திருப்பதியில் முல்லை, மல்லி, கனகாம்பரம்.. ஏழு டன் மலர்களால் ஏழுமலையானுக்கு புஷ்ப யாகம்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் ஏழுமலையானுக்கு 7 டன் மலர்களால் புஷ்ப யாகம் நடைபெற்றது.
திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் திருப்பதிக்கு வருகை தருவது வழக்கம். பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் கூட திருப்பதிக்கு வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

அதேபோல, பண்டிகைக் காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். திருமலையில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவம் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், அக்டோபர் 4 ஆம் தேதி முதல் பிரம்மோற்சவம் தொடங்கியது. இந்த விழா அக்டோபர் 12 ஆம் தேதி வரை நடைபெற்றது.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நாளான கருட சேவை கடந்த 8ஆம் தேதி நிகழ்ந்தது. அந்த நாளில் மட்டும் 82,043 பேர் சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல, 30,100 பேர் முடிகாணிக்கை கொடுத்தனர். அன்று ஒரே நாளில் உண்டியல் காணிக்கை மட்டும் ரூ. 4.10 கோடியை பக்தர்கள் செலுத்தியுள்ளனர். அக்டோபர் 29ஆம் தேதி ஒரு நாளில் 59,140 பேர் பெருமாளை தரிசனம் செய்தனர். 16,937 பேர் முடி காணிக்கை செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் முடிந்த பின்னர் புஷ்ப யாகம் சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பு ஆண்டில் பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்ப சுவாமிக்கு புஷ்ப யாகம் நடைபெற்றது.
திருப்பதியில் உள்ள சம்பங்கி மண்டபத்தில் காலை உற்சவர்களுக்கு சிறப்பு திருமஞ்சன சேவை நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் உற்சவ மூர்த்திகளுக்கு 7 டன் மலர்களால் புஷ்ப யாகம் நடைபெற்றது. இதற்காக 7 டன் மலர்கள் கொண்டு வரப்பட்டிருந்தன.
தமிழ்நாட்டில் இருந்து ஐந்து டன் மலர்களும், தெலங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து தலா ஒரு டன் என 2 டன் மலர்களும் என மொத்தம் 7 டன் மலர்கள் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டன. முல்லை, மல்லி, கனகாம்பரம், சாமந்தி, ரோஜா, சம்பங்கி, துளசி உள்ளிட்ட 17 வகையான மலர்கள் புஷ்ப யாகத்துக்காக திருமலைக்கு கொண்டு செல்லப்பட்டன.
தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கடைய்ய சவுத்ரி தலைமையில் கோயில் நிர்வாகிகள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அந்த 7 டன் மலர்க் கூடைகளையும் ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர், ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி உற்சவ மூர்த்திகளுக்கு புஷ்ப யாகம் கோலாகலமாக நடத்தப்பட்டது.


Click it and Unblock the Notifications
