திருநெல்வேலி தூத்துக்குடியில் ‘வேர்’..ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு இதுதான் காரணம்! டாக்டர் கிருஷ்ணசாமி பகீர்
திருநெல்வேலி : ஆம்ஸ்ட்ராங் படுகொலை முன் விரோதத்தால் நடந்ததாக காவல்துறை கூறியிருந்தாலும் கூலிப்படை காரணமாகவே நடந்துள்ளது எனவும், கூலிப்படைக் கலாச்சாரத்திற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன் தினம் அவரது வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதை அடுத்து அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அரசு பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது.
உடலுக்கு வழக்கறிஞர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்படுகிறது. சரணடைந்த பொன்னை பாலு சுரேஷின் சகோதரர் என்பது தெரிய வந்திருக்கும் நிலையில் ஆற்காடு சுரேஷின் நினைவு நாள் அல்லது பிறந்த நாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொள்ள திட்டமிட்டதாகவும் தற்போது பிறந்த நாளிலேயே அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆனால் உண்மை குற்றவாளிகளுக்கும் தற்போது சரணடைந்தவர்களுக்கும் தொடர்பில்லை என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். இந்த கருத்தை பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் கூறி இருக்கின்றனர். மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி, உண்மைக் குற்றவாளிகளான கொலையாளிகளை கண்டறிய வேண்டுமென கோரிக்கை குரல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலை முன் விரோதத்தால் நடந்ததாக காவல்துறை கூறியிருந்தாலும் கூலிப்படை காரணமாகவே நடந்துள்ளது எனவும், கூலிப்படைக் கலாச்சாரத்திற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்," பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் படுகொலை சம்பவம் வேதனைக்குரியது.
கூலிப்படையால் படுகொலைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை முன் விரோதத்தால் நடந்ததாக காவல்துறை கூறியிருந்தாலும் கூலிப்படை காரணமாகவே அந்தக் கொலை நடந்துள்ளது. அண்மை காலமாக தொடர்ந்து கூலிப்படையால் கொலைகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் கூலிப்படை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. கூலிப்படையின் வேர் எங்கிருந்து வருகிறது என்று கண்டறிந்து சட்டம் ஒழுங்கை சரி செய்ய வேண்டும்.
காவல்துறை நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பது அரசியல் அழுத்தம் காரணமாக இருக்கிறதா என்ற கேள்வியின் எழுகிறது. தமிழகத்தில் அதிகரித்து வரும் கூலிப்படை கலாச்சாரத்திற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்கள் தான் கூலிப்படை உருவாகும் இடங்களாக உள்ளது. கொலை குற்றம் சாட்டப்பட்டவர்களின் ஆதரவாக அரசியல் அமைப்புகள் செயல்படுவதால் தான் பொதுமக்கள் அச்சப்படும் நிலை உருவாகி வருகிறது. கூலிப்படையினர் யாராக இருந்தாலும் அவர்களை வேரோடு அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications