கனடா + கிரீன்லாந்து + வெனிசுலா.. அமெரிக்காவுக்கு தான் சொந்தம்.. ‛மேப்' வெளியிட்ட டொனால்ட் டிரம்ப்
வாஷிங்டன்: அண்டை நாடுகளாக உள்ள கனடா, டென்மார்க்கின் கிரீன்லாந்து மற்றும் வெனிசுலா ஆகியவற்றை அமெரிக்காவுடன் சேர்த்து டொனால்ட் டிரம்ப் ‛மேப்' வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார். இதன்மூலமாக கனடா, கிரீன்லாந்து மற்றும் வெனிசுலாவை அமெரிக்காவின் ஒரு பகுதியாக கொண்டு வரும் முயற்சியை டிரம்ப் வெளிப்படுத்தி உள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. டிரம்ப் அதிபரானது முதல் தொடர்ந்து தலைப்பு செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்.

ஒவ்வொரு நாடுகளுக்கும் தனித்தனியாக வரி விதிப்பது, எதிரி நாடுகள் மீது தாக்குதல் நடத்துவது, அமெரிக்க குடியுரிமையில் மாற்றம் கொண்டு வருவது என்று தொடர்ந்து ஏதாவது ஒரு வகையில் தலைப்பு செய்திகளில் வருகிறார்.
இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், டொனால்ட் டிரம்ப், உலக தலைவர்களுடன் விவாதிப்பதும், அதன் அருகே உள்ள போர்டில் அமெரிக்காவின் வரைபடம் (மேப்) உள்ளது. அதில் அமெரிக்காவுடன் கனடா, டென்மார்க்கின் கிரீன்லாந்து மற்றும் வெனிசுலா உள்ளிட்ட நாடுகள் இணைக்கப்பட்டுள்ளது.
இது தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை இந்த மாதம் தொடக்கத்தில் டொனால்ட் டிரம்ப் தனது சிறப்பு படையை அனுப்பி நாடு புகுந்து அவரை கைது செய்தார். அதன்பிறகு தற்போது வெனிசுலாவை அமெரிக்கா கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது.
இதன் அடுத்தக்கட்டமாக டொனால்ட் டிரம்ப் டென்மார்க்கின் சுயாட்சி பகுதியாக இருக்கும் கிரீன்லாந்தை அபகரிக்க திட்டமிட்டு வருகிறது. இது ஒரு பனிப்பிரதேசமாகும். மொத்தம் 57 ஆயிரம் என்ற அளவில் மட்டுமே மக்கள் வசிக்கும் நிலையில் கிரீன்லாந்தை அமெரிக்காவிடம் டென்மார்க் விற்க வேண்டும் என்று டிரம்ப் கூறி வருகிறார்.
அமெரிக்காவின் பாதுகாப்புக்கு கிரீன்லாந்து மிகவும் முக்கியம். நாங்கள் இந்த கிரீன்லாந்தை கைப்பற்றாவிட்டால் சீனா அல்லது ரஷ்யா கைப்பற்றிவிடும் என்று டிரம்ப் கூறி வருகிறார். இதற்கு கிரீன்லாந்து மற்றும் டென்மார்க் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் ட்ரம்ப் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.
டென்மார்க் நாட்டின் ஒரு பகுதியாக கிரீன்லாந்து உள்ளது. இந்த கிரீன்லாந்து ‛நேட்டோ' அமைப்பின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த ‛நேட்டோ' அமைப்பில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் டென்மார்க்கும் உள்ளது. இதனால் டொனால்ட் டிரம்ப்பின் அறிவிப்புக்கு ‛நேட்டோ' அமைப்பில் உள்ள ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. இந்நிலையில் தான் அமெரிக்கா ‛நேட்டோ'வில் இருந்து வெளியேறவும், கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார். இது அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே தான் தற்போது டொனால்ட் டிரம்ப் தற்போது பகிர்ந்துள்ள போட்டோவில் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்பட பல தலைவர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொள்வது போல் உள்ளது. கடந்த 2025ம் ஆண்டில் டொனால்ட் டிரம்ப், உக்ரைன் போர் விஷயம் பற்றி ஐரோப்பிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அந்த போட்டோவை எடுத்து அதனருகே அமெரிக்கா உடன் கனடா, கிரீன்லாந்து, வெனிசுலா உள்ளிட்ட நாடுகளை சேர்த்து இருக்கும் இமேஜை சேர்த்து டிரம்ப் வெளியிட்டுள்ளார். இது சர்வதேச அரசியலில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
அதேபோல், டொனால்ட் டிரம்ப், கனடாவையும் அமெரிக்காவுடன் இணைப்பதில் ஆர்வமாக உள்ளது. அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. இந்நிலையில் தான் அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடாவை இணைத்து கொள்வதாக டிரம்ப் கடந்த ஆண்டு பதவியேற்ற சில வாரங்களிலேயே தெரிவித்தார்.
இப்படி அண்டை நாடுகளை அபகரிக்கும் முயற்சியில் டிரம்ப் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது கனடா, கிரீன்லாந்து மற்றும் வெனிசுலாவை அமெரிக்காவுடன் இணைத்து அவர் ‛மேப்' வெளியிட்டு இருப்பது உலக அரசியலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications