கஞ்சா விற்பவர்களுடன் கூட்டு களவாணித்தனம்.. அரக்கோணம் டவுன் போலீசார் 3 பேர் சஸ்பெண்ட்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்களுடன் ரகசிய தொடர்பில் இருந்ததாக 3 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கஞ்சா, ஹெராயின் போன்ற போதைப்பொருட்களின் புழக்கம் தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக, தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிக அளவில் இருக்கிறது.
இதனிடையே, இந்த கஞ்சாவுக்கு பள்ளி மாணவர்கள் முதல் நடுத்தர வயதினர் வரை அடிமையாகி கிடப்பதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், கஞ்சா உட்கொள்ளும் இளைஞர்கள் அதிக அளவில் குற்றச்செயல்களில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. இதனால் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முதல்வர் அறிவறுத்தல்
சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும், மாநிலத்தில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தி இருந்தார். இதன் தொடர்ச்சியாக, இந்த விஷயத்தில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு நேரடியாக தலையிட்டு போலீஸ் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார். இதனால் மாவட்டங்கள்தோறும் கஞ்சாவை கட்டுப்படுத்த காவல்துறையினர் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

ராணிப்பேட்டையில்
அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் மற்றும் சோளிங்கர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெறுவதாகவும், இதனால் கொலை மற்றும் குற்றச்செயல்கள் பெருகி வருவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இதையடுத்து, வேலூர் மண்டல காவல் தலைவரின் உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீஸார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

போலீஸாருக்கு தொடர்பு
அப்போது, அந்தப் பகுதிகளில் கஞ்சா விற்கும் நபர்களுடன் போலீஸார் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. பின்னர், இந்த விவகாரம் குறித்து ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி. தீபா சத்யன் ஒரு குழுவை அமைத்து ரகசிய விசாரணை நடத்தி வந்தார். இதில், அரக்கோணம் டவுன் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றும் கண்ணன், சோளிங்கர் தலைமை காவலர் வேணுகோபால், அரக்கோணம் தாலுகா காவல் நிலைய எழுத்தர் ரமேஷ் ஆகிய 3 பேருக்கு கஞ்சா கோஷ்டியுடன் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது.

சஸ்பெண்டும், பாராட்டுப் பத்திரமும்
இதனைத் தொடர்ந்து, அந்த 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து ராணிப்பேட்டை எஸ்.பி. தீபா சத்யன் உத்தரவிட்டார். இது ஒருபுறம் இருக்க, சஸ்பெண்ட் செய்யப்பட்ட வேணுகோபால், கண்ணன் ஆகிய இருவரும் குற்றச்செயல் தடுப்பு பிரிவில் சிறப்பாக பணியாற்றியதற்காக கடந்த வாரம் அவர்களுக்கு எஸ்.பி. பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசை வழங்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications