ஆர்.என்.ரவிக்கு வக்காலத்தா? “ஐ டோண்ட் கேர்”.. உடனே கையெழுத்து போட அவசியம் இல்லை - தமிழிசை தடாலடி
தூத்துக்குடி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆதரவாக தான் பேசுவதை வைத்து அவருக்கு வக்காலத்து வாங்குவதாக யார் கூறினாலும் தனக்கு கவலை இல்லை என்று தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்து உள்ளார்.
தென்காசியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார்.
அப்போது தனக்கு காவல்துறையினர் வழங்கிய மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து தன்னை வரவேற்க வந்திருந்த பொது மக்களிடம் சென்று சிறிது நேரம் தமிழிசை சவுந்திரராஜன் கலந்துரையாடினார்.

தமிழிசை பேச்சு
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஜி 20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்குவது பெருமைக்குரிய விசயம். வரும் 9 ஆம் தேதி அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் உரையாடுகின்றார். அதற்கு அழைப்பு வந்துள்ளது. ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் சட்ட மசோதா நிறைவேற்ற முடியாதற்கு ஆளுநர் சில காரணங்கள் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி
ஆளுநர்களுக்கு வரக்கூடிய மசோதாக்களை உடனே கையெழுத்திட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதில் சில சந்தேகங்கள் இருந்தால் அது தொடர்பாக ஆலோசனைகளை கேட்டுக்கொள்ள நேரம் எடுப்பது தவறில்லை. ஆன்லைன் ரம்மி விசயம் தொடர்பான மசோதாவில் கையெழுத்து போடாமல் ஏன் வைத்துள்ளார் என்பது குறித்து நான் சொல்ல முடியாது.

தமிழ்நாடு ஆளுநருக்கு ஆதரவு
ஒவ்வொரு கருத்து வேற்றுமைக்கும் ஆளுநர்களை திரும்ப பெற வேண்டும் என்று சொல்வது சரியான நடவடிக்கையாக இருக்காது என்பது எனது தாழ்மையான கருத்து. நான் இப்போது தமிழக ஆளுநருக்கு ஆதரவாக பேசுவதை வைத்து, 'நீ என்ன அவருக்கு வக்காலத்து வாங்குவது' என்று சோசியல் மீடியாவில் ஆரம்பித்து விடுவார்கள். அதுபற்றி எனக்கு கவலை இல்லை." என்று கூறினார்.

கருத்து வேறுபாடுகள்
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கும் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நீடித்து வருகின்றன. தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 7 தமிழர் விடுதலை மசோதா, நீட் எதிர்ப்பு மசோதா, ஆன்லைன் ரம்மி தடை மசோதா உள்ளிட்ட பல மசோதாக்களை அவர் ஏற்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

மசோதாக்கள்
7 தமிழர்களும் உச்சநீதிமன்றத்தின் தலையீடு காரணமாக விடுதலை செய்யப்பட்டு விட்டனர். ஆனால் மற்ற மசோதாக்களின் முடிவு என்னவென்றே தெரியாத சூழல் நிலவுகிறது. இது அல்லாமல் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழ்நாடு பாஜகவினர் அடிக்கடி சந்திப்பது, சனாதனத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பது என பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வந்தன.

பல்கலைக்கழக சர்ச்சை
இதனால் ஆளுநர் வழங்கிய தேநீர் விருந்தையே புறக்கணித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதுமட்டுமின்றி பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனம், பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் போன்றவை சர்ச்சையை ஏற்படுத்தின. இதன் தொடர்ச்சியாக பல்கலைக்கழக ஆளுநரை வேந்தராக நியமிக்கும் தீர்மானத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றது.

தமிழிசை VS கேசிஆர்
இது ஒரு புறம் இருக்க தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநராக பதவி வகித்து வரும் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் தமிழ்சை சவுந்திரராஜனுக்கு தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்கள்.

புதுச்சேரி சர்ச்சை
அதேபோல் புதுச்சேரி மாநில அரசிலும் தமிழிசையின் தலையீடு அதிகம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தமிழிசையும் அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமியும் இதனை மறுத்து வருகிறார்கள். இந்த சூழலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆதரவாக கடந்த சில நாட்களாக பேசி வருகிறார் தமிழிசை சவுந்திரராஜன்.












Click it and Unblock the Notifications