அமைச்சர் செங்கோட்டையன் பேச்சால் நொந்து போன துரை வைகோ.. அவரது ரியாக்ஷனை நீங்களே பாருங்க
திருச்சி: தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியான அமைச்சர் செங்கோட்டையன், த.வெ.க-வினருக்கு வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார். அவர் மதிமுகவைச் சிறுமைப்படுத்தும் வகையில் பேசியிருக்கக் கூடாது. அது மதிமுக தொண்டர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது. அவர் நா தவறித்தான் பேசியிருப்பார் என நம்புகிறேன். இனிவரும் காலங்களில் அவர் இது போன்ற பேச்சுகளைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வலியுறுத்தினார்.
கோபிசெட்டிப் பாளையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "இன்னும் சில நாள்களில் மதிமுகவைப் போல அதிமுக ஆகிவிடும். மதிமுகவில் தலைவர்கள் மட்டும்தான் உள்ளனர். அதேபோல அதிமுக நிலைமையும் விரைவில் அப்படியாகி விடும்" என்று பேசியிருந்தார். இது மதிமுகவை நோகடித்துள்ளது.

துரை வைகோ ரியாக்சன்
இதுபற்றி மதிமுக எம்பி துரை வைகோ பேசுகையில், "செங்கோட்டையனைத் தவெகவின் அமைச்சராக மட்டும் பார்க்கவில்லை. தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராகப் பார்க்கிறேன். வைகோ மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். நானும் அவரை பல முறை சந்தித்திருக்கிறேன். முதல்வர் விஜய் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார். அதனால்தான் மதிமுக, தவெக கூட்டணியை ஆதரிக்கிறது. இதற்காக எங்களுடைய 2 எம்.எல்.ஏக்களை இழந்திருக்கிறோம். இந்நிலையில் செங்கோட்டையன் அப்படி பேசியிருக்கக் கூடாது. அவரது பேச்சு மதிமுகவினரை புண்படுத்திவிட்டது. செங்கோட்டையன் நா தவறி கூட பேசியிருக்கலாம். அவர் வேண்டும் என்றே இப்படி பேசியிருக்க வாய்ப்பு இல்லை. வரும் காலங்களில் இது போன்ற பேச்சுகளைத் தவிர்த்துகொள்ள வேண்டும்" என்று கூறியிருக்கிறார்
திருச்சி ரயில்வே பாலம்
முன்னதாக திருச்சியில் நடைபெற்று வரும் பல்வேறு மேம்பாலப் பணிகளை ம துரை வைகோ நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் அருகே உள்ள காவேரி பாலத்தில் நடைபெற்று வரும் பணிகள் அக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் நிறைவடையும். மேலும், கடந்த 2022-ஆம் ஆண்டு திருச்சி மெயின் கார்ட் கேட் அருகே தொடங்கப்பட்ட ரயில்வே மேம்பாலப் பணிகள் தொடர்ச்சியாகக் காலதாமதமாக நடைபெற்று வருகின்றன. அந்தப் பாலப் பணிகள் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நிறைவடையும் எனக் கூறியுள்ளார்கள். மற்ற பணிகளும் உரிய நேரத்தில் நடைபெற்று வருகின்றன" எனத் தெரிவித்தார்.
புதிய விமான நிலையம் குறித்து பதில்
"கடந்த 15 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர்கள் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. பரந்தூர் பகுதியில் கடந்த அதிமுக/திமுக ஆட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அதனை தற்போதைய முதலமைச்சர் விஜய் கைவிட்டுள்ளார். ஆனால், சென்னைக்கு அருகில் புதிய பெரிய விமான நிலையம் அமைக்க வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. அதை அவர் நிறைவேற்ற வேண்டும் என்று துரை வைகோ வலியுறுத்தினார்.
'இந்தியா' கூட்டணி நிலைப்பாடு
மதவாதத்திற்கும் ஊழலுக்கும் எதிராக அமைக்கப்பட்டதே 'இந்தியா' கூட்டணி. தமிழ்நாட்டில் இந்த இரண்டிற்கும் எதிராக இருக்கும் முதலமைச்சர் விஜய், 'இந்தியா' கூட்டணிக்கு வருவதுதான் தமிழ்நாட்டிற்கு நல்லது. முதலமைச்சர் விஜய்யை 'வருங்காலப் பிரதமர்' என அக்கட்சியினர் பேசுவதில் எந்தத் தவறும் கிடையாது; ஆர்வம் மிகுதியால் அவர்கள் அவ்வாறு பேசுகிறார்கள் என்று துரை வைகோ கூறினார்.
த.வெ.க தொண்டர்களுக்கு அறிவுரை
"த.வெ.க தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி ஆட்சியில் அமர்ந்துள்ளது. த.வெ.க ஆட்சியைக்கவிழ்க்க எதிர்க்கட்சியினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லியிலும் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்தச் சூழலில், த.வெ.க-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கூட்டணிச் கட்சியினர் த.வெ.க-வினருக்கு அரசியல் நுணுக்கங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும், சட்டமன்றத்தில் திமுகவினர் கண்ணாடி கூண்டிற்குள் இருந்து கல்லெறிவது போல் செயல்பட்டு வருகிறார்கள்" என துரை வைகோ தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
