பாலைவனத்தில் படுக்கை.. சோறு தண்ணீர் இல்லை.. குவைத்தில் தமிழக இளைஞருக்கு டார்ச்சர்.. மனைவி கண்ணீர்
திருவாரூர்: குவைத் நாட்டிற்குச் சென்று 4 நாட்களிலே சுட்டுக் கொல்லப்பட்டவரின் உடலை சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரி கூத்தாநல்லூரில் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட லட்சுமாங்குடி பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன். இவரது மனைவி வித்யா . இந்த தம்பதியினருக்கு நித்திஷ் மற்றும் ரித்தீஷ் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
முத்துக்குமரன் தனது குடும்ப சூழல் கருதி வேலைக்கு செல்வதற்காக கடந்த 2 ஆம் தேதி குவைத் நாட்டுக்கு சென்றார். அங்கு சென்று வேலைக்கு சேர்ந்ததும் வேலை கடினமாக உள்ளதாக குடும்பத்தினரிடம் கூறி வந்துள்ளார்.
ரூ25 ஆயிரத்துக்கு கைரேகை மாற்று அறுவை சிகிச்சை.. குவைத் விசா பெற நடந்த மோசடி.. பரபர பின்னணி தகவல்!

குவைத் நாடு
இந்த நிலையில் குவைத் நாட்டிற்கு சென்று நான்கு நாட்களிலேயே அதாவது 7-ஆம் தேதி முத்துக்குமரன் உயிரிழந்தார் என்ற தகவலை முத்துக்குமரனின் குடும்பத்தினருக்கு ஏஜென்ட் மூலம் தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்ததில் முத்துக்குமரன் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டது.

மனைவியிடம் பேசிய முத்துக்குமரன்
பாலைவனத்தில் ஆடு மாடுகளை மேய்க்க சொல்லி கொடுமைப்படுத்தியதாகவும் தண்ணீர், உணவு இல்லாமல் தவித்து வருவதாகவும் தன்னை இந்தியாவுக்கே அனுப்பிவிடுங்கள் என ஏஜென்டிடம் கூறிய போது அவர் தான செய்வதாகவும் கூறியதாக முத்துக்குமரன் தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதையடுத்து தனது ஊரை சேர்ந்த நண்பரிடமும் போனில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறிய போதே முத்துக்குமரனின் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முத்துக்குமரனை அந்த நபர் பல முறை தொடர்பு கொண்டும் லைன் கிடைக்கவில்லையாம்.

முத்துக்குமரன் உடல்
முதன்முறையாக வெளிநாடு சென்றுள்ள முத்துக்குமரனுக்கு யாரிடமும் எந்தவித முன் விரோதமும் இல்லாத நிலையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். எனவே முத்துக்குமரன் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும், மேலும் அவரது மரணத்திற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை பெற்று தர வேண்டும்.

மனைவி கோரிக்கை
முத்துக்குமரனை இழந்து வாடும் குடும்பத்திற்கு இழப்பீடுகளை பெற்றுத் தர வேண்டும் என சுமார் 250 க்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்பினர் முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக சென்று கூத்தாநல்லூர் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து முத்துகுமரன் மனைவி கூறுகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுத்து வெளிநாட்டில் உயிரிழந்துள்ள எனது கணவரின் உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வரவேண்டும் என தெரிவித்தார்.