என்ஐடி விடுதியில் வேலையைக் காட்டிய கதிரேசன்! மாணவிக்காக களத்தில் குதித்த மாணவர்கள்! திடீர் திருப்பம்
திருச்சி: திருச்சி என்ஐடி விடுதியில் மாணவி ஒருவருக்கு ஒப்பந்த ஊழியரான கதிரேசன் பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து விடுதி வார்டனிடம் அந்த மாணவி புகார் கூறிய போது அவரது உடை குறித்து தரக்குறைவாக பேசியதாக மாணவர்கள் புகார் கொடுத்தனர். இதனையடுத்து அந்த வார்டன் பணியில் இருந்து விலகிய நிலையில், தற்போது இந்த சம்பவம் தொடர்பாக உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் துவாக்குடியில் தேசிய தொழில்நுட்பக் கழகமான என்ஐடி விடுதி செயல்பட்டு வருகிறது. அங்கு ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் விடுதியில் திடீரென மின்விநியோகம் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

மின் இணைப்பில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டதாகவும், இதற்காக ஒப்பந்த ஊழியரை அழைத்து மின் இணைப்பை சரி செய்ய விடுதி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதுவரை மாணவிகள் தங்கள் அறைகளில் இருக்க வேண்டுமென விடுதி வார்டன் பேபி கூறியிருக்கிறார்.
இதனையடுத்து மாணவிகள் தங்கள் அறைகளில் செல்போன் டார்ச் மற்றும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்திருக்கின்றனர். இந்த நிலையில் மின் இணைப்பை சரி செய்ய வந்த ஒப்பந்த ஊழியர் ஒருவர் மாணவி தனியாக படித்துக் கொண்டிருந்தபோது பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதையடுத்து அந்த மாணவி அலறிய நிலையில் அருகில் இருந்த மாணவிகள் திரண்டு வந்து அந்த இளைஞரை பிடித்தனர்.
மேலும் இது தொடர்பாக திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கும் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக அவர்கள் வார்டனிடம் புகார் தெரிவித்து இருக்கின்றனர். அப்போது மாணவியின் உடை குறித்து அவதூறாக பேசிய கல்லூரி விடுதியின் வார்டனான பேபி, அந்த மாணவியை திட்டியும் இருக்கிறார்.
இதனையடுத்து மாணவியை அவதூறாக பேசிய வார்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி மாணவிகள் கல்லூரி வளாகத்தில் என்ஐடி இயக்குனரான அகிலாவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து விவகாரம் பெரிதான நிலையில் போலிசார் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தி மாணவர்கள் போராட்டத்தை கைவிடச் செய்தனர். இதற்கிடையே தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த விடுதி வார்டன் பேபி, தொடர்ந்து தனது பணியில் இருந்து விலகினார்.
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒப்பந்த ஊழியரான கதிரேசனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது பாலியல் தொல்லை, சதி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் போராட்டத்தின் போது மாணவர்களின் குறைகளை கேட்பதற்கு குழு அமைக்க வேண்டும், உண்மை கண்டறியும் குழு அமைக்க வேண்டுமென மாணவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து என்ஐடி விடுதியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த குழுவில் பேராசிரியர்கள், காவல்துறையினர், பெண் வழக்கறிஞர்கள், மாணவர்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பத்து பேர் இடம் பெற்றுள்ளனர். தற்போது இந்த குழு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை அளிக்கப்பட்ட சம்பவம் மட்டுமல்லாமல், விடுதியில் நடந்த விதிமீறல்கள் உள்ளிட்டவை குறித்தும் விசாரணை நடத்த இருப்பதாகவும், இன்று இந்த குழு விசாரணையை தொடங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications