தமிழ்நாட்டிற்கு குட்நியூஸ்.. சரியாக நேரம் பார்த்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு.. நல்ல முன்னெடுப்பு
திருநெல்வேலி: தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகத்தியர் மலைப்பகுதியை யானைகள் காப்பகமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே 4 யானைகள் காப்பகம் உள்ள நிலையில், புதியதாக மற்றொரு காப்பகம் உருவாக்கப்பட்டுள்ளது.

சுமார் 1,197 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்த அகத்தியர் மலைப்பகுதி யானைகளுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதியாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச யானைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்ததாவது, "இந்தியாவிற்கு மேலும் ஒரு புதிய யானை காப்பகமாக 1,197 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட தமிழ்நாட்டின் அகத்தியர் மலை பகுதியை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்" என கூறியிருந்தார். ஏற்கெனவே தமிழ்நாட்டில் 4 யானைகள் காப்பகம் உள்ள நிலையில், புதியதாக மற்றொரு காப்பகம் உருவாக்கப்பட்டிருப்பது விலங்கு ஆர்வலர்களை குஷிப்படுத்தியுள்ளது.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்விட்டில், "தமிழ்நாட்டின் ஐந்தாவது யானைகள் காப்பகமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அகத்தியர் மலை அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். வன சுற்றுச்சூழலை சமநிலைப்படுத்துவதில் யானைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவை கம்பீரமான பாலூட்டிகள். இயற்கையின் சொத்துகள். நாம் எப்பாடுபட்டாவது அதனைப்பாதுகாக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
யானைகள் 200 வகையான தாவரங்களை உட்கொள்வதாகச் சொல்கிறார்கள். ஒருநாளைக்கு ஒரு யானைக்கு 200 கிலோ உணவும், 200 லிட்டர் தண்ணியும் தேவை. குறிப்பாக சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் சுமார் 700 யானைகள் இருப்பதாகப் புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. இந்த 700 யானைகளுக்கும் தினமும் தேவையான உணவும், தண்ணீரும் கிடைக்கின்றனவா என்பது சந்தேகம்தான். யானைகள், உணவுக்காக ஒருநாளைக்கு 16 மணிநேரம் செலவிடுகின்றன.
உணவைத் தேடி ஒருநாளைக்கு 190 கி.மீ வரை பயணம் செய்கின்றன. இப்படி அலைந்தும் எதுவும் கிடைக்காத பட்சத்தில்தான் யானைகள் கோபம் கொள்கின்றன. தாய்லாந்து நாட்டைப் போல வனப்பகுதிகள் மற்றும் வன எல்லைகளில் அரசே அதிகளவில் தாவரங்களை வளர்க்க வேண்டும் என வன விலங்கு ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் புதிய யானை காப்பகத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications