தூத்துக்குடி அருகே பேருந்து படியில் பயணம் செய்தவர் பலி.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் அருகே தனியார் பேருந்தின் படிக்கட்டில் நின்று பயணம் செய்த பயணி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
Recommended Video
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் இருந்து தூத்துக்குடிக்கு சென்று கொண்டிருக்கும்போது திடீரென வலிப்பு வந்ததால் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
தனியார் பேருந்தில் இருந்து இளைஞர் முருகன் தவறி விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

படியில் நின்று பயணம்
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் அடுத்த கழுகாசலபுரத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் முருகன். முருகன் வீட்டில் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக வீட்டில் இருப்பதில்லை எனவும் அங்கேங்கே சென்று ஏதாவது கூலி வேலை செய்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. முருகனுக்கு வலிப்பு நோய் பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை புதியம்புத்தூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் தனியார் பேருந்தில் ஏறினார். பேருந்து காலியாக இருந்தபோதும் உள்ளே செல்லாமல் படியில் நின்று கொண்டு பயணம் செய்துள்ளார்.

பஸ்ஸில் இருந்து விழுந்தார்
கண்டக்டர் பலமுறை சொல்லியும் கேட்காமல் படியில் நின்று வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே பேருந்து சில்லாநத்தம் என்ற கிராமத்தை கடந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது படியில் நின்று பயணம் செய்த முருகனுக்கு வலிப்பு வந்தது போல் அவரது உடல் இறுக்கமானது சற்று நேரத்தில் கம்பியில் பிடித்திருந்த கைகள் தளர்ந்து கொள்ள அப்படியே படிக்கட்டில் இருந்து உருண்டு சாலையோரத்தில் விழுந்தார். இதை பார்த்து பதறிப்போன பயணிகள் பேருந்தை உடனடியாக நிறுத்துமாறு கூச்சலிட்டனர். படியில் தொங்கிக் கொண்டு வந்த நபர் தவறி விழுந்துவிட்டதாக கூறினர்.

சிகிச்சை பலனில்லை
இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த ஆம்புலன்ஸ் முருகனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று முதல் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் முருகன் உயிரிழந்தார். இதையடுத்து முருகனின் தம்பி வீரசெல்வம், புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தற்போது புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தற்போது முருகன் படியில் பயணம் செய்தது, காற்றின் வேகத்தில் தூக்கம் வந்ததுபோல் தவறி விழுவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

தொடரும் படிக்கட்டு பயணங்கள்
தமிழ்நாட்டில் சமீப காலமாக மாணவர்கள் படியில் தொங்கிக் கொண்டு சாகசம் செய்வதும், கீழே விழுவதுமான வீடியோக்கள் வெளியாகி அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. தென்காசி மாவட்டம் தனியார் மினி பேருந்தில் இறங்குவதற்காக படிக்கட்டு அருகில் நின்ற மகேஸ்வரி என்பவர் திடீரென பஸ் திருப்பப்பட்டதால் தவறி விழுந்து உயிரிழந்தார். 2 தினங்களுக்கு முன்னர் வேலூர் மாவட்டத்தில் பாகாயம் அருகே பேருந்தின் படிக்கட்டில் நின்று சாகசம் செய்த மாணவர் ஒருவர் கீழே விழுந்தார். திருவள்ளூர் கவரைப்பேட்டையில் பள்ளி மாணவி ஒருவர், ஓடும் ரயிலில் ஏறி காலை உரசியபடி சென்றதை அடுத்து போலீசார் அவரை எச்சரித்தனர். இதுமட்டுமின்றி மாணவர்கள் படியில் பயணம் செய்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications