அப்பாகிட்டயே போறோம்.. கடிதம் எழுதிவைத்து.. தாய், மகன் தற்கொலை.. திடுக்கிட்ட சாத்தூர்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், கணவர் இறந்த துக்கத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல், மனைவியும், அவரது மகனும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்வம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தையை தேடி செல்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு, இருவரும் உயிரை மாய்த்துக்கொண்டது, அவரது குடும்பத்தாரை மட்டுமின்றி, அப்பகுதியினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
குழந்தைகளுக்கு சிறு வயது முதலே தன்னம்பிக்கையும், எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் வாழவேண்டும் என்ற மன தைரியத்தையும் சொல்லிக் கொடுத்து பெற்றோர்கள் வளர்க்க வேண்டும். அவ்வாறு பிள்ளைகளுக்கு மனதைரியத்தை போதிக்காவிட்டால், எந்தவித துக்கத்தையும் தங்கிக்கொள்ள முடியாமல் விபரீத முடிவுகளை எடுத்து விடுவார்கள். அப்படியொரு சோகச் சம்பவம், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நிகழ்ந்துள்ளது.

ஓய்வு பெற்ற வங்கி பணியாளர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மனைவி சுபா. இந்த தம்பதிக்கு, முரளி பாரதி என்ற மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணம் ஆன நிலையில், அவர்கள் வெளியூரில் இருந்து வருகின்றனர். மென்பொறியாளரான மகன் முரளி பாரதி, வீட்டில் இருந்தபடி பணியாற்றி வந்துள்ளார். சாத்தூர் தனியார் வங்கியில் பணிபுரிந்து, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற சிதம்பரம், வீட்டில் இருந்து வந்த நிலையில், கடந்த மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார்.

தாயும், மகனும் தற்கொலை
இந்நிலையில், சிதம்பரம் உயிரிழந்த துக்கத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் கடந்த ஒரு மாத காலமாக தாய் மற்றும் அவரது மகன் மிகுந்த சோகத்தில் இருந்துள்ளனர். மேலும், யாரிடமும் சரியாக பேசாமல், சோகத்தில் இருவரும் உறைந்துள்ளனர். இந்நிலையில், உயிரிழந்த சிதம்பரத்தின் 30-வது நாள் நினைவு தினத்தை அனுசரித்து விட்டு, அவர் இறந்த துக்கம் தாங்க முடியாமல் தாயும், மகனும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை
வீட்டின் கதவு திறந்த நிலையில், தாயும், மகனும் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு, சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.

தனித்தனியே கடிதங்கள்
தற்கொலை செய்வதற்கு முன்பு, தாயும், மகனும் தனித்தனியே கடிதம் எழுதி வைத்துள்ளனர். அந்த கடிதத்தில், தங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. தந்தையை தேடி செல்கிறோம், யாரும் கவலைப்பட வேண்டாம் என உருக்கமாக கடிதம் எழுதியுள்ளனர். இதனையடுத்து, அந்தக் கடிதங்களை போலீசார் கைப்பற்றி, தாய் மற்றும் மகனின் தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தந்தையை பிரிந்த துக்கத்தில், அவர் இறந்த 30-வது நாளில் மகனும், தாயும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சாத்தூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications