"நடிகையை" காதலித்த துணை நடிகர்.. குறுக்கே வந்த மாப்பிள்ளை.. "லொகேஷன் ஷேர்".. திருவள்ளூர் பரபரப்பு
துணை நடிகையை காதலித்ததால், துணை நடிகரை கடத்தி சென்று துன்புறுத்தியிருக்கிறார்கள்
திருவள்ளூர்: துணை நடிகையை காதலித்ததால், துணை நடிகரை கடத்தி சென்று சித்ரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் கிளப்பிவிட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் பம்பை சிந்து நகர் சேக்காடு பகுதியை சேர்ந்தவர் முத்துபிரசாத்.. 26 வயதாகிறது.. சினிமாவில் துணை நடிகராக உள்ளார்.
இவருக்கு ஆர்த்தி என்ற துணை நடிகை பழக்கமானார்.. இவர் பாண்டிச்சேரி பகுதியை சேர்ந்தவர்.. ஆர்த்திக்கு 25 வயதாகிறது. அடிக்கடி சென்னையில் ஷூட்டிங் என்பதால், பூந்தமல்லியில் உள்ள அவருடைய அக்கா மோனி என்பவர் வீட்டில் தங்கி வந்துள்ளார்.

துணை நடிகர்
இங்கிருந்தபடியே, ஷூட்டிங்கிற்கு சென்று வந்துள்ளார்.. அப்போதுதான், தன்னுடன் துணை நடிகராக பணிபுரியும் முத்து பிரசாத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து, ஆர்த்தியும் - முத்து பிரசாத்தும் காதலித்து வந்துள்ளனர்.. ஆனால், ஆர்த்திக்கு, அவருடைய வீட்டில் திருமண ஏற்பாடு செய்துள்ளனர்.. முத்து பிரசாத்துடன் பழக்கம் ஏற்படுவதற்கு முன்பேயே, ஜெகன் என்பவருடன் ஒன்றரை வருடத்திற்கு முன்பு இந்த நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.. எனினும், இந்த திருமணத்தில் ஆர்த்திக்கு விருப்பம் இல்லை. அதனால்தான், துணை நடிகர் முத்து பிரசாத் என்பவரை காதலித்து வந்துள்ளார்..

துணை நடிகை
ஒருகட்டத்தில் தன்னுடைய காதலை வீட்டில் சொன்ன ஆர்த்தி, ஜெகன் என்பவருடன் நடக்கவிருக்கும் திருமண ஏற்பாட்டை நிறுத்திவிடுமாறும், முத்து பிரசாத்துக்கே தன்னை திருமணம் செய்து வைக்குமாறும் கேட்டுள்ளார்.. இதனால் அதிர்ந்து போன ஆர்த்தி குடும்பத்தினர், முத்துபிரசாத்திடம் பேச வேண்டும் என்று சொல்லி வீட்டுக்கு அழைத்துள்ளனர்.. ஆனால் முத்துபிரசாத் பயந்துவிட்டார்.. வீட்டுக்கு வர முடியாது என்று சொல்லி மறுத்துவிட்டார். இதனிடையே, ஆர்த்தியின் காதல் விவகாரம், நிச்சயம் செய்யப்பட்ட ஜெகனுக்கு தெரியவந்தது.. ஆத்திரம் அடைந்த ஜெகன், ஆர்த்தியை அடித்து நொறுக்கியுள்ளார்.. கழுத்தையும் நெரித்து சித்ரவதை செய்து, முத்து பிரசாத்திற்கு அதை போன் போட்டு சொல்லியுள்ளார்.

கலெக்டர் ஆபீஸ்
இதற்கு பிறகுதான், 3 தரப்பிலும், பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று முடிவானது.. ஆனால், ஆர்த்தி வீட்டிற்கு செல்ல இப்போதும் மறுத்தார் முத்துபிரசாத்.. தன் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து கொண்டே இருந்தார்.. அதனால், பொதுஇடத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று முடிவானது.. அதன்படி, கடந்த 7ம் தேதி, திருவள்ளூர் கலெக்டர் ஆபீசில் அனைவரும் ஒன்றுகூடினர்.. முத்துபிரசாத், தன்னுடன் நண்பர் அரவிந்தன் என்பவரையும் துணைக்காக உடன் அழைத்து வந்திருந்தார்.. எனினும் முத்துபிரசாத் பயந்ததுபோலவே நடந்துவிட்டது..

கத்தி வீச்சரிவாள்
அங்கு வந்த ஜெகன், முத்துபிரசாத் மற்றும் அவரது நண்பரை காரில் ஏற்றிக்கொண்டு, பூண்டி ஏரி அருகே பெண்ணலூர்பேட்டை காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்றுவிட்டனர்.. முத்து பிரசாத்தை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக கட்டை மற்றும் கைகளால் தாக்கியுள்ளனர்.. பெட்ரோல் கேன், கத்திகளை வைத்துக்கொண்டு கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டி தாக்கியுள்ளனர்... அடி தாங்க முடியாமல் முத்துபிரசாத் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்... இதையெல்லாம் பார்த்து முத்துபிரசாத் நண்பர் அரவிந்தன் பதறிப்போய்விட்டார்..

"லொகேஷன் ஷேர்"
உடனே முத்து பிரசாத் சகோதரருக்கு, தாங்கள் இருக்கும் இடத்தை "லொகேஷன் ஷேர்" செய்துள்ளனர்.. அப்போது சந்தேகம் அடைந்த உறவினர்கள், முத்து பிரசாத்தை தேடி வந்தனர்.. சம்பவ இடத்துக்கு அவர்கள் வருவது தெரிந்ததும் ஜெகன் தரப்பினர், முத்து பிரசாத்தை சட்டை இல்லாமல் பைக்கில் ஏற்றி, வழியெல்லாம் கட்டையால் முதுகில் பலமாக தாக்கிக் கொண்டே வந்துள்ளனர்.. பிறகு ஒரு இடத்தில் முத்து பிரசாத்தை தூக்கி போட்டுவிட்டும் சென்றுள்ளனர். இதற்கு பிறகுதான், உறவினர்கள் முத்துபிரசாத்தை கண்டுபிடித்து மீட்டதுடன், பெண்ணலூர்பேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்..

துணை நடிகை
முத்துபிரசாத்தை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில், அவர் இப்போது சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்... மேலும் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பெண்ணலூர்பேட்டை போலீசில் புகாரும் அளித்துள்ள நிலையில் விசாரணை ஆரம்பமாகி உள்ளது.. துணை சினிமா நடிகையை காதலித்ததால், பெண் விட்டார் துணை நடிகரை காரில் கடத்தி சென்று கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications