்கப்பட்டனர்.
கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணியக்கூடாது என்றும் சீருடையை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டது.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதனை அடிப்படையாக கொண்டே தொடர்ந்து மாணவிகளை அனுமதிக்கவில்லை என கல்லூரி நிர்வாகம் விளக்கமளித்தது. இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மாணவிகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் குந்தபுராவில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர எதிர்ப்பு தெரிவித்து ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பினர் காவித் துண்டு அணிந்து வகுப்புக்கு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேசிய பிரச்சனையான ஹிஜாப் தடை
இதனால் அந்த கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிகள் வெளியேற்றப்பட்டனர். இந்த பிரச்சனையும் போராட்டமும் மற்ற கல்லூரிகளுக்கும் பரவி கர்நாடகாவில் வன்முறையாக வெடித்தது. இந்த நிலையில் ஹிஜாபுக்கு ஆதரவாக வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ஏராளமானோர் போராட்டங்களை கையில் எடுத்தனர்.

கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு
இதனிடையே உடுப்பி மாணவிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்து வந்த கர்நாடக உயர்நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. அதில் ஹிஜாப் இஸ்லாத்தில் அத்தியாவசியமானது இல்லை என்றும், பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் என்ற கர்நாடக அரசின் உத்தரவில் தவறு இல்லை எனவும் கூறி மாணவிகளின் வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடர்ந்த மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் போராட்டம்
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களையும் எதிர்ப்பையும் பதிவு செய்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் ஹிஜாப் தடை செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து மாணவர் அமைப்புகள், இஸ்லாமிய இயக்கங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

அதிராம்பட்டினம் தவ்ஹீத் ஜமாத் போராட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடந்த 18 ஆம் தேதி ஹிஜாப் தடையை கண்டித்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இதில் பங்கேற்று பேசிய நெல்லையை சேர்ந்த பேச்சாளர் ஜமால் உஸ்மானி மீது நீதிபதி மற்றும் பிரதமர் குறித்து அவதூறாக பேசியதாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பெங்களூரு போலீசாரிடம் ஒப்படைப்பு
போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு சென்றுகொண்டிருந்த அவரை ஒரத்தநாடு அருகே போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்ட கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் மீது பெங்களூரு மாநில காவல்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இந்த நிலையில், கர்நாடக நீதிமன்றத்தில் ஜமால் உஸ்மானியை ஆஜர்படுத்துவதற்காக அவரை அழைத்து செல்ல கர்நாடக போலீசார் நேற்று தஞ்சாவூர் வந்தனர். அவர்களிடம் பலத்த பாதுகாப்புடன் தமிழ்நாடு போலீசார் ஜமால் உஸ்மானியை அனுப்பி வைத்தனர்.


Click it and Unblock the Notifications
