அதிமுகவை அழித்துவிட்டது பாஜக.. டெல்லியிடம் சரணடையும் முதல்வர் வேண்டுமா? ராகுல் காந்தி ஆவேசம்!
திருவள்ளூர்: மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்ற பெயரில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்க பாஜக முயற்சித்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாடு மக்களுக்கும் என் இதயத்தில் எப்போதும் தனித்த இடம் உண்டு என்று கூறிய ராகுல் காந்தி, எவ்வளவு தைரியம் இருந்தால் தமிழ் மண், மொழி, கலாச்சாரம் மீது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவினர் தாக்குதல் நடத்துவார்கள் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி முதல்முறையாக பிரச்சாரத்திற்கு வந்துள்ளார். பொன்னேரி நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதில் ராகுல் காந்தி பேசுகையில், என்னுடைய பூர்வீகம் காஷ்மீர் தான். எப்போதெல்லாம் காஷ்மீர் செல்கிறேனோ, அப்போதெல்லாம் சொந்த வீட்டிற்கு வந்ததை போன்ற உணர்வு வரும். அதேபோல் தமிழ்நாட்டிற்கு வரும் போதும் உணர்வு ஏற்படுகிறது. இயற்கையாகவே தமிழ் மக்களுடன் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. அதேபோல் தமிழர்களுக்கு என் மனதில் எப்போதும் தனித்த இடம் உண்டு.
நான் தமிழ்நாட்டில் பிறக்கவில்லை. ஆனால் தமிழ் மண்ணுடன் நெருக்கமான உறவு உள்ளது. எவ்வளவு தைரியம் இருந்தால் தமிழ் மண், மொழி, கலாச்சாரம் மீது ஆர்.எஸ்.எஸ்., பாஜக தாக்குதல் நடத்துவார்கள்? நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் திட்டத்துடனே தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்பட்டது. மகளிர் இட ஒதுக்கீடு என்ற போர்வையில் தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வந்தார்கள்.
இந்தியா என்ற சிந்தனையை காப்பதற்காக மசோதாக்களை வீழ்த்தினோம். இந்தியா என்பது பல மாநிலங்களின் ஒன்றியம். ஒவ்வொரு மாநிலத்தின் குரலும் எதிரொலிக்க வேண்டும். ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு கலாச்சாரம், ஒரே மதம் என்று கூறும் போது பிரதமர் மோடி நமது அரசியலமைப்பை தாக்குகிறார். பாஜக, ஆர்.எஸ்.எஸ். என்ன செய்ய நினைக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் கலாச்சாரம், மொழி, பண்பாட்டை அழிக்க பாஜக, ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தை அனுமதிக்க மாட்டோம். தமிழர்கள் யார் என்பதை பாஜக இன்னும் புரிந்து கொள்ளவில்லை. தமிழுக்கும், தமிழர்களுக்கும் பல ஆயிரம் ஆண்டு வரலாற்று பாரம்பரியம் உள்ளன என்பது பாஜகவுக்கு தெரியவில்லை. டெல்லியில் இருந்து தமிழ்நாட்டை ஆள பாஜகவுக்கு இங்கு ஒரு கூட்டாளி வேண்டும். மோடி எப்படி டிரம்ப்பிடம் சரணடைந்தோ, அதுபோல் டெல்லியிடம் சரணடையும் முதல்வர் தமிழ்நாட்டில் வேண்டும் என்று பாஜக நினைக்கிறது.
மோடி, அமித்ஷா உத்தரவை செயல்படுத்தும் ஒருவரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக்க பாஜக நினைக்கிறது. டெல்லியிடம் சரணடையும் முதல்வர் வேண்டுமா? தமிழ்நாட்டில் அதிமுக என்ற கட்சியே இல்லாமல் போய்விட்டது. இன்னும் சொல்லப் போனால் அதிமுகவை மோடியும், அமித்ஷாவும் விழுங்கி வருகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு மகளிருக்கும் ரூ.2 ஆயிரம் உரிமைஹ் தொகை அளிக்கப்படும்.
முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். கல்லூரி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை அளிக்கப்படும். தமிழ் மொழியையும், தமிழ் மண்ணையும் பாஜகவால் ஒருநாளும் தொட முடியாது. தமிழ்நாட்டின் பெரியாரின் கொள்கைகளையும், சமூக நீதி கொள்கையையும் தகர்க்க சதி செய்கிறார்கள் என்று விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications