தாராபுரத்தில் நூல் நூலாக தொங்கிய இறைச்சி..பிரபல ஓட்டல் ஃபிரிட்ஜில் சிக்கனை கண்டு ஆடிப்போன திருப்பூர்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் - பொள்ளாச்சி சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. அங்கு செயல்பட்டு வரும் பிரபல ஓட்டலில் கெட்டுப்போன இறைச்சி வழங்கியதாக, பாதிக்கப்பட்ட நபர் புகார் தந்துள்ளார். இது குறித்த விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.
சமீபகாலமாகவே, கறி கடைகளிலும், மீன் மார்க்கெட்களிலும் கெட்டுப்போன இறைச்சியை விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன. அதேபோல, சில ஓட்டல்களிலும், சாலையோர உணவகங்களிலும், தரமற்ற உணவை விநியோகிக்கப்பதாக வாடிக்கையாளர்களே புகார்களை கூறி வருகிறார்கள்.

புகார்கள்: சில பிரபல ஓட்டல்களும் இந்த புகார்களில் சிக்கி வருவது பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. இதுபோன்ற புகார்கள் அதிகரித்து வருவதையொட்டி, உணவுத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று நேரடியாகவே ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள்..
ஓட்டல்களில், ரெஸ்ட்டாரண்டுகளில், இறைச்சி கூடங்களில், மீன் மார்க்கெட்டுகளில் என எங்கெல்லம் புகார்கள் எழுகிறதோ, அங்கு நேரடியாகவே விரைந்து சென்று, அதிரடி ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். இந்த சோதனையில், புகார்கள் நிரூபணமானால், சம்பந்தப்பட்ட ஓட்டல்கள் மீதும், உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
எச்சரிக்கை: அதுமட்டுமல்ல, உணவுத்துறை அதிகாரிகள் இதுகுறித்து சொல்லும்போது, "தரமற்ற முறையில் உணவுகள் சமைத்தால், சம்பந்தப்பட்ட கடைகளுக்கும் சீல் வைக்கப்படும். உணவுகளில் செயற்கையான நிறமிகளை சோ்க்கக்கூடாது. மக்களுக்கு தரமான உணவுகளை வழங்க வேண்டும். பொதுமக்களும் உணவகங்களில் சாப்பிடும் போது ஏதேனும் கெட்டுப்போன உணவுகள் இருந்தால் உடனடியாக உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டே வருகிறார்கள்.
இந்நிலையில், மீண்டும் ஒரு புகார் திருப்பூரில் வெடித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் - பொள்ளாச்சி சாலையில் பிரபல அசைவ ஃபாஸ்ட் புட் ஒன்று செயல்பட்டு வருகிறது.. இந்த ஓட்டலுக்கு, தாராபுரம் மேற்கு பஜனைமட தெருவில் வசித்து வரும் ஆசாத் அலி என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் சென்று சிக்கன் நூடுல்ஸ் மற்றும் பிரட் ஆம்லெட் வாங்கி சாப்பிட்டிருக்கிறார்.
சிக்கன் நூடுல்ஸ்: ஆனால், இதனை சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே குழந்தைகள் உட்பட 4 பேருக்கு வயிற்றுப்போக்கும், வாந்தியும் ஏற்பட்டுள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த ஆசாத் அலி, இது குறித்து ஓட்டல் ஊழியர்களிடம் கேட்டிருக்கிறார். ஆனால், அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை என தெரிகிறது.
இதனால், ஆசாத் அலி, அந்த ஓட்டலின் கிச்சனுக்குள்ளேயே சென்றுள்ளார்.. அங்கிருந்த ஃபிரிட்ஜ்ஜை திறந்து பார்த்தபோது, துர்நாற்றம் வீசியிருக்கிறது.. அதுமட்டுமல்லாமல், பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த சிக்கன் அழுகிப்போய் கிடந்ததாம்.. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆத் அலி, உடனடியாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளார்.. ஆனால், யாருமே நீண்ட நேரமாக தொலைபேசியை எடுக்கவில்லையாம்.
அதிர்ச்சி: இதனால், அதிருப்தியடைந்த ஆசாத் அலி, திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், தான் சென்னையில் இருப்பதாக கூறி, அந்த போனை துண்டித்துவிட்டாராம் அந்த அதிகாரி..
புகார் தந்து 2 மணி நேரமாகியும், யாருமே அதிகாரிகள் வராததால் ஆசாத் அலி நொந்துபோய், அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டாராம்.. எனினும், இதுகுறித்து தகவலறிந்த தாராபுரம் போலீசார், சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு விரைந்து சென்று, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகிறார்கள்.. இந்த சம்பவம் திருப்பூரில் அசைவ பிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications