கார்த்திகை தீபத்தை முதலில் யார் ஏற்றுவது? தேனியில் தங்கதமிழ்ச் செல்வன்- ஓபிஎஸ் மகன் இடையே மோதல்
தேனி: தேனி மாவட்டத்தில் பெரியகுளம் அருகே உள்ள கோயிலில் கார்த்திகை தீபத்தை யார் ஏற்றுவது என்பது தொடர்பாக ஓபிஎஸ் குடும்பத்தினருக்கும் திமுகவின் தங்கதமிழ்ச் செல்வனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ளது கைலாசப்பட்டி. இங்கு மலை மேல் கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி பாழடைந்து காணப்படுகிறது.
கடந்த 2002 ஆம் ஆண்டு ஓபிஎஸ்ஸின் அரசியல் வளர்ச்சிக்கு பின்னர் அவரது குடும்பத்தினரின் முயற்சியால் இந்த கோயிலில் புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்ல சாலை வசதிகளும் அமைக்கப்பட்டது.

கோயில்
இப்படி புனரமைக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2012 ஆம் ஆண்டு கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது. கார்த்திகை தீபத் திருவிழாவின் போது அந்த கோயிலுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஓ பன்னீர் செல்வம் தனது சொந்த செலவில் செய்து வருகிறார். இதனால் 14 ஆண்டுகளாக ஓபிஎஸ் குடும்பத்தினர் இந்த கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றி வருகிறார்கள்.

இந்து சமய அறநிலையத் துறை
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும் கடந்த 14 ஆண்டுகளாக ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டுமே கார்த்திகை தீபத்திருவிழாவில் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தனர். இந்த சூழலில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இந்த ஆண்டு இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்தக் கோயிலில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத்தையொட்டி ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என திமுக தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கதமிழ்ச் செல்வன் பெரியகுளம் எம்எல்ஏ சரவணகுமார் உள்ளிட்டோர் இந்து அறநிலையத் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

கார்த்திகை தீபம்
எனினும் நேற்று கார்த்திகை தீபத்தை ஏற்றுவதற்காக வழக்கம் போல் ஓபிஎஸ் குடும்பத்தினர் அந்த கோயிலுக்கு செய்ய வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். மேலும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்து சமய அறநிலையத் துறையின் கோயில் செயல் அலுவலர்களை கொண்டு கார்த்திகை தீபம் ஏற்ற திமுகவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

யார் தீபத்தை ஏற்றுவது
இதில் குறிப்பிட்ட இந்த பெரியகுளம் பாலசுப்பிரமணியர் திருக்கோயிலின் செயல் அலுவலர் ராம திலகம் என்ற பெண் செயல் அலுவலரை கார்த்திகை தீபம் ஏற்ற திமுகவினர் மேடையேற்றினர். அப்போது ஓபிஎஸ்ஸின் இளைய மகன் ஜெயபிரதீப், அவருடைய குடும்பத்தினர் வந்திருந்தனர். அப்போது கோயில் பூசாரி அங்கு வந்த ஜெயபிரதீப்புக்கு பரிவட்டம் கட்டினார். இதற்கு தங்கதமிழ்ச் செல்வன் எதிர்ப்பு தெரிவித்தார்.

மோதல்
இதனால் தங்கதமிழ்ச் செல்வன்- ஜெயபிரதீப் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இந்த நேரத்தில் கோயில் பூசாரி கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக தீபத்துடனும் செயல் அலுவலர் கார்த்திகை தீபம் ஏற்ற தீப்பந்தத்துடனும் நின்றனர். இதனால் இருவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. அப்போது கார்த்திகை தீபம் ஏற்ற பூசாரி முற்பட்டார். இதனால் பூசாரிக்கும் திமுகவினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது. ஒரு வழியாக ஜெயபிரதீப் கையில் வைத்திருந்த விளக்கை வாங்கிய பூசாரி தீபத்தை ஏற்றினார்.

தங்கதமிழ்ச் செல்வன்- ஜெயபிரதீப்
இதனால் ஆத்திரமடைந்த தங்கதமிழ்ச் செல்வன் பெரியகுளம் எம்எல்ஏ சரவணகுமார்- ஓபிஎஸ் தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் ஓபிஎஸ் தரப்பினரை ஜெயபிரதீப் சமாதானம் செய்து தகராறு வேண்டாம், எல்லாத்தையும் தெய்வம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது என்றார். இதையடுத்து கைலாசநாதர் கோயிலுக்கு ஓபிஎஸ் வந்தார். அவர் ஒரு குடம் நெய்யை கொப்பரையில் ஊற்றி சுவாமி தரிசனம் செய்தார். இந்த சண்டையால் தீபம் ஏற்ற இரவு 7 மணியானதால் பக்தர்கள் அவதியடைந்தனர்.












Click it and Unblock the Notifications