கொலை நகரமான தூத்துக்குடி.. கனிமொழி வைத்த குற்றச்சாட்டு! அப்படியெல்லாம் இல்லையே.. போலீஸ் பதில்!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நாளுக்கு நாள் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துகொண்டிருக்கிறது என திமுக எம்பி கனிமொழி விமர்சித்திருந்த நிலையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொலை சம்பவங்கள் குறைந்திருப்பதாக தூத்துக்குடி போலீஸ் பதிலளித்துள்ளது.
தவெக ஆட்சிப்பொறுப்பேற்று ஏறத்தாழ 6 மாதங்கள் ஆகின்றன. ஆனால், இன்னமும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை கட்டுப்படுத்தப்படவில்லை என்பதுதான் எதிர்க்கட்சிகளின் பிரதான குற்றச்சாட்டாக இருக்கிறது.

கனிமொழி வைத்த குற்றச்சாட்டு
குறிப்பாக, தூத்துக்குடியில் நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாக கனிமொழி விமர்சித்திருந்தார். அவர் தனது x பக்கத்தில், "திருவைகுண்டம் அருகே கல்லூரி மாணவர் இசக்கி ராஜா வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. சாத்தான்குளம் படுகொலைச் சம்பவத்தின் ரத்தம் காய்வதற்குள் தூத்துக்குடியில் அடுத்தப் படுகொலை நடந்திருக்கிறது.
உரிய நடவடிக்கை வேண்டும்
கடந்த வாரத்தில் மட்டும் 5 படுகொலைகளுக்கு மேல் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்திருக்கின்றன. அரிவாள் வெட்டு, சிறுமிகள் கடத்தல் என தூத்துக்குடியில் நாளுக்கு நாள் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துகொண்டிருக்கிறது. சரிந்துபோயிருக்கும் சட்டம்-ஒழுங்கின் நிலையை தினமும் சுட்டிக்காட்டினாலும் சுரணையற்றுச் சுணக்கம் காட்டும் தவெக அரசு, மக்களின் பாதுகாப்போடு விளையாடுவதை நிறுத்த வேண்டும்; உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும்" என பதிவிட்டிருந்தார்.
காவல்துறைக்கு பொறுப்பு
இந்த விமர்சனம், தமிழக காவல்துறைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. ஏற்கெனவே குழந்தைகள் காணாமல் போன வழக்கில் தமிழக காவல்துறை நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. இப்படி இருக்கையில், தற்போது சட்டம்-ஒழுங்கு பிரச்சனையும் கிளம்பியிருப்பதால், இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு ஏற்பட்டிருந்தது.
காவல்துறையின் விளக்கம்
இந்நிலையில், தூத்துக்குடி காவல்துறை சார்பில் குற்ற விவரம் குறித்து அறிக்கை வெளியாகியிருக்கிறது. அதில், "தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற கொலைச் சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்ததில், இச்சம்பவங்கள் தனிப்பட்ட, குடும்ப மற்றும் சிவில் பிரச்சனைகள் காரணமாக நிகழ்ந்துள்ளன என்பது தெரியவந்துள்ளது.
உறவினர்களுக்கிடையே தகராறு
இச்சம்பவங்கள் குறுகிய கால இடைவெளியில் நடைபெற்றிருந்தாலும், ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை. உள்ளூர் அளவிலான பிரச்சனைகள் மற்றும் திடீர் ஆத்திரம் காரணமாக இவை நிகழ்ந்துள்ளன. ஸ்ரீவைகுண்டம் மற்றும் சாத்தான்குளம் பகுதிகளில் நடைபெற்ற கொலைகள் முறையே கழிவுநீர் வடிகால் மற்றும் பாதை தொடர்பான பிரச்சனைகளில் உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறுகளால் நிகழ்ந்துள்ளன.
உடனடி கைது நடவடிக்கை
நாசரேத் பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், உயிரிழந்தவரின் மூத்த சகோதரரே குற்றம் சாட்டப்பட்டவர் ஆவார். தூத்துக்குடி வடக்கு காவல் நிலைய எல்லையில் நடைபெற்ற கொலை, மீன்பிடிக்கச் செல்வதற்கு முன்பு நெருங்கிய நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட சிறிய தகராறைத் தொடர்ந்து நிகழ்ந்துள்ளது. தட்டார்மடம் பகுதியில் நடைபெற்ற சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஏற்கனவே அறிமுகமானவர். சம்பவம் குறித்து தகவல் கிடைத்த ஒரு மணி நேரத்திற்குள் கடத்தப்பட்ட சிறார்கள் மீட்கப்பட்டதுடன், குற்றம் சாட்டப்பட்டவரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.
குறங்கள் குறைவு
மேற்கண்ட சம்பவங்கள் பெரும்பாலும் தனிப்பட்ட பிரச்சனைகள் மற்றும் திடீர் ஆத்திரத்தின் காரணமாக நிகழ்ந்துள்ளன. அனைத்து வழக்குகளிலும் காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் 26.10.2025 வரை பதிவான 65 கொலை வழக்குகளுடன் ஒப்பிடுகையில், 26.10.2026 வரை 59 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் கொலை வழக்குகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், சுமார் 9.2% குறைந்துள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும் மாவட்ட காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணி, கிராம அளவிலான நேரடிச் சந்திப்புகள் மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications
