வாட்ஸ்அப்பில் வந்த அம்மாவின் சடலம்.. அது பக்கத்திலேயே அமைதியாக அமர்ந்திருந்த தூத்துக்குடி மகன்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடந்த திகிலூட்டும் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியெடுத்துள்ளது. இது தொடர்பான விசாரணையையும் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.. பொதுவாகவே, மனநல பிரச்சினைகளால் அவதிப்படுவோருக்குத் தகுந்த பாதுகாப்பும், குடும்பத்தினரின் தொடர்ச்சியான அன்பும் கவனிப்பும் மிகவும் முக்கியமானது. அவர்களை தனியாக விடுவதை தவிர்ப்பதும் நல்லது என்கிறார்கள். ஆனால், இங்கே திருச்செந்தூரில் என்ன நடந்தது என்று பாருங்கள்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகாவுக்கு உட்பட்டது குமாரபுரம் ஜெயா நகர் பகுதியில் வசித்து வருபவர் ரேணுகா.. இவருக்கு 62 வயதாகிறது.. அரசு உதவி பெறும் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியையான ரேணுகாவின் கணவர் அன்புமணியும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆவார்.

தூத்துக்குடி செக்யூரிட்டி
இவர்களது மூத்த மகன் சென்னையில் செக்யூரிட்டியாக பணி புரிந்துவரும் நிலையில், இரண்டாவது மகனான தங்கபாலன் (27) என்பவரும் இவர்களுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் தங்கபாலன்,
நேற்றைய தினம் வீட்டில் அன்புமணி இல்லை என தெரிகிறது.. நேற்று காலையிலேயே அன்புமணி அருகே உள்ள பள்ளத்தூர் கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார்
இதனால் வீட்டில் தனது தாயுடன் தனியாக இருந்துள்ளார். . அந்த நேரம் பார்த்து தாய்க்கும் மகனுக்கும் இடையே திடீரென்று கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கண்ட்ரோல் செய்ய முடியாத அளவுக்கு கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற தங்கபாலன், கிச்சனில் இருந்த அம்மிக்கல்லைத் தூக்கி வந்து, தாய் ரேணுகாவின் தலையில் போட்டு விட்டார்..
தாயை கொன்ற மகன்
இந்த தாக்குதலில் நிலைதடுமாறி சரிந்த ரேணுகா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகத் துடிதுடித்துயுயிரிழந்தார். தன் கண்முன்னே தாய் உயிரிழந்து விட்டார் என்பதைகூட மகன் உணரவில்லை.. உடனே கொலை செய்த கையோடு, உயிரிழந்த அம்மாவின் சடலத்தை தனது செல்போனில் போட்டோ எடுத்து சென்னையில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வரும் தனது அண்ணனுக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி வைத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்ததுமே அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார் அண்ணன்.
இதனிடையே ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலத்தின் அருகிலேயே தங்கபாலன் எந்தவிமான பதற்றமும், பயமும் இல்லாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாராம்.. அக்கம் பக்கத்தினர் ரேணுகா இறந்ததை கேள்விப்பட்டு ஓடிவந்து பார்த்தபோது, தங்கபாலன் உட்கார்ந்திருந்ததை கண்டு வெலவெலத்து போயிருக்கிறார்கள்.
திருச்செந்தூரில் அதிர்ச்சி
இதுகுறித்து தகவலறிந்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது ரேணுகாவின் உடல் அருகே அமர்ந்திருந்த தங்கபாலனைக் கண்டு போலீசாரும் அதிர்ச்சியடைந்தனர். உடனே ரேணுகாவின் உடலைக் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார், தன் கைகளாலேயே பெற்ற தாயைக் கொன்ற தங்கபாலனைக் கைது செய்தனர்.. இப்போது திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் போலீஸ் காவலில் தங்க பாலன் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களிடையே மீள முடியாத சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
