கவலைப் படாதீங்க.. தேர் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு சசிகலா ஆறுதல்.. அரசுக்கும் கோரிக்கை
களிமேடு கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார் சசிகலா.
தஞ்சாவூர்: களிமேடு கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார் சசிகலா. தமிழ்நாட்டில் தான் இந்த கோவில் உள்ளது, தமிழக அரசுக்கு சொந்தம் இல்லை என்றாலும், இந்த நிகழ்ச்சி நடந்தது தமிழ்நாட்டில் தான் என்று சசிகலா கூறியுள்ளார். இனி இதுபோல சம்பவங்கள் நடைபெறாமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Recommended Video
தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தேர் திருவிழாவில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக வருவாய்த்துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சசிகலா இரங்கல்
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சசிகலா இரங்கல் அறிக்கை வெளியிட்டிருந்தார். தஞ்சை,களிமேடு தேர் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த செய்தி மிகவும் அதிர்ச்சியடையவைக்கிறது. இதில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.இதில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன். இது போன்ற திருவிழாக்களின்போது சம்மந்தபட்ட அரசு அதிகாரிகள் உரிய பாதுகாப்பை அளித்திடவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் " என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தஞ்சாவூரில் சசிகலா
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து அறிந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் சசிகலா தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றார். அங்கு சென்ற சசிகலா களிமேடு கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

அரசு சொல்லக்கூடாது
செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசிற்கு இந்த கோவில் சொந்தம் இல்லை என்று அப்படி கூறக்கூடாது. தமிழ்நாட்டில் தான் இந்த கோவில் உள்ளது, தமிழக அரசுக்கு சொந்தம் இல்லை என்றாலும், இந்த நிகழ்ச்சி நடந்தது தமிழ்நாட்டில் தான். ஓட்டு போட்ட மக்கள் தான் எனவே இவர்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும். உரிய வரைமுறைகளை ஏற்படுத்தினால், வருங்காலங்களில் இதுபோல் உயிர் பலியை தடுக்க முடியும் என்றார்.

சேகர்பாபு விளக்கம்
விபத்து குறித்து சட்டசபையில் அமைச்சர் சேகர்பாபு, அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் தஞ்சை தேர் திருவிழாவை ஊர் மக்கள் நடத்தியுள்ளனர். சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த அமைச்சர், களிமேடு பகுதியில் நடைபெற்றது தேர்திருவிழாவும் அல்ல, அது தேரும் அல்ல, அது சப்பரம். திருவிழாவை ஊர் கிராம மக்களே ஒன்று கூடி நடத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளார். இதனையடுத்தே சசிகலா, அனைவரின் மீதும் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications