நாகதோஷம் கழிக்க பூஜைக்கு சென்ற.. கல்லூரி மாணவி மர்ம மரணம்.. சாமியார் முனுசாமி கைது
திருவள்ளூர்: தோஷம் கழிக்கப் பூஜைக்குச் சென்ற கல்லூரி மாணவி, சாமியாரின் ஆசிரமத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் தனிப்படை போலீசார் சாமியார் முனுசாமியைக் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூரை அடுத்த செம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(வயது 45). இவருக்கு நிர்மலா என்ற மனைவியும், ஹேமா மாலினி ( 22) என்ற மகளும் உள்ளனர்.
இந்தநிலையில் ஹேமமாலினி திருவள்ளூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார்.

நாகதோஷம்
ஹேமமாலினிக்கு நாகதோஷம் உள்ளதாகக் கூறி அவரை அமாவாசை மற்றும் பவுர்ணமி தினத்தில் பூஜை செய்தால் தோஷம் தீரும் என அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூறினார்கள். இதைத் தொடர்ந்து கடந்த 14ம் தேதியன்று ஹேமமாலினியின் உறவினர்கள் அவரை திருவள்ளூரை அடுத்த வெள்ளாத்து கோட்டையில் உள்ள முனுசாமி என்பவரிடம் பூஜை செய்யச் சென்றார்கள். இரவு அங்கேயே தங்க வேண்டும் எனக் கூறியதைத் தொடர்ந்து ஹேமாமாலினி தனது உறவினர்களுடன் தங்கினார்.

சாமியார் தற்கொலை
அவருக்கு அன்று இரவு பூஜை செய்த நிலையில் மறுநாள் ஹேமாமாலினி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மாணவியின் பெற்றோர்கள் பென்னலூர்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தனிப்படை போலீசார் சாமியார் முனுசாமியை கைது செய்துள்ளனர்.

கதறிய பெற்றோர்
முன்னதாக நேற்றைய தினம் உயிரிழந்த ஹேமமாலினியின் தந்தை ராமகிருஷ்ணன், தாயார் நிர்மலா மற்றும் உறவினர்கள் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றனர். அங்கு தன் மகளின் சாவுக்கு காரணமான ஆசிரம சாமியார் முனுசாமி அவரது மனைவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயிரிழந்த மாணவியின் பெற்றோர் கதறி அழுதனர். அப்போது அவர்கள் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் காலில் விழுந்து அழுதனர்.

திடீர் பரபரப்பு
இச்சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களுக்குச் சமாதானம் கூறிய ஆட்சியர், இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன், பின்னரே அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் நேற்று திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications