பயம் விட்டுப்போச்சு! தப்பிக்கும் கேப்பில்.. காவலரின் தங்க செயினையும் பறித்துக்கொண்டு ஓடிய கைதிகள்

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தெக்கம்பட்டி மாவட்ட கிளைச் சிறையில் இருந்து நேற்று நள்ளிரவு 17 விசாரணைக் கைதிகள் தப்பியோடிய சம்பவம் தமிழகம் முழுவதையும் உலுக்கியுள்ளது. இந்தத் தப்பியோட்டத்தின் பின்னணியில் அடுத்தடுத்து வெளியாகி வரும் அதிர்ச்சித் தகவல்கள், சிறைத்துறையின் நிர்வாக சீர்கேட்டையும் பாதுகாப்புக் குளறுபடிகளையும் அப்பட்டமாக வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளன.

சிறைக் காவலர்களைக் கொடூரமாகத் தாக்கியது மட்டுமின்றி, ஒரு காவலர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினையும் கைதிகள் பறித்துச் சென்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

vijay theni

200 பேர் இடத்தில் 334 கைதிகள்: வெறும் 4 காவலர்களா?

தெக்கம்பட்டி சிறையில் நிகழ்ந்த இந்த விபரீதத்திற்கு அங்கு நிலவிய கடுமையான இடநெருக்கடியும் காவலர் பற்றாக்குறையும்தான் முக்கியக் காரணம் என்பது தெரியவந்துள்ளது:

இந்த மாவட்ட கிளைச் சிறைச்சாலை மொத்தம் 200 கைதிகளை மட்டுமே அடைத்து வைக்கும் கொள்ளளவு கொண்டது. ஆனால், அந்த அளவைத் தாண்டி சுமார் 334 கைதிகள் வரை மிகக் குறுகிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

300-க்கும் மேற்பட்ட கைதிகள் இருக்கும் ஒரு சிறை வளாகத்தில், இரவு நேரத்தில் குறைந்தது 17 முதல் 20 காவலர்களாவது சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும். ஆனால், நேற்று நள்ளிரவு பணியில் வெறும் 4 காவலர்கள் மட்டுமே இருந்துள்ளனர்.

334 கைதிகளைக் கட்டுப்படுத்த வெறும் 4 காவலர்களை மட்டுமே பணியில் அமர்த்திய சிறை நிர்வாகத்தின் அஜாக்கிரதையான முடிவுதான், இத்தனை பெரிய விபரீதத்திற்கு வழிவகுத்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

'வலிப்பு' நாடகம்... தலைக்காயம்.. பறிபோன தங்கச் செயின்

நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில், ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த 17 கைதிகளும் திட்டமிட்டு கூச்சலிட்டனர். தங்களுடன் இருந்த சக கைதி ஒருவருக்கு வலிப்பு வந்துவிட்டதாகக் கூறி அவர்கள் போட்ட நாடகத்தை உண்மையென நம்பி, பணியில் இருந்த இரண்டாம் நிலைக் காவலர் தங்கப்பாண்டி கதவைத் திறந்து மருத்துவ உதவிக்காக உள்ளே சென்றார்.

அவர் உள்ளே நுழைந்த நொடியில், வலிப்பு வந்ததாக நடித்த நபர் உட்பட 17 பேரும் ஒன்றாகப் பாய்ந்து அவரைத் தாக்கினர். காவலர் தங்கப்பாண்டியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த கொடூரத் தாக்குதலின் போது, காவலர் தங்கப்பாண்டி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினையும் அந்தக் கும்பல் நைசாகப் பறித்துக்கொண்டது. சக காவலர்கள் தடுத்து நிறுத்துவதற்குள், கதவுகளைத் திறந்து கொண்டு 17 கைதிகளும் சிறை வளாகத்தை விட்டு வெளியே தப்பி ஓடிவிட்டனர். படுகாயமடைந்த காவலர் தங்கப்பாண்டி உடனடியாக மீட்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

17 தனிப்படைகள்... 4 பேர் சிக்கினர்

தப்பியோடிய 17 கைதிகளையும் பிடிக்க தலா ஒரு கைதிக்கு ஒரு தனிப்படை வீதம் மொத்தம் 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தென் மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி மற்றும் தேனி எஸ்.பி பிரவீன் கவுதம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று முகாமிட்டுள்ளனர்.

எல்லைகளில் முற்றுகை: தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட எல்லைகள் மற்றும் தமிழக-கேரள எல்லைகளில் 16-க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகனத் தணிக்கை நடந்து வருகிறது.

4 பேர் கைது: நள்ளிரவு முதல் விடிய விடிய நடைபெற்ற தீவிர தேடுதல் வேட்டையில், சிறைக்குப் பின்னால் இருந்த வனப்பகுதி மற்றும் பல்வேறு இடங்களில் பதுங்கியிருந்த பிரவீன், சிலம்பரசன், ராஜ்குமார், ராஜா சிக்கந்தர் ஆகிய 4 கைதிகள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமறைவாக உள்ள மீதமுள்ள 13 கைதிகளைப் பிடிக்க வனத்துறையினர் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

நிர்வாகக் குறைபாடுகளுக்கு யார் பொறுப்பு?

சமீபத்தில் சென்னை புழல் மத்திய சிறையில் 2 கைதிகள் தப்பிய அதிர்ச்சி விலகுவதற்குள், தற்போது தேனியில் காவலரைத் தாக்கி நகையையும் பறித்துக்கொண்டு 17 பேர் தப்பியோடியிருப்பது தமிழக சிறைத்துறையின் பாதுகாப்பில் இருக்கும் ஓட்டைகளைத் தெளிவாகக் காட்டுகிறது.

200 பேர் இருக்கும் இடத்தில் 334 பேரை அடைத்துவிட்டு, இரவுப் பாதுகாப்பிற்கு வெறும் 4 பேரை மட்டுமே பணியமர்த்தியது ஏன்? சிறைக் காவலர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்களோ அவசர உதவி பொத்தான்களோ (Alarm systems) ஏன் வழங்கப்படவில்லை? என்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன. வெறும் தனிப்படைகள் அமைத்து கைதிகளைத் தேடுவதோடு கடமை முடிந்துவிடாது; சிறைகளில் நிலவும் இடநெருக்கடியைச் சரிசெய்து, போதிய காவலர்களை நியமித்து பாதுகாப்பை பலப்படுத்தாவிட்டால் இதுபோன்ற விபரீதங்கள் தொடர்கதையாகிவிடும் என்பதே சமூக ஆர்வலர்களின் எச்சரிக்கையாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+