புதிய கல்விக் கொள்கை.. 2 ஆண்டுகளில் பீகாரில் நடந்த மாற்றம்.. டேட்டாவுடன் சொன்ன சபாநாயகர் அப்பாவு!
நெல்லை: தேசிய கல்விக் கொள்கை விவகாரம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் தமிழக அரசு இடையில் காரசார மோதல் ஏற்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தேசிய கல்விக் கொள்கையில் இணைந்தால் மட்டுமே நிலுவையில் உள்ள கல்விக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் இன்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மாணவர்களின் கல்வி விவகாரத்தை அரசியலாக்காதீர்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருந்தார். இதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் தரப்பில், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்று பதில் அளித்தார்.

இந்த நிலையில் இந்தி திணிப்பு மற்றும் தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக சபாநாயகர் அப்பாவு பேசுகையில், இந்த விவகாரத்தை தமிழக அரசு அரசியலாக்கவில்லை. 2022ஆம் ஆண்டு அனைவருக்கும் கட்டாயக் கல்வி கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்மூலமாக தமிழ்நாட்டில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள், 40 லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்.
இந்த திட்டத்தில் மத்திய அரசு 60 சதவிகித நிதியும், மாநில அரசு 40 சதவிகித நிதியும் வழங்குகின்றன. அதில் மத்திய அரசு அளிக்க வேண்டிய ரூ.2,151 கோடியை விடுவிக்காதது ஏன் என்றுதான் தமிழக அரசு கேள்வி எழுப்பி வருகிறது. அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு 1 முதல் 8 வரை படிக்கும் மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் கல்வி கொடுப்பதே கட்டாயக் கல்வி.
இதற்கும் தேசிய கல்விக் கொள்கைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதேபோல் பிஎம் ஸ்ரீ திட்டம் தனி. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் 3 திட்டத்தையும் இணைத்து, இதில் கையெழுத்து போட்டால் மட்டுமே நிதி விடுவிப்போம் என்று கூறுகிறார்கள். தேசிய கல்விக் கொள்கையில் 3,5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளில் தேர்ச்சி பெறவில்லை என்றால், அவர்களின் தாய், தந்தை செய்யும் தொழிலுக்கு செல்ல வேண்டும்.
அதனை தமிழக அரசு ஏற்கவில்லை. இதனை 2022ஆம் ஆண்டு பீகார் மாநிலம் ஏற்றுக் கொண்டது. அதற்கு முன்பாக பள்ளிக் கல்விக்கு வந்தவர்களில் 51 சதவிகிதம் பேர் 12ஆம் வகுப்பு வரை வந்துள்ளார்கள். ஆனால் புதிய கல்விக் கொள்கை ஏற்றுக் கொண்ட பின், 12ஆம் வகுப்புக்கு 31 சதவிகிதம் மாணவர்களே வந்துள்ளார்கள். மீதமுள்ள 20 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெறாத மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள்.
அதேபோல் ஏழை மாணவர்களை கூலி தொழிலுக்கு அனுப்பும் திட்டம்தான் புதிய கல்விக் கொள்கை. அதேபோல் பிஎம்ஸ்ரீ திட்டம் என்பது இந்தியா முழுவதும் சுமார் 16 ஆயிரம் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் மிகச்சிறந்த அரசுப் பள்ளிகளை தேர்வு செய்து பிஎம்ஸ்ரீ என்ற ஸ்டிக்கரை ஒட்டுவார்கள். அந்த ஸ்டிக்கரை ஒட்டி இந்த பள்ளியில் பிஎம்ஸ்ரீ பாடம் நடத்தப்படும் என்று அறிவிப்பார்கள்.
அப்படியான பள்ளிக் கூடங்களில் 1 முதல் 5 வகுப்பு வரை தமிழ் படிக்கலாம். அதன்பின் மேல் வகுப்புகளில் இந்தி மற்றும் சமஸ்கிருதம் படிக்க வேண்டும். இது நம் மொழியை அழித்துவிடும். ஒரு கட்டத்தில் அப்படியான பள்ளிகளுக்கு நிதியை கொடுக்க முடியவில்லை என்றால், அதானி போன்ற தொண்டு நிறுவனங்களிடம் கொடுத்துவிடுங்கள் என்பார்கள். இந்த திசையில் செல்வதற்காக பிஎம்ஸ்ரீ திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கல்விக்கான நிதியை கொடுக்காமல் இருப்பது சிறுபிள்ளைத்தனமானது. அரசியலமைப்பு சட்டப்படி தமிழக அரசுக்கான நிதியை மத்திய அரசு கொடுக்க வேண்டும். இதில் யார் அரசியல் செய்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இதனிடையே குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், நிலத்தை வாங்கினாலே மொழி அழிந்துவிடும்.
மொழியை கற்றால் இன்னொரு மொழியாது என்று கூறுகிறார். 1951 ராஜஸ்தான் மக்கள் தொகையில் 79 சதவிகிதம் பேர் ராஜஸ்தான் தாய்மொழியைதான் பேசுகிறார்கள். ஆனால் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 89 சதவிகிதம் பேர் இந்தியை பேசுகிறார்கள். இதன் மூலமாக என்ன நடக்கும் என்று புரிந்து கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications