290 ஐட்டங்களுடன் மருமகனுக்கு மறக்க முடியாத சங்கராந்தி விருந்து.. தலைப்பொங்கல் பரிமாறி அசத்திய கலாவதி
திருப்பதி: ஆந்திராவில் தன்னுடைய மருமகனுக்கு 290 வகையான பதார்த்தங்களுடன் சங்கராந்தி விருந்தளித்து அசத்திவிட்டார் மாமியார் கலாவதி... இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. விருந்தில் வைக்கப்பட்ட உணவுகளும் காண்போரை ஆச்சரியப்படுத்தி வருகிறது...
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சங்கராந்தி என்பது மிக முக்கியமான பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் பொங்கல் எவ்வளவு சிறப்பு பெற்றதோ, அதே அளவு முக்கியத்துவம் சங்கராந்திக்கு அங்கு வழங்கப்படுகிறது.

ஆந்திரா சங்கராந்தி
தீபாவளி, விஜயதசமி போன்ற பண்டிகைகளை விடவும் சங்கராந்தியே முதன்மையான விழாவாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக மருமகன்களுக்கு இந்த பண்டிகை மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது. தமிழகத்தில் மருமகன்களுக்கு தல தீபாவளி எப்படி முக்கியமோ, அதேபோல் ஆந்திராவில் சங்கராந்தி மருமகன்களுக்கு முக்கிய பண்டிகையாக உள்ளது.
தெலுங்கு மக்கள் எங்கே வேலை செய்தாலும்சரி, சங்கராந்தி பண்டிகை வந்தால் சொந்த ஊருக்கு செல்வது வழக்கமாக உள்ளது. இந்த பண்டிகை குடும்ப உறவுகளை வலுப்படுத்தும் விழாவாக கொண்டாடப்படுகிறது. புதிதாக திருமணம் ஆன தம்பதிகளுக்கு சங்கராந்தி மேலும் சிறப்பு பெறுகிறது. மகளுடன் வரும் மருமகனை மாமியார், மாமனார், மைத்துனர்கள் அனைவரும் அன்புடன் வரவேற்று சிறப்பாக கவனிப்பார்கள்.
மருமகனுக்கு மாமியார் விருந்து
சங்கராந்தி விருந்தே இந்த பண்டிகையின் முக்கிய அம்சமாக விளங்குகிறது. தமிழகத்தில் பொங்கல் சீர் எடுத்து மருமகன் வீட்டிற்கு செல்வார்களே, அதுபோல ஆந்திராவில் மருமகனை மகளுடன் நேரடியாக அழைத்து வந்து பிரம்மாண்டமான விருந்து அளிப்பது மரபாக உள்ளது.
விருந்து என்றால் சாதாரண விருந்து கிடையாது... இந்த விருந்துகளில் 100, 150, 200 வகையான பாரம்பரிய தெலுங்கு உணவுகள் பரிமாறப்படுகின்றன. மருமகனை அரசனை போல கவனிப்பதே சங்கராந்தி விருந்தின் தனிச்சிறப்பாக கருதப்படுகிறது. இதுபோன்ற சங்கராந்தி விருந்துகளின் வீடியோக்கள் கடந்த சில ஆண்டுகளாக சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
மாமியார் கலாவதி
அப்படித்தான் இப்போதும் ஒரு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது... ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் நர்சிப்பட்டினம் சாந்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவரது மனைவி கலாவதி. இவர்களின் மகளுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு, மருமகனுக்கு சிறப்பு விருந்து அளிக்க கலாவதி முடிவு செய்தார்.
அதன்படி ஆடு, கோழி, முட்டை, மீன் என ஒட்டுமொத்த அசைவ உணவுகள், பல்வேறு இனிப்பு வகைகள், கார வகைகள் என மொத்தம் 290 வகையான உணவுகள் தயாரிக்கப்பட்டுள்ளது... சமைக்கப்பட்ட உணவுகள் அனைத்தையும் ஒரு ரூம் முழுவதும் அடுக்கி வைக்கப்பட்டது..
290 ஐட்டங்களை பார்த்து மயங்கிய மாப்பிள்ளை
மருமகனை நேரடியாக சாப்பிட கூப்பிடாமல், அந்த மருமகனுக்கு ஆச்சரியம் ஏற்படுத்தும் வகையில், அவரது கண்களை துணியால் கட்டி அந்த ரூமுக்குள் அழைத்து வந்தனர்.. உணவுகள் வைக்கப்பட்ட ரூமில் கண் கட்டிய துணியை அவிழ்த்ததுமே, மாப்பிள்ளை அசந்து போய் நின்றுவிட்டார்..
தனக்காகவே மொத்தம் 290 வகையான உணவுகளை பார்த்த மருமகன் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்.. மருமகனுக்கு மாமியார் கலாவதி வைத்த ஸ்பெஷல் விருந்தும், விருந்தில் பரிமாறப்பட்ட உணவுகளும் வீடியோவாக வெளிவந்து வியப்பில் ஆழ்த்தி வருகிறது..
கலக்கிட்டாங்க கலாவதி
பொதுவாக சங்கராந்தி பண்டிகையின்போது பல்வேறு இடங்களில் புதுமாப்பிள்ளைகளுக்கு 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது என்றாலும், இது 290 ஐட்டங்கள் என்பது சற்று விசேஷமாகவே கருதப்படுகிறது. சங்கராந்தி பண்டிகை உணவு, உறவு, அன்பை ஒன்றாக இணைக்கும் விழாவாக தெலுங்கு மக்கள் கொண்டாப்படுவதில் அவ்வளவும் அர்த்தம் உள்ளது...












Click it and Unblock the Notifications