ஐயா.. ஆல் பாஸ் செய்யுங்க! முதல்வர் ஸ்டாலினிடம் பிளஸ் 2 மாணவர்கள் கோரிக்கை! பதில் என்ன தெரியுமா?
ஐயா பிளஸ் 2 எப்படியாவது பாஸ் செய்து விடுங்கள் என்று 12ஆம் வகுப்பு மாணவர்கள் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஆல்பாஸ் அறிவிக்கப்பட்டால் மதிப்பெண் எப்படி கணக்கிடுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருவள்ளூர்: கொரோனா பரவல் காரணமாக பிளஸ் 2 மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஐயா.. பிளஸ் 2 எப்படியாவது ஆல் பாஸ் போட்டு விடுங்கள் என்று முதல்வரிடம் மாணவர்கள் கோரிக்கை வைக்க ஆரம்பித்துள்ளனர். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அரசு ஆல்பாஸ் அறிவித்தாலும் மதிப்பெண்கள் எப்படி கணக்கிடுவது என்ற குழப்பம் எழுந்துள்ளது.
Recommended Video
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டு காலமாக அதிகம் பாதிக்கப்பட்டது பள்ளி மாணவர்கள்தான். நேரடி வகுப்புகள் நடைபெறாமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. கடந்த 2020ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வுகள் முடிந்த பின்னர் கொரோனா லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. அந்த ஆண்டு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் சிக்கல் இல்லாமல் இருந்தது.
அதே நேரத்தில் 1 முதல் பிளஸ் 1 படித்த மாணவர்களுக்கு ஆல்பாஸ் அறிவிக்கப்பட்டது. கடந்த 2020 - 2021ஆம் கல்வியாண்டில் கொரோனா இரண்டாவது அலை பரவத் தொடங்கியதை அடுத்து 1 முதல் பிளஸ் 2 வரைக்கும் ஆல்பாஸ் போடப்படும் என்று அறிவித்தார் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதனையடுத்து மாணவர்கள் கட் அவுட் வைத்து கொண்டாடினர்.

ஆல்பாஸ் அறிவிப்பு
கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழில் தேர்ச்சி என்று மட்டும் அச்சிடப்பட்டது.
கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் பிப்ரவரி மாதத்தில் நடைபெற்றன. பிளஸ் 2வில் 100 சதவிகிதம் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது.

பிளஸ் 2 மதிப்பெண் எப்படி
மாணவர்கள் தேர்வு எழுதாத காரணத்தால் எஸ்.எஸ்.எஸ்.சி. பொதுத் தேர்வில் இருந்து 50 சதவிகித மதிப்பெண்களும், +1 பொதுத் தேர்வில் இருந்து 20 சதவிகிதமும், +2 செய்முறை தேர்வில் 30 சதவிகிதம் என 100 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டு மதிப்பெண் வழங்கப்பட்டது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு கட்டாயம்
இந்த ஆண்டு பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி அளிப்பதும் மதிப்பெண் வழங்குவதும் சிரமமான காரியம். இது அவர்கள் கல்லூரி வாழ்க்கையை தொடர்வதில் சிக்கலைக் கொடுக்கும் என்று கல்வியாளர்கள் கருத்து கூறியுள்ளனர். மாணவர்கள் கல்லூரி படிப்பைத் தேர்வு செய்ய மதிப்பெண்கள் முக்கியம் என்பதால் தேர்வு நடத்த வேண்டும் என்று அப்போது கல்வியாளர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர்.

ஜனவரி 19 ஆம் தேதி திருப்புதல் தேர்வு
இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நடப்பாண்டு பொதுத் தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என்றும் அதற்கு முன்னதாக ஜனவரி மூன்றாவது வாரத்தில் முதல் திருப்புதல் தேர்வும், மார்ச் இறுதியில் இரண்டாவது திருப்புதல் தேர்வும் நடைபெறும் என்று கூறினார். அதற்கேற்ப தேர்வு அட்டவணையும் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. ஜனவரி 19ஆம் தேதி முதல் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜனவரி 31 வரை விடுமுறை
இந்த நிலையில் கொரோனா பரவல் மூன்றாவது அலையும் ஓமிக்ரான் வைரஸ் பரவலும் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் ஜனவரி 31ஆம் தேதி வரைக்கும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. திருப்புதல் தேர்வும் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்த ஆண்டும் 12-ம் வகுப்புத் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர்.

புன்னகையில் பதில் சொன்ன முதல்வர்
இந்தமுறை மாணவர்கள் நேரடியாகவே முதல்வர் மு.க.ஸ்டாலினிடமே கோரிக்கைவைத்துள்ளனர். திருவள்ளூருக்குச் சென்றுவிட்டு முதல்வர் சென்னை திரும்பும் வழியில் சாலையில் நின்று கொண்டிருந்த 12ஆம் வகுப்பு மாணவர்கள், மொத்தமாக கத்தினர். ‘ஐயா.. பிளஸ் 2 எப்படியாவது பாஸ் போட்டு விடுங்கள் என்று கோரிக்கை வைத்தனர். அதைக் கேட்ட முதல்வரோ, சிரித்துக் கொண்டே சென்றார். அந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்று மாணவர்களுக்கு தெரியவில்லை. ஆனாலும் மிக முக்கியமான அறிவிப்பு வெகு விரைவில் வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

மதிப்பெண்கள் கணக்கிட முடியுமா?
கொரோனா பரவல் அதிகரித்து ஒருவேளை மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் போனால் அரசு பிளஸ் 2 மாணவர்களுக்கும் ஆல் பாஸ் அறிவித்துதான் ஆக வேண்டும். அப்படி அறிவிக்கும் பட்சத்தில் மதிப்பெண்கள் எப்படி கணக்கிடுவது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த ஆண்டு பிளஸ் 2 எழுதும் மாணவர்கள் கடந்த 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதாமலேயே ஆல்பாஸ் செய்யப்பட்டவர்கள்தான். அவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் உள்ளது. அதே நேரத்தில் பிளஸ் 1 தேர்வு எழுதாமல் ஆல்பாஸ் செய்யப்பட்டதால் மதிப்பெண் பட்டியல் எதுவும் கொடுக்கப்படவில்லை. செய்முறை தேர்வுகள் எப்போது நடக்கும் என்ற அறிவிப்பும் வெளியாகவில்லை எனவே நடப்பாண்டு பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடுவதிலும் சிக்கல் உருவாகியுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இது பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
