மலை.. கோட்டை.. 1 லட்சம்.. மாஸ் காட்டும் ‘இரட்டை’ அமைச்சர்கள்.. திமுக முப்பெரும் விழாவில் பிரமாண்டம்!
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் பட்டம் புதூரில் நாளை நடைபெறும் திமுக முப்பெரும் விழாவிற்காக பெரியார், அண்ணா, கருணாநிதி உருவங்களுடன் மலை போன்ற வடிவமைப்புடன் பிரமாண்டமாக முகப்பு அமைக்கப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் பிறந்த நாள், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள், தி.மு.கழகம் தோன்றிய நாள் ஆகிய மூன்று நிகழ்வுகளையும் சேர்த்து முப்பெரும் விழாவாக கொண்டாடி வருகிறது திமுக. திமுக முப்பெரும் விழா நாளை விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறுகிறது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் சிறப்பாக மேற்கொண்டுள்ளனர். முப்பெரும் விழாவுக்காக அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட முகப்பு, பந்தல் ஏற்பாடுகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.

முப்பெரும் விழா
செப்.15-ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாள். செப்டம்பர் 16 திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாள். செப்டம்பர் 17 பெரியாரின் பிறந்த நாள். மூன்றையும் சேர்த்து முப்பெரும் விழாவாக திமுகவால் கொண்டாடப்பட்டு வருகிறது. முப்பெரும் விழாவை முன்னிட்டு திமுக சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டு செப்.15-ஆம் தேதி விருதுநகரில் முப்பெரும் விழா நடைபெறுகிறது.

விருதுகள்
விருதுநகர் மாவட்டத்தில் நாளை நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில், ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளான பெரியார் விருது சம்பூர்ணம் சாமிநாதன், அண்ணா விருது இரா.மோகன், கலைஞர் விருது டி.ஆர்.பாலு எம்.பி., பாவேந்தர் விருது புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசு, பேராசிரியர் விருது குன்னூர் சீனிவாசன் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்பாக கட்சி பணியாற்றியவர்களுக்கு பரிசும், கழக முன்னோடிகளுக்கு விருதுகளையும் வழங்கி கவுரவிக்கிறார்.

மாஸ் காட்டும் இரட்டை அமைச்சர்கள்
விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் பட்டம்புதூர் அண்ணா நகரில் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கலைஞர் திடலில் தி.மு.க முப்பெரும் விழா நாளை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. விழா மேடைக்கு வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரனும், தங்கம் தென்னரசுவும் இரவுபகல் பாராமல் முப்பெரும் விழாவுக்க்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாநாட்டு முகப்பு
திமுக முப்பெரும் விழா நடைபெறும் பிரமாண்ட பந்தலுக்கு பிரதான முகப்பில் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் உருவப்படங்களுடன் மலை முகடு போன்று பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினின் உருவமும் இந்த முகப்பில் இடம்பெற்றுள்ளது. விழா பந்தல் நுழைவு வாயில் மாளிகை போன்று அமைக்கப்பட்டுள்ளது.

1 லட்சம் பேர்
திமுக முப்பெரும் விழாவுக்காக அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் 60 ஆயிரம் பேர் அமர்ந்து விழா நிகழ்ச்சிகளை காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் 1 லட்சம் பேர் நிகழ்ச்சியை காண்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதி, விழாவில் கலந்து கொள்வோருக்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

திராவிட மாடல்
இந்த முப்பெரும் விழாவின் போது 1968ஆம் ஆண்டு முதல் 2018 வரை, திமுக தொண்டர்களுக்கு கருணாநிதி எழுதிய 4041 கடிதங்களின் தொகுப்பு நூல்கள் வெளியிடப்பட உள்ளது. மேலும், 21,510 பக்கங்களில் கருணாநிதி எழுதிய அனைத்துக் கடிதங்களும் தொகுக்கப்பட்டு, 54 தொகுதிகளாக வெளியாக உள்ளது. மேலும் திராவிட மாடல் அரசு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய உரைகளின் மையக் கருத்தை தொகுத்து ஒரு புத்தகமும் வெளியிடப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications