தாலி கட்டப்போற நேரத்தில்.. மாப்பிள்ளைக்கு நேர்ந்த விபரீதம்.. போராட்டத்தால் பரபரத்த தூத்துக்குடி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் திருமண நாளன்று மணமகன் மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலையில் வெட்டுக் காயம் இருந்த போதிலும், இதை விபத்து வழக்காக போலீஸார் பதிவு செய்யாததால் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டன்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (27). தூத்துக்குடி உப்பளத்தில் வேலை செய்து வந்த இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் நேற்று காலை திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

காணாமல் போன மணமகன்
காலை 9 முதல் 10 மணி வரை முகூர்த்தம் என்ற நிலையில், திருமணச் சடங்குகளும், வரவேற்பு ஏற்பாடுகளும் தடபுடலாக நடைபெற்று வந்தன. இதனைத் தொடர்ந்து மணமகளும் மேடையில் வந்து அமர்ந்துவிட, மாப்பிள்ளை வரவில்லை. முகூர்த்தத்துக்கு நேரம் ஆனதால், மணமகன் ஜெகதீஷை அவரது உறவினர்களும், நண்பர்களும் பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

போலீஸிடம் இருந்து வந்த போன்
இந்த சூழலில், முத்தையாபுரம் காவல் நிலையத்தில் இருந்து ஜெகதீஷின் தந்தைக்கு தொலைப்பேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய காவலர் ஒருவர், "உங்கள் மகன் ஜெகதீஷ், ஓடைப்பாலம் அருகே சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டார்" எனக் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோரும், உறவினர்களும் தூத்துக்குடி அரசு மருத்துவமனை பிணவறைக்கு சென்று பார்த்த போது, ஜெகதீஷ் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அவர்களது உறவினர்கள் கதறி அழுதனர்.

தலையில் வெட்டுக்காயம்
இந்நிலையில், சாலை விபத்தில் உயிரிழந்தாக கூறப்படும் ஜெகதீஷின் கை, கால்களில் எந்த அடியும் படவில்லை. மேலும், அவரது மோட்டார் சைக்கிளும் சேதமாகவில்லை. ஆனால், ஜெகதீஷின் தலையில் மட்டும் வெட்டுக்காயம் இருந்ததை அவரது உறவினர்கள் கவனித்தனர். இதையடுத்து, முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கு சென்ற அவர்கள், ஜெகதீஷ் தலையில் வெட்டுக் காயம் இருப்பதால் அவரை யாராவது கொலை செய்திருக்க கூடும் எனக் கூறினர். மேலும், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை தாங்கள் பார்க்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த போலீஸார், இது விபத்துதான் என்றும், விபத்து சம்பவத்துக்கெல்லாம் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய முடியாது எனவும் தெரிவித்தனர்.

போராட்டம்
இதனால் ஆத்திரமடைந்த ஜெகதீஷின் உறவினர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், உண்மை தெரியாமல் ஜெகதீஷின் உடலை தாங்கள் வாங்க மாட்டோம் என்றும் கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் காணப்பட்டது.

எஸ்.பி. உத்தரவு
விஷயம் பெரிதானதால் இந்த விவகாரம் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.க்கு தெரியவந்தது. பின்னர், முத்தையாபுரம் காவல் ஆய்வாளரை தொடர்புகொண்ட எஸ்.பி., இந்த சம்பவம் தொடர்பாக அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தனக்கு அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து, ஜெகதீஷின் உறவினர்கள் கலைந்து சென்றனர். திருமண நாளிலேயே மணமகன் மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications